உறவுகளுக்கு அர்த்தம் கற்பிக்கும் மரியாள் – எலிசபெத் சந்திப்பு | தினகரன்


உறவுகளுக்கு அர்த்தம் கற்பிக்கும் மரியாள் – எலிசபெத் சந்திப்பு

 

மேமாதத்தில் கத்தோலிக்கத் திருச்சபை முக்கிய பல திருவிழாக்களைக் கொண்டாடுகிறது.

பரிசுத்த ஆவியானவர் திருவிழா, ஆண்டவரின் விண்ணேற்பு திருவிழா மூவொரு கடவுள் திருவிழா, ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழா நற்கருணைப் பெருவிழா என திருவிழாக்கள் கொண்டாடப்படுவதும் மாதாவிற்காக அர்ப்பணிக்கப்பட்டு முழு மே மாதமும் வணக்க மாதமாக அனுசரிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

பாஸ்காக் காலத்தின் ஆறாவது ஞாயிறன்று இம் மாதம் பிறந்தது. இம் மாதத்தில் மேற்குறிப்பிட்ட திருவிழாக்களோடு திருத்தூதர் மத்தியாஸ் உட்பட பல புனிதர்களின் திருவிழாக்களும் அனுஷ்டிக்கப்பட்டன. இன்றைய தினத்தில் புனித கன்னி மரியாள் எலிசபெத் அம்மாளைச் சந்தித்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதற்கிணங்க இம் மாதம் முழுவதும் கத்தோலிக்கர்களாகிய எமக்கு மிக முக்கியமாகிறது.

மரியன்னை எலிசபெத்தம்மாளை சந்தித்த சம்பவமானது திருச்சபையில் முக்கியத்துவமளித்து கௌரவிக்கும் நிகழ்வாகிறது.

யூதேயாவின் மலைநாடொன்றிற்கு புனித மரியாள் சென்று எலிசபெத்தின் வீட்டையடைந்து கருவுற்றிருந்த அவரை வாழ்த்திய போது எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை மகி்ழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.

அதன்போது எலிசபெத் தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் மரியன்னையைப் பார்த்து “பெண்களுக்குள் நீர் ஆசீர்வதிக்கப் பெற்றவள். “உம் திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே” என்றார். இதனை அடிப்படையாகக் கொண்டதே” அருள்நிறைந்த மரியே என்ற நாம் அனுதினம் செபிக்கும் செபமாகும்.

பரிசுத்த வேதாகமத்தில் இந்த சந்திப்பு இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“மரியா புறப்பட்டு யூதேயா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். “மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.

அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவள்: உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் என்றார்.

அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீடபராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினதும் என்னைப் பேறுபெற்றவர்” என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்: உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்: தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். (53.... 56)

இந்தச் சந்திப்பில் பரிசுத்த ஆவியானவரின் செயற்பாடு காணப்படுகிறது. கர்ப்பிணியாக இருந்த அன்னை மரியாள் தமது அசௌகரியங்களைப் பாராது இன்னொரு கர்ப்பிணியான எலிசபெத்தைச் சந்திக்கச் செல்கின்றார். இது உறவுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

அதேபோன்று, ஒருவரை ஒருவர் வாழ்த்தும் போது அந்த வாழ்த்து நம்மில் ஏற்படுத்தும் மாற்றங்களின் தன்மையையும் இந்த சந்திப்பு எமக்கு எடுத்துரைக்கிறது. இக்காலத்தில் ஒருவரை வாழ்த்துவது போற்றுவது என்பது மிக அரிதாகிவிட்டது. அதுவும் நேரில் சென்று மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு பிறரை வாழ்த்துவது அதிலும் அரிது.

எமது எதிரிகளைக் கூட நாமே தேடிச் சென்று அவரிடம் பேசுவதும் மன்னிப்புக் கேட்பதும் அவரில் மாற்றத்தை ஏற்படுத்துவது உறுதி. இத்தகைய சந்திப்புகள் அன்றைய தினத்தில் மட்டுமன்றி முழு வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதும் உண்டு.

- எல். செல்வா... 


Add new comment

Or log in with...