பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைப்பதற்கு த.தே.கூட்டமைப்பு தீர்மானம் | தினகரன்


பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைப்பதற்கு த.தே.கூட்டமைப்பு தீர்மானம்

 மகேஸ்வரன் பிரசாத்

வடமாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஓமந்தையிலா அல்லது தாண்டிக்குளத்திலா வடமாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்புக்குள் இரு நிலைப்பாடு காணப்படுகிறது. இந்த நிலையில், பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமைப்பு எம்பிக்களின் கலந்துரையாடலில் ஓமந்தையில் அமைக்கப்பட வேண்டும் என பல உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஓமந்தையில் ஒதுக்கப்பட்டிருக்கும் காணிகளைப் பார்வையிடுவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்பி செல்லவிருப்பதுடன், இவர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்திக்கவுள்ளார்.

200 கோடி ரூபா செலவில் அமைக்கப்படவிருக்கும் பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதா அல்லது தாண்டிக்குளத்தில் அமைப்பதா என்பது குறித்து கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையில் மாறுபட்ட கருத்து காணப்படுகிறது. இது குறித்து ஆராயும் நோக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் இரு இடங்களுக்கும் சமஅளவான விருப்பத்தைத் தெரிவித்தமையால் வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் எம்பிக்களின் விருப்பங்களைத் தனித்தனியே பெற்று முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கு ஒருவார கால அவகாசமும் வழங்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இருந்தபோதும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சுகவீனம் காரணமாக வராதமையால் கூட்டம் நடைபெற்றிருக்கவில்லை. இதன் பின்னர் நேற்றையதினம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது ஓமந்தையில் அமைக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு அமைய மாவை சேனாதிராஜா எம்பி ஓமந்தை காணியை சென்று பார்வையிடுவதுடன், அதன் பின்னர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து முடிவை அறிவிப்பது என தீர்மானிக்கப்பட்டதாக கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த எம்பிக்கள் குறிப்பிட்டனர். 


Add new comment

Or log in with...