நுவர குளத்தில் T56 துப்பாக்கி மீட்பு

 

Rizwan Segu Mohideen

றிஸ்வான் சேகு முகைதீன்

 

குற்றச்சம்பவம் ஒன்றை புரிந்த பின்னர், வீசிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் ரி56 வகை துப்பாக்கி ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அநுராதபுரம் நுவர குளத்திலிருந்து குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமை பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது.

அநுராதபுர நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களால் பிஹிரி ஹொரவ்வ பிரதேசத்தில், சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று (04) அவ்வாறு மேற்கொள்ளப்படும் சுத்தப்படுத்தும் நடவடிக்கையின்போது, அதன் ஊழியர் ஒருவர் முகம் கழுவுவதற்காக குறித்த குளத்தில் இறங்கியபோது, இரும்புப் பொருள் ஒன்று தென்படுவதை அவதானித்துள்ளார்.

இதனை அடுத்து, அப்பொருள் குறித்து ஆராய்ந்தபோது, அது ரி56 வகை தன்னியக்க துப்பாக்கி என தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, இது குறித்து அநுராதபுரம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த ஆயுதத்தை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த ஆயுதத்தை பரீட்சித்த பொலிஸார் அதன், ரிசிவிங் கவர், போல்ட், மெகசின் போன்ற பகுதிகள் அதிலிருந்து கழற்றப்பட்டு காணப்பட்டதாக தெரிவித்தனர். 

குறித்த ஆயுதத்தின் இலக்கத்தை பரீட்சித்து, அது பாதுகாப்பு பிரிவுக்குச் சொந்தமானதா என உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்த பொலிஸார், அதன் ஏனைய பாகங்கள் நீரில் காணப்படுகின்றதா என தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும், இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


Add new comment

Or log in with...