மட்டு - கல்முனை வீதியில் ஆயுதமுனையில் கொள்ளை | தினகரன்


மட்டு - கல்முனை வீதியில் ஆயுதமுனையில் கொள்ளை

வாகனங்கள் வழிமறிப்பு; 63 இலட்சம் ரூபா அபகரிப்பு

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் அதிகாலை வேளை ஆயுத முனையில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளைச் சம்பவம் தொடர்பில்  பொலிஸார் தீவிர தேடுதல் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று  அதிகாலை 3 மணியளவில் மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட - கல்முனை பிரதான வீதி பெரியகல்லாறுஆலையடிப் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த வழிப்பறிக் கொள்ளைச் சம்பவத்தில் 7பேரிடமிருந்து சுமார் 63 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. ஆயுதம் தரித்த இருவர் பிரதான வீதியில் நின்றுகொண்டு, வீதியூடாக பயணித்தவர்களைவழிமறித்து, அவர்களிடம் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

இவ்விதம்5 வாகனங்கள் வழிப்பறியர்களால் மறிக்கப்பட்ட நிலையில் அவ்வாகனங்களிலிருந்த மீன் வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், ஏனைய தொழில்களுக்கு கையில் ரொக்கப் பணத்துடன் சென்ற 7பேரிடம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி இத்துணிகர கொள்ளை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதும் உஷாரடைந்த பொலிஸார் பொலிஸ் உயர்மட்ட உத்தரவுகளின் பேரில் தீவிர தேடுதல், கண்காணிப்பு, துப்பறியும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை 4 மணிவரை சம்பவம் தொடர்பாக எவரும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.

மேற்படி சம்பவம் தொடர்பாக மீன் வியாபாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

நான் வழமைபோன்று அதிகாலை எங்களது வீடுகளில் இருந்து புறப்பட்டு மீன் கொள்வனவுக்காக மாளியக்காட்டை நோக்கி சென்று கொண்டிருந்தேன். பெரியகல்லாற்று பிரதான வீதியில் இருந்து என்னை நோக்கி ரோச் வெளிச்சம் ஒன்று வந்தது நான் பொலிசார் என நினைத்து எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன். முன்னால் வந்தவர்களும் தங்களது மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தியவுடன் ஒருவர் கத்தியை எடுத்தார் நான் பயந்து விட்டேன். இதன் பின்னர் என்னிடம் இருந்த பணத்தினை பறித்துவிட்டனர்.

இதேபோன்று இன்னொருவர் பின்வந்தவர்களை நிறுத்தி தலைமீது துப்பாக்கியை வைத்தனர். அதன் பின்னர் தொடர்ச்சியாக வந்த பன்னிரெண்டு வியாபாரிகளிடம் இருந்த அனைத்து பணத்தினையும் பறித்­­து சென்று விட்டனர். இதன் பின்னர் நாங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தோம்.

மிகவும் பின்தங்கிய கிராமங்களான எருவில், களுதாவளை, மகிழூர் போரதீவு திக்கோடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர்.

கொள்ளையர்கள் செய்வதறியாது கொள்ளைக்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் கொள்ளையிட்ட ஒரு தொகை பணத்தினையும் கைவிட்டு சென்றுள்ளனர்.

இதனை களுவாஞ்சிகுடி பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக களுவாஞ்சிகுடி பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

பெரியபோரதீவு தினகரன், காரைதீவு குறூப் நிருபர்கள் 


There is 1 Comment

பாதுகாப்புப் படையினருக்கு பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. குற்றம் செய்கின்ற ஒருவரை கையாளுவதற்கு மேலிடத்தின் அனுமதியை பெற்றுத்தான் கைது செய்ய வேண்டுமெனில் குற்றவாளிகளைக் கைது செய்வது என்பது ஒருபோதும் நடக்கமாட்டாது. பாதுகாப்புப் படையினர் நியாயமாக நடந்துகொள்வதற்கு அனைத்துத் தரப்பினரும் அவரகளுக்கு மிகுந்த ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

Add new comment

Or log in with...