பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க துரிதம் காட்ட வேண்டும் | தினகரன்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க துரிதம் காட்ட வேண்டும்

 

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும் அதே சமயம், கைதுகள் மற்றும் தடுப்பு வைப்புக்களில் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களை பின்பற்றவேண்ட​மென மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் ஆரம்பகட்ட செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், மிகவும் மந்த கதியிலேயே இதற்கான நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை நீக்கும்வரை பயங்கரவாதத் தடைச்சட்டம் செயற்படாது என்பதை அறிவிப்பதுடன், எந்த குற்றச்சாட்டுக்களும் இன்றி அல்லது வழக்கு விசாரணைகள் இன்றி ஒருவரை தடுத்துவைக்க முடியாத குற்றவியல் சட்டங்களை கையாளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்வரை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியும் என இலங்கை அரசாங்கத்தால் நம்பவைக்க முடியாது என்றும் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தின் ஆட்சி மற்றும் குற்றவாளிகளுக்கு மதிப்பளித்தல் என்ற அடிப்படை மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சாவகச்சேரியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தபோதிலும், உரிய நடவடிக்கை இதுவரையில் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கு ஆரம்பகட்ட நடவடிக்கைகள் சிலவற்றில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் உள்ள சிலர் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிலர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதும் இந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சட்டத்துக்கு முரணான வகையில் தடுத்துவைத்துள்ளவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 


Add new comment

Or log in with...