100 கிலோ கேரள கஞ்சாவுடன் கற்பிட்டியில் ஏழு பேர் கைது | தினகரன்


100 கிலோ கேரள கஞ்சாவுடன் கற்பிட்டியில் ஏழு பேர் கைது

 

விசேட அதிரடிப் படையினர் அதிரடி

இந்தியாவிலிருந்து மீனவப் படகுகள் மூலம் இங்கு கொண்டு வரப்பட்டு கெப் வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான நூறு கிலோ கேரள கஞ்சாவுடன் ஏழு பேரைக் கைது செய்துள்ளதாக புத்தளம் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கல்பிட்டி கண்டக்குளி குடா பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை அதிகாலையில் கல்பிட்டி விஜய கடற்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் புத்தளம் விஷேட அதிரடிப்படையின் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவ்வாறு கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக விஷேட அதிரடிப் படையினர் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் நியமிக்கப்பட்ட கேரள கஞ்சா கொள்வனவு செய்பவரைப் போன்று வேடமிட்ட ஒருவரை உபயோகித்தே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் பெரேராவின் ஆலோசனையின் பேரில் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாமின் கட்டளையிடும் அதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பெர்னாண்டோவின் தலைமையிலான சுமார் 20 அதிரடிப்படையினர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவுடன் கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒபப்டைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் விஷேட நிருபர் 


Add new comment

Or log in with...