இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு எதிர்ப்பு; மாகாண சபை முற்றுகை

 

RSM

இலங்கை கடலில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு எதிர்ப்பு

இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (12) செவ்வாய்கிழமை காலை வடமாகாண சபையை முற்றுகையிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றது.

இது தொடர்பாக வடபகுதி மீனவர்களின் ஆலோசனையை இலங்கை அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக குற்றம் சுமத்தியே வடமாகாண கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது கோரிக்கையை வடமாகாண சபை மீன்பிடி அமைச்சின் ஊடாக மத்திய அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இந்திய மீனவர்களின் இழுவைப் படகையும், உள்நாட்டு மீனவர்களின் இழுவைப்படகையும் முற்றாக தடை செய்யுமாறும், வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு யாழ். மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு, இயக்கம், மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், வளர்பிறை பெண்கள் அமைப்பு, பூந்தளிர் பெண்கள் அமைப்பு, வலி.வடக்கு பிரஜைகள் அமைப்பு, வடமராட்சி பிரஜைகள் அமைப்பு மற்றும் வலி.வடக்கு மீள்குடியேற்ற ஒன்றியம் ஆகியன ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(புங்குடுதீவு நிருபர் - பாறுக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...