பாரதலக்‌ஷ்மன் கொலை வழக்கு: செப்டெம்பர் 08இல் தீர்ப்பு

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரதலக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. இதே வேளை இந்த வழக்கில் பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விடுத்த கோரிக்கை நீதிபதிகள் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வரின் கொலை தொடர்பில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா அடங்கலான 13 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை, மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

வழக்கின் மனுதாரர் தரப்பு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு என்பவற்றின் வாய்மூல சமர்ப்பிப்புக்கள் நேற்று நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் குழு இதனை அறிவித்தது. அடுத்த மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் இரு தரப்பினதும் எழுத்துமூல சமர்ப்பிப்புகளை முன்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேநேரம், சிங்கப்பூர் மவுண்ட் எலிசபத் வைத்தியசாலைக்கு சிகிச்சைபெறச் செல்வதற்கு அனுமதிக்குமாறு துமிந்த சில்வா சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தின் அனுமதியை கோரினார். எனினும், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறினார் எனக் கூறி அவருக்கு அனுமதிவழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலின்போது பாரதலக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வரை கொலை செய்தமை அடங்கலான 17 குற்றச்சாட்டுக்களின் பேரில் 13 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கில் 19ஆவது பிரதிவாதியான ஜனகபண்டார என்பவர் வழக்கு விசாரணையின் ஆரம்பம் முதலே தலைமறைவாகி இருந்ததால் அவர் இன்றியே வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. 2011 ஒக்டோபர் 8ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்றபோது முல்லேரியா வல்பொல சந்தியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரதலக்ஷ்மன் பிரேமச்சந்திர, மொஹமட் ஹசீம், எம்.குமாரசுவாமி மற்றும் தமித்த ஜயதிலக ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது வழக்கின் 11ஆவது பிரதிவாதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் காயமடைந்து நீண்டகாலம் சிகிச்சைபெற்றுவந்தார். பின்னர் இவரும் வழக்கில் மற்றொரு பிரதிவாதியாக இணைத்துக்கொள்ளப்பட்டார். துமிந்த சில்வா அடங்கலான 11 பிரதிவாதிகளுக்கும் எதிராக 2015 மார்ச் 3ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை மூன்று பேர் அடங்கிய நீதியரசர் முன்னிலையில் விசாரணை செய்ய பிரதம நீதியரசர் முடிவுசெய்திருந்தார். இதன்படி 2015 ஏப்ரல் 1ஆம் திகதி பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்செய்யப்பட்டது.

கடந்த வருடம் ஒக்டோபர் 12ஆம் திகதி வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டதோடு மனுதாரர் தரப்பில் பகுப்பாய்வு அறிக்கை அடங்கலாக 176 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இது தவிர மனுதாரர் தரப்பில் 48 சாட்சிகள் முன்னிறுத்தப்பட்டன.

நமது நிருபர் 

 


Add new comment

Or log in with...