2015.01.07 காமினி செனரத்தின் சாரதி ரூ.1260 கோடி மீளப்பெற்றது ஊர்ஜிதம்

விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்

ஒப்பந்த கொலையாளிகளை இந்தியாவில் இருந்து அழைத்து வரும் திட்டமும் அம்பலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தின் பொருளாளராக செயற்பட்ட காமினி செனரத் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பணம் கைமாறியமை மற்றும் இந்தியாவிலிருந்து படகுமூலம் கூலிக் கொலையாளர்களை அழைத்துவந்து தம்மை கொல்ல சதித்திட்டம் தீட்டியமை குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று தெரிவித்தார்.

காமினி செனரத்தின் கொடுக்கல் வாங்கல்களில் பங்குவகித்த அவருடைய சாரதி சரத் திசாநாயகவிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர் வழங்கிய வாக்குமூலத்தின் ஊடாக பல்வேறு தகவல்கள் அறியக் கிடைத்திருப்பதாக அமைச்சர் கூறினார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11)அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. பாரிய மோசடியுடன் தொடர்புபட்ட முக்கிய சாட்சியாளர் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

கடந்த 2015 ஜனவரி மாதம் 7ஆம் திகதி காமினி செனரத் நான்கு காசோலைகளை வழங்கி டவரில் உள்ள வங்கியொன்றில் காசாக மாற்றி வருமாறு கூறியுள்ளார். இதற்கமைய குறித்த சாரதி 1260 கோடி ரூபா பணத்தை வங்கியில் பெற்று அவற்றை உரப்பைகளில் கட்டி ரொஸ்மிட் பிளேசில் உள்ள வீட்டில் காமினி செனரத்திடம் கையளித்துள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை சாரதி வழங்கியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அது மாத்திரமன்றி தேர்தலின் பின்னர் சென்னையிலிருந்து படகுமூலம் கூலிக் கொலையாளர்களை அழைத்துவந்து தம்மைக் கொல்வதற்கு தீட்டப்பட்டிருந்த சதித்திட்டங்கள் குறித்த தகவல்களையும் காமினி செனரத்தின் சாரதி வாக்குமூலமாக வழங்கியிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார்.

மோசடியான நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் தான் ஈடுபடவில்லையென முன்னாள் ஜனாதிபதி நெஞ்சில் அடித்துக் கூறினாலும் அவர்களின் மோசடிகள் ஒன்றன் பின் ஒன்றாக புலப்படுகின்றன. கடந்த 2015 ஜனவரி 7ஆம் திகதி மஹிந்த குடும்பத்தின் பொருளாளராகச் செயற்பட்ட காமினி செனரத் தனது சாரதியிடம் 4 காசோலைகளை வழங்கி டவரில் உள்ள வங்கியொன்றில் அவற்றை பணமாக மாற்றிவருமாறு கூறியுள்ளார்.

அந்த காசோலைகளின் பெறுமதி 1260 கோடி ரூபா. அவ்வளவு தொகை பணம் வங்கியினால் வழங்குவது சட்டத்துக்கு முரணானது. பணத்தைப் பெற்று அவற்றை உரப்பைகளில் கட்டிஎடுத்துச் சென்று ரொஸ்மிட் பிளேசில் உள்ள வீடொன்றில் காமினி செனரத்திடம் சாரதி கையளித்துள்ளார். வீட்டுக்குள் பணம் எடுத்துச்செல்லப்பட்ட பின்னர் என்ன நடந்தது என தனக்குத் தெரியாது என்று குறித்த சாரதி பொலிஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அவ்வாறு எடுத்துச் சென்ற பணத்தில் ஒரு கோடியை ஒழித்துக் கொண்டதை ஒப்புக்கொண்டிருக்கும் காமினி செனரத்தின் சாரதி, இது தொடர்பான விசாரணைகளை முடக்குவதற்கு அதிகாரிகளுக்கு எவ்வாறு இலஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற சகல விடயங்களையும் ஒன்றுவிடாமல் கூறியுள்ளார்.

ஒரு கோடி பணத் திருட்டுத் தொடர்பில் குறித்த சாரதியிடம் குற்றப் புனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தியுள்ளது. காமினி செனரத்திடம் பணியாற்றிய ஒருவரின் முன்னிலையிலேயே அந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. அவருடைய சமிக்ஞைக்கு அமையவே விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. அதாவது காமினி செனரத்துக்கு ஆதரவான ஒருவரின் முன்னால் விசாரணை நடத்தும் அளவுக்கு சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்கள் செயற்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் பொலிஸார் தன்மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக காமினி செனரத்தின் சாரதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைக்காக பல நிறுவனங்களை அமைத்துள்ள போதும், ஒரு நிறுவனத்திடமும் அகப்படாமல் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சென்று அவர் முறையீடு செய்துள்ளார். இது இயற்கையாக நடைபெற்ற ஒரு நிகழ்வு.

அவர் முறைப்பாடு மேற்கொண்ட பின்னர், ஒரு கோடி ரூபா தொடர்பான முறைப்பாட்டை 5 லட்சம் ரூபாவாகக் குறைப்பதாக கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது மாத்திரமன்றி பசில் ராஜபக்‌ஷவினால் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் வீடுகள் குறித்த தகவல்கள் அவருக்கு கட்டடக்கலைஞராக செயற்பட்ட முதித்த ஜயக்கொடி என்பவரால் வெளியாகியுள்ளன. ஏதாவது சொத்து அல்லது வீடு கொள்வனவு செய்யப்பட்டால் பசில் ராஜபக்‌ஷவின் மனைவியின் கோரிக்கைக்கு அமைய சுமணதாசவே பூஜைகள் செய்துள்ளார். இது பற்றிய சகல தகவல்களும் வெளியாகியுள்ளன.

இவ்வாறு பாரிய மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான தினமான மேதினத்தில் சுத்தமானவர்கள் போன்று கூறுகின்றனர்.

தமது பலம் மற்றும் பணம் என்பவற்றைக் கொண்டு விசாரணைகளை முடக்கிவிடலாம் என்று நம்புகின்றனர். விசாரணைகளை யாராவது முன்னெடுத்தால் "நாம் விரைவில் ஆட்சிக்கு வருவோம். அதன் பின்னர் பார்த்துக்கொள்கிறோம்" என மிரட்டுகின்றனர். மறு பக்கத்தில் விசாரணைகளை கைவிடுவதற்காக கொள்ளையடித்துள்ள பணத்தை வழங்கி வருகின்றனர். இந்த இரண்டையும் வைத்துக்கொண்டே இவர்கள் விசாரணைகளை முடக்கப் பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொலை முயற்சி

அதேநேரம், எம்மைக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்டிருந்த சதித்திட்டங்கள் பற்றிய விபரங்களையும் செனரத்தின் சாரதி வெளிப்படுத்தியுள்ளார். சென்னையிலிருந்து படகுமூலம் ஆட்களை அழைத்துவந்து என்னைக் கொல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அப்படி நடந்திருந்தால் கொல்வதற்கான ஒப்பந்தம் கொடுத்தவர்கள் யார் என்பது கூட தெரியாமல் போயிருக்கும். நாம் எமது உயிரைப் பணயம் வைத்தே கடந்த அரசிலிருந்து வெளியேறினோம். எமக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் பற்றி குடும்பத்துக்கு ஏற்கனவே கூறியிருந்தோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியாளர்களுக்கு உதவும் வகையில் செயற்படும் அதிகாரிகள் இன்னமும் இருக்கின்றனர். நிதிமோசடி விசாரணைப் பிரிவில் சில்லறை விசாரணைகள் மாத்திரமே நடத்தப்படுகின்றன.

பாரிய விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை. இதனாலேயே நிதி மோசடிப் பிரிவை பலப்படுத்துவேன் என புதிய பொலிஸ்மா அதிபர் கூறியிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். இது அரசியல் ரீதியான பழிவாங்கல் அல்ல.

"நாமல், பசில் எல்லோரையும் சிறைக்குச் செல்லத் தாயாராக இருக்குமாறு கிருலப்பனைக் கூட்டத்தில் மஹிந்த கூறினார். அவர்கள் தயாராக இருந்தாலும் கைதுசெய்வதற்கு நம்மவர்கள் தயாராக இல்லை" என்றார் அமைச்சர் கிண்டலாக.

இது விடயத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க: மோசடியில் ஈடுபட்டவர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் கொள்ளையடித்துள்ளனர்.

இவர்களுக்கு எதிரான சாட்சிகளை திரட்டி வழக்குத் தாக்கல் செய்வதற்கு கணிசமான காலம் எடுக்கும். எனவேதான் புதிய சட்டங்களைக் கொண்டுவந்து ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

அரசாங்கத்தில் இருப்பவர்கள், அரசாங்க அதிகாரிகள் என எவராவது விசாரணைகளை மூடி மறைப்பதற்கு முயற்சித்தால் அவற்றுக்கு எதிராக தாம் நேரடியாகச் செயற்படுவோம் என்றும் அமைச்சர் கூறினார்.

(மகேஸ்வரன் பிரசாத்) 


Add new comment

Or log in with...