ஜனாதிபதி மாளிகை பொதுமக்கள் பார்வைக்கு | தினகரன்


ஜனாதிபதி மாளிகை பொதுமக்கள் பார்வைக்கு

 
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
இலங்கை வரலாற்றில் முதன் முறை
 
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அதனை ஒட்டிய கோர்டன் பூங்கா ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
குறித்த வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
 
இலங்கை வரலாற்றில், 29 ஆளுநர்கள் மற்றும் 6 ஜனாதிபதிகள், தங்களது உத்தியோகபூர்வ கடமைகளுக்காகவும், வசிப்பிடமாகவும் பயன்படுத்திய உத்தியோகபூர்வ ஜனாதிபதி இல்லமான ஜனாதிபதி மாளிகை, மக்கள் பார்வைக்காக விடப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அந்த வகையில், நாளை ஜூன் 08 முதல் ஜூன் 14 வரையான ஏழு நாட்களுக்கு, ஜனாதிபதி இல்லத்தை, மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு நாளை (07) பிற்பகல் 2.00 மணிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
 
யுத்தம் நிறைவடைந்த பின்னரும், முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில் ஜனாதிபதி மாளிகை மற்றும் அதனைச் சூழவுள்ள வீதிகள் யாவும் அதி பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ளடக்கப்பட்டிருந்தது.
 
ஆயினும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பதவியேற்றதன் பின்னர் குறித்த பகுதிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
அத்துடன், ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவது தொடர்பான மேலதிக விபரங்களை 077 3086 366 எனும் தொலைபேசியில், ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் விமர்ஷன சத்துரங்கவை தொடர்புகொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என ஜனாதிபதி ஊடகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Add new comment

Or log in with...