ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தத் திருவிழா | தினகரன்


ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தத் திருவிழா

 

நற்கருணைத் திருவிழாவினை ஆங்கிலத்தில் (Corpus Christy).. என அழைப்பர். அதாவது ‘கிறிஸ்துவின் உடல்’ என அது பொருள்படும்.

ஆண்டவர் இயேசுவின் திருவுடலும் திரு. இரத்தமும் உண்மையாகவே அப்பத்தின் வடிவில் இருக்கிறது என்பதை வலியுறுத்தும் ஒரு முக்கிய விழாவாக இது கருதப்படுகின்றது.

நமதாண்டவரின் போதனைகளில் முக்கியமான ஒன்று அவர் தம் உடலை நாம் உண்ணக் கொடுத்தார் என்பதாகும். தன்னை வானிலிருந்து இறங்கி வந்த வாழ்வளிக்கும் அப்பமாக விபரித்தார். இது பிதட்டலாகவும் யூதர்கள் இவரை எதிர்ப்பதற்கு ஒருபெரும் காரணமாகவும் இருந்தது. எனினும் இதனை இயேசு வெறும் பேச்சுக்காகவோ உவமானமாகவோ கூறவில்லை.

ஏனென்றால் இந்தப் போதனை மிதமிஞ்சிப் போகிறது என அவர் சீடர்களில் பலர் விலகிப் போனதாகக் காண்கிறோம். அப்போது ஆண்டவர், ‘இதைச் சும்மா பேச்சுக்குத்தான் சொன்னேன்’ என்று அவர்களோடு சமரசம் செய்யவில்லை. தன் கூற்றிலிருந்து இம்மியும் மாறவில்லை.

மாறாக பன்னிருவரையும் பார்த்து, “நீங்களும விலகிச் செல்லப்போகிறீர்களா?” என்று கேட்டார். அருளப்பர் 6ம் அதிகாரத்தில் இயேசுவின் உறுதி தெட்டத் தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றது. அதுபோல பவுலும் நற்கருணையைத் தகுதியாக உட்கொள்ளாதவர்கள் அவருடைய உடலையும் இரத்தத்தையும் அலட்சியம் செய்கிறார்கள் என்கிறார். எனவே நற்கருணையில் அப்பத்தின் வடிவில் ஆண்டவருடைய பிரசன்னம் அசைக்க முடியாததொரு சத்தியமாக இருக்கிறது. கடந்த 2000 ஆண்டு காலமாக இதில் திருச்சபையும் எவ்வித சமரசமும் செய்யாதிருக்கிறது. 


Add new comment

Or log in with...