'மலைகளைப் பார்த்ததும் எமக்குப் பயம் வருகிறது' | தினகரன்

'மலைகளைப் பார்த்ததும் எமக்குப் பயம் வருகிறது'

அரநாயக்க சமசர மலைப் பகுதி ஒரு காலத்தில் இயற்கையின் வனப்புக்கும், குளிர்ச்சிக்கும் பஞ்சமில்லாத ஒரு செழிப்பான பகுதி. இதன் அடிவாரத்தில் தேயிலை, கராம்பு, மிளகு என்று பயிர்ச்செய்கைகளை தமது சீவனோபாய தொழிலாக செய்து ​ெகாண்டு ஏலங்கபிட்டி, சிறிபுர, பல்லேபாக என்ற மூன்று கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

எனினும் 2016.05.17 ஆம் திகதி இக்கிராமங்களின் ஆயுளின் கடைசி நாள். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சரியாக மாலை 5.15 மணியளவில் சமசர மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலசரிவினால் கணப்பொழுதில் மூன்று கிராமங்களும் மண்ணோடு, மண்ணாய் புதையுண்டு போய் விட்டன. இதில் மக்களின் உழைப்பில் உருவான சொத்துக்கள் அனைத்தும் முற்றாக சேதமடைந்ததுடன் , ஒரு சிலரே தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.

இந்நிலையில், மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டு ஒரு மாதம் பூர்த்தியடைந்த நிலையில் இப்பகுதிக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தோம்.

எமது சிந்தையில் மலை சரிந்து குடியிருப்புகளை நோக்கி வரும் போது இங்குள்ள மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்ெகாள்ள என்னவெல்லாம் பாடுபட்டிருப்பார்கள், எப்படியெல்லாம் கூச்சலிட்டிருப்பார்கள் என்ற எண்ணங்கள் ஒருபக்கம் ஓடிக் ெகாண்டே இருக்க, சமசர மலைப்பகுதியை நோக்கி நாம் முன்னேறினோம். இதன் போது இயற்கையின் பேரழிவின் உச்சத்தை எம்மால் காணக் கூடியதாகவிருந்தது.

அனர்த்தம் இடம்பெற்ற தினங்களில் சேறும் சகதியுமாய் இருந்த மண்மேடுகள் இப்போது இறுகிய நிலையிருந்தன. ஆங்காங்கே மனித இருப்பிடங்களும்,அவர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும் அப்பகுதியில் இருந்ததை பிரதிபலிக்கக் கூடிய சிறு சிறு தடயங்கள் காணப்பட்டன.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சனநாடமாட்டம் பெரிதாக இல்லாமல் ஒரு வித மயான அமைதியை உணரக் கூடியதாகவிருந்து. மலையின் நடுப்பகுதியில் யாரோ ஒருவரினால் குரங்கு ஒன்றின் மண்டையோடு தடி ஒன்றில் தொங்கவிடப்பட்டிருந்தது. அது அந்த இடத்துக்கு பொருத்தமானதாகவே இருந்தது.

இதனைத் தொட ர்ந்து நாம் பாதிக்கப்பட்ட மக்களின் இன்றைய நிலை, அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் என்பன தொடர்பாக எமது கவனத்தைச் செலுத்தினோம்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் ஆத ங்கம் இவ்வாறு இருந்தது.

"பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் எங்கள் முகத்தை படம் பிடித்துக் காட்டுவதனால் மட்டும் எங்களுடைய துயரம் முடிவதில்லை. இதனால் எங்களுடைய கஷ்டம் இன்னும் அதிகரிக்கவே செய்கின்றது. மீண்டும் எங்களை மலைப் பகுதிகளில் எந்தக் காரணம் கொண்டும் குடியமர்த்தாதீர்கள்.

மலைகளைப் பார்த்தாலே பயமாகவிருக்கின்றது. எனது கணவனுக்கும் ஒரு மகனுக்கும் என்ன நடந்தது என்றே தெரியாது. பெரும்பாடு பட்டு நானும் இளைய மகனும், மகளும் தப்பித்து ஓடிவந்தோம். அதுவும் எனது மகளின் நீளமான தலைமுடி அலுமாரியில் இறுகி விட்டது. பின் அதை வெட்டியேனும் அவளை அழைத்து வர வேண்டிய நிலையில் அன்று இருந்தோம். ஆனால் இன்று இழப்புகளை துயரத்தை தாங்கிக்ெகாள்ளும் வலிமையில்லை. ஏன் உயிர் பிழைத்தோம் என்று நினைக்கின்றோம்."

இது ஒரு இளம் பெண்ணின் விரக்தி கலந்த வார்த்தைகளாகும்.

"பலருக்கு அவர்களின் உறவினர்களின் முகத்தைக் கூட பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் எனது மகனின் சடலம் மறுநாள் எனக்கு கிடைத்தது. மகனின் இறுதிக் கிரியைகளை உறவினர் வீடொன்றில் வைத்து எந்தவித குறையுமில்லாது செய்தோம்.சடலத்தை அடக்கம் செய்தோம் " என்கிறார் கவலையுடன் வயதான தாய் ஆர்.பி.லீலாவதி.

" என்னுடைய சித்தப்பாவின் குடும்பத்திலிருந்த 4 பேருமே மண்சரிவில் புதையுண்டு போனார்கள். இராணுவத்தினரால் சடலங்களை தேடும் பணியின் போது அவர்களின் சடலங்கள் கிடைக்கவில்லை. தேடும் பணிகள் நிறுத்தப்பட்டவுடனே அவர்களுடைய சடலங்கள் நான்கும் கிடைக்கப் பெற்றன. எனினும் இன்று அரசாங்கத்தினால் கொடுக்கும் நஷ்டஈடு பணத்தை பெற்றுக்ெகாள்ள சித்தியின் சகோதர்கள் நான் தான் சடலத்தை கண்டெடுத்தேன் என்று சண்டையிட்டுக்ெகாள்கின்றார்கள் " என்கிறார். குணரட்ண.

"பிள்ளைகள் இங்கிருந்துதான் கிராமத்திலுள்ள பாடசாலைக்குப் போகின்றார்கள். அவர்களுக்கு தேவையான சீருடை, புத்தகங்கள் எல்லாவற்றையும் அரசாங்கத்தினால் கொடுத்திருக்கின்றார்கள். பஸ்சுக்கு பாஸ் ஒன்றினை தந்திருக்கின்றார்கள் " என்கிறார் குடும்பத் தலைவர் ஒருவர்.

"இனி நடந்தவற்றைப் பேசிப் பயனில்லை. எங்களுக்கு கலுகல பகுதியில் வீடு அமைத்து தருகின்றோம் என்று கூறுகின்றார்கள். ஆனால், அது எவ்வாறான இடம் என்று எனக்குத் தெரியாது. அதுவும் மலைப் பிரதேசம் என்று இங்குள்ள சிலர் கூறுகின்றார்கள். நாங்கள் ஒருவழியாய் சமசர கந்தையிலிருந்து தப்பித்து வந்து விட்டோம. மீண்டும் வேறு எங்காவது போய் குடியேறி, மீண்டும் ஒரு ஆபத்தில் சிக்கிக்ெகாள்வோமோ தெரியாது" என்கின்றார் வயதான தாயொருவர்.

"மிளகு, கராம்பு என்பவற்றை பயிர் செய்து வறுமையின்றி வாழ்ந்தோம். வேறு எங்கு குடியேறினால் வருமானத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை" என்கின்றார் புஷ்பலதா.

"நாங்கள் சமசரகந்தை, பல்லேபாக கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மேலிருந்து மலை சரிந்து ​ெகாண்டு வரும் போதே நானும் எனது பிள்ளைகள் மூவரும், மாமியாரும் உயிரைக் கையில் பிடித்துக்ெகாண்டு ஓடோடி வந்து விட்டோம். எனினும், எனது கணவர் எங்களை பாதுகாப்பாக செல்லும்படி சொல்லி விட்டு மற்றவர்களுக்கு உதவி செய்ய விரைந்தார்.

அதன் பின்னர் மறுநாள் காலை மண்மேடுகளிருந்து பிணமாகவே மீட்கப்பட்டார். முகாமில் எங்களுக்கு எந்த குறையுமில்லை.நேரத்துக்கு உணவு, தேநீர் என்று எல்லாம் கிடைக்கின்றது. ஆனால் எனது பிள்ளைகள் மூவரும் சிறியவர்கள். அவர்களை வைத்துக்ெகாண்டு இனி நான் என்ன செய்ய போகின்றேன் என்று எனக்கு தெரியவில்லை" என்கிறார் தனது 9 மாத கைக்குழந்தையை கையில் ஏந்தியவளாக இளம் பெண் கீர்த்தாஞ்சலி .

அரநாயக்க பிரதேச செயலக தரவுகளின்படி அரநாயக்க பகுதியில் ஆரம்பத்தில் மண்சரிவு அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்தவர்கள், மண்சரிவு அவதானத்துக்குரிய பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்கள் என 5000 இற்கு மேற்பட்ட மக்கள் 23 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.

ஆனால், அனர்த்த முகாமைத்துவத்தின் ஆய்வு அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் முகாம்களின் எண்ணிக்கை 11 ஆகக் குறைக்கப்பட்டது. இன்று இதில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 1722 பேர் இருக்கின்றார்கள். அதுவும் அரநாயக்க பகுதியில் 20 கிராமசேவகர் பிரிவுகள் அதிக மண்சரிவு அவதானத்துக்குரிய பகுதிகளாக (High Risk Area) காணப்படுகின்றன.

முகாம்களில் சிறந்த சுகாதார சேவைகள் நடைபெறுகின்றன. அங்குள்ள அதிகாரிகளின் அனுமதியின்றி முகாம்களுக்குள் செல்ல முடியாது. அதுமட்டுமன்றி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அதிக அவதானத்துக்குரிய பகுதிகளில் வாழ்பவர்களுக்கும் பாதுகாப்பான இடங்களில் காணிகள் பெறப்பட்டு வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

இப்போதைக்கு கலுகல கிராம சேவகர் பிரிவுக்குச் சொந்தமான தேவத்கம தோட்டத்தில் வீடுகளை அமைக்கத் தீர்மானித்துள்ளோம். இதில் பெரும்பாலான பகுதி காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு ( SRC) சொந்தமானது. எஞ்சிய பகுதிகளே தனியார் ஒருவருக்கு சொந்தமானவை. எனவே அவற்றை பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளோம்.

முதலில் 8 ஹெக்டயர் நிலப்பரப்பை துப்புரவு செய்து தற்காலிக கூடாரங்களை அமைக்கத் தீர்மானித்துள்ளோம். உதவிகளும் அதிகமாகவே கிடைக்கப் பெறுகின்றன. அரசசார்பற்ற நிறுவனங்கள் பல தற்காலிக கூடாரங்களை அமைக்க உதவிகள் செய்ய முன்வந்துள்ளன.

இவ்வாறு பிரதேச செயலக அதிகாரிகள் கூறினர்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவிகளும் மக்களுக்குக் கிடைக்கின்றன. அனர்த்த நிலைமைகளின் பின்னர் இலங்கை செஞ்சிலுவை சங்கம் எவ்வாறான உதவிகளை மக்களுக்கு வழங்குகின்றது என்பது தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கத்தின் கேகாலை மாவட்ட கிளையின் சிரேஷ்ட அதிகாரி ஆனந்த உயவட்டவிடம் வினவிய போது, "முதலில் அரநாயக்க பகுதியில் பாதுகாப்பான இடங்களைத் தெரிவு செய்து, வெளிநாட்டு உதவிகளுடன் அரசாங்கத்தினால் 25 தற்காலிக கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

நாங்கள் அதற்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்களை வழங்கவுள்ளோம். அதுமட்டுமின்றி, தற்காலிக கூடாரங்களை நல்ல முறையில் பேணுவதற்கும்,மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கும் எமது நிறுவனத்தின் முகாமைத்துவ முகாம்களை தற்காலிக கூடாரங்கள் அமையும் இடங்களில் அமைக்கவுள்ளோம்.

தற்போது அதில் நியமிக்கவுள்ளவர்களுக்கு முதலுதவி போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமையவே இந்தக் கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளன. நாங்கள் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கவுள்ளோம். எங்களுடைய செயற்பாடுகள் அனைத்தும் அரசாங்கத்துடன் இணைந்ததாகவே அமைகின்றன. ஆகவே அனர்த்த நேரங்களில் ஆலோசனைகளை வழங்கவும் நாங்கள் தவறுவதில்லை" என்றார் அவர்.

முன்கூட்டிய அனர்த்த எச்சரிக்கை முறை (Early Warning System )

முன்கூட்டிய அனர்த்த எச்சரிக்கை முறை பற்றி கேகாலை மாவட்டத்தின் இடர் முகாமைத்துவ அமைப்பின் பிரதான அதிகாரி மகேந்திரன் தெரிவிக்கையில் "கேகாலை மாவட்டம் அதிக மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள ஒரு பிரதேசமாகும். எனவே மண்சரிவு அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் மக்களை தெளிவுபடுத்தும் முகமாக பிரதேச ,கிராமிய, மாவட்ட மட்டங்களில் வேலைத் திட்டங்களை வகுத்துள்ளோம்.

இலங்கையைப் பொறுத்த வரை இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் முறையானது பெரும்பாலும் தேசிய கட்டடட ஆய்வு அமைப்பின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த அமைப்பினரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு எமக்கு கிடைக்கப் பெற்றவுடன் அதற்கமைய பிரதேச சபைகளுக்கு அறிவுறுத்துவோம். அவர்கள் அந்தந்த கிராம சேவகர் பிரிவுகளுக்கு தகவல்களை வழங்குவர்.அவர்கள் முலமே அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது.

இவ்வாறே அனர்த்த முன்னெச்சரிக்கை முறை நடைமுறைப்படுத்தப்படும் அரநாயக்க சமரச மலைப் பகுதியைப் பொறுத்த வரை மண்சரிவு ஏற்படக் கூடிய எந்தவொரு அறிகுறிகளும் அதற்கு முன்னர் தென்படவில்லை. அப்படித் தென்பட்டிருந்தால் அப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முன்கூட்டியே மக்களை வெளியேற்றியிருக்க முடியும்.

அதுமட்டுமின்றி ஏனைய நாடுகளைப் போல் மண்சரிவு அனர்த்தம் தொடர்பாக முன்னறிவித்தல் வழங்கக் கூடிய இயந்திரங்கள் பொருத்தப்படுமாகவிருந்தால் இன்னும் இலகுவாகவிருக்கும். எனவே இது தொடர்பான உபகரணங்கள் போதாமையும் இலங்கையைப் பொறுத்த வரை பெரும் பிரச்சினையாகவிருக்கின்றது.

எதுஎவ்வாறாயினும், இயற்கையின் கோரத் தண்டவத்தில் தமது உறவுகளையும், உடைமைகளையும் இழந்து எதிர்காலம் பற்றிய கனவுகள் இன்றி வாழும் இம்மக்களின் வாழ்வை மீண்டும் சரியான முறையில் மீள்கட்டியெழுப்ப வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

வசந்தா அருள்ரட்ணம்


Add new comment

Or log in with...