எங்கள் காணிகளை எங்களுக்கே தாருங்கள்!

 

RSM

கிளிநொச்சி பரவிபாஞ்கான் மக்கள் தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு கோரி இன்று (09 மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். 

இன்று (09.07.2016)  காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பரவிபாஞ்சான் மக்களின் காணிவிடுவிப்புக்கான போராட்டம் பரவிபாஞ்சான் செல்லும் வீதி முன்றலில் மக்கள் அமர்ந்திருந்து தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு கோரி போரட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இப்போராட்டத்தில் குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் குடும்பமாகக் கலந்துகொண்டதோடு, தமக்கு ஒரு உறுதியான பதில் தரப்படாதுவிட்டால் இப்போராட்டம் இரவு பகலாக தொடரும் என பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்த நிலையில் பரவிபாஞ்சான் மக்கள் குடியிருப்புக் காணிகளில் இராணுவ முகாம்களை அரசாங்கம் அமைத்து அம்மக்களை அப்பகுதியில் மீளக்குடியமர விடாது தடுக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் அகதிகளாக வாழ்வதற்கு ஏற்ற இடமின்றி அவலப்படுகின்றார்கள்.

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தபோது பரவிபாஞ்சான் பகுதிக்கு மக்களை அழைத்துச் சென்று மக்களுடைய காணிகளையும் அதிலுள்ள வீடுகளையும் மக்களுக்குக் காண்பித்ததுடன் விரைவில் மக்களது காணிகள் மக்களிடம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியிருந்தார்.

காலங்கடந்த நிலையிலும் மக்களது காணிகள் மக்களிடம் கையளிக்கப்படாதமையால் மக்கள் மீண்டும் தமது காணிகளை தமக்குக் கையளித்து தாம் தமது சொந்தக்காணிகளில் வாழ்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதாகக் கூறப்படுகின்ற போதிலும் தாம் பல சிரமங்களை எதிர்நோக்கியபடி அவலம் நிறைந்த வாழ்க்கையையே வாழ்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

(சி. சிவேந்தன்)

 


Add new comment

Or log in with...