குளிர்பானத்தில் மயக்கமருந்து? பலாத்காரம்? இருவர் கைது

 

RSM

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஹோட்டல் விடுதியில் குளிர் பானம் அருந்திய இரண்டு வெளிநாட்டு பெண்கள் திடீர் சுகயீனமடைந்து சம்பவம் தொடர்பில் அப்பெண்களுக்கு குளிர்பானம் வழங்கிய இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்கு பொலிசார் தெரிவித்தனர்.
 
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஹோட்டல் விடுதியில் குளிர் பானம் அருந்திய இரண்டு வெளிநாட்டு பெண்கள் திடீர் சுகயீனமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
கடந்த சனிக்கிழமை (09) இரவு இந்த ஹோட்டல் விடுதிக்குச் சென்ற பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 25 மற்றும் 23 வயதுடைய இரண்டு பெண்களுக்கு அந்த விடுதியில் கடமையாற்றும் இளைஞர்களினால் குளிர்பானம் வழங்கப்பட்டுள்ளது.
 
இதையடுத்து திடீர் சுகயீனமடைந்த இந்த இரண்டு வெளிநாட்டு பெண்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதையடுத்து இது தொடர்பில் விசாரணைகளை மேற் கொண்ட காத்தான்குடி பொலிசார் இந்த ஹோட்டல் உரிமையாளரையும் மற்றும் அங்கு கடமையாற்றும் இளைஞர் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நேற்று (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து, அவர்களை எதிர் வரும் 25ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா உத்தரவிட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த இரு வெளிநாட்டு பெண்களுக்கும் குளிர்பானத்தில் மயக்க மருந்து வழங்கப்பட்டு அவர்களை மயக்கமடையச் செய்து விட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாமென சந்தேகிப்பதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

ஆயினும் இது தொடர்பான மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெறவில்லையெனவும் இந்த இரண்டு வெளிநாட்டு பெண்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)

 


Add new comment

Or log in with...