புதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள் | தினகரன்


புதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்

பூந்தோட்டம் நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் சிலர் தங்களது ஓவியக் கலைப்படைப்புகளுடன் காணப்படுகின்றனர்

யுத்தம் ஓய்ந்த 10வருடங்கள்;

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் வவுனியாவில் உள்ள பூந்தோட்டத்தில்  அமைந்துள்ள புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இங்கு இடம்பெறும் புனர்வாழ்வு செயற்பாடுகள் இந்த ஜூன் மாதத்துடன் முடிவடையவுள்ளன. அங்குள்ள முன்னாள் போராளிகளில் இறுதியாக புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டவர் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் அங்கிருந்து வெளியேறுவார் என்று போராளிகளின் புனர்வாழ்வுக்கு பொறுப்பான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜனக ரத்னாயக்க கூறுகிறார். 

இந்த முகாமில் இதுவரை 12,195முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் கூறுகிறார். அவர்களுக்கு குழாய் வேலை, தச்சு வேலை, தகவல் தொழில்நுட்பம், வீட்டு மின்னிணைப்பு, மேசன் வேலை,அலுமினியம் கட்டுமானம் மற்றும் வெல்டிங் ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சான்றிதழ்களுடனேயே அவர்கள் வெளியே அனுப்பப்படுவதாகவும் அவர் கூறுகிறார். 

இங்கு வழங்கப்படும் ஒரு வருட கால புனர்வாழ்வு செயற்பாடுகளின் போது தொழிற் பயிற்சியுடன் தியானம், அழகியற்கலை, நாடகப் பயிற்சி, மனவள அபிவிருத்தி, மொழிப் பயிற்சி (சிங்கள, தமிழ், ஆங்கிலம்) மதிவளத்துணை, வழிகாட்டல் ஆகிய பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. 

இறுதி யுத்தத்தையடுத்து சுமார் 10ஆயிரம் ஆண், பெண் மற்றும் சிறுவர் போராளிகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர். இவர்களுக்கு உடனடியாக புனர்வாழ்வு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பின்னர் கைது செய்யப்பட்ட போராளிகள் அடுத்த கட்டம் கட்டமாக புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 2009இல் முதலில் சரணடைந்த பேராளிகள் 2010ஆம் ஆண்டளவில் முழுமையான புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வெளியே விடப்பட்டனர். மற்றவர்களும் படிப்படியே புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் கலப்பதற்காக வெளியே விடப்பட்டனர். 

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளே அதிக அளவில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 2009முதல் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 3242முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டனர். இவர்களில் 2624பேர் ஆண்கள், 618பேர் பெண்கள். அடுத்ததாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 3097முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்றனர்.

இவர்களில் 2452பேர் ஆண்கள், 647பேர் பெண்கள். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 2707முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்றனர். இவர்களில் 2227ஆண்கள், 477பேர் பெண்கள். அடுத்ததாக மன்னாரில் இருந்து 801முன்னாள் போராளிகள். இவர்களில் 637பேர் ஆண்கள், 164பேர் பெண்கள். வவுனியாவிலிருந்து 1145போராளிகள். இவர்களில் 944பேர் ஆண்கள், 201பேர் பெண்கள்.

இவ்வாறு முன்னாள் போராளிகள் பலர் இங்கு புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.  

இத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 529முன்னாள் போராளிகள். இவர்களில் 447பேர் ஆண்கள், 83பேர் பெண்கள். அம்பாறையில் இருந்து 83முன்னாள் போராளிகள்.இவர்களில் 73ஆண்கள், 10பெண்கள். மட்டக்களப்பில் இருந்து 476முன்னாள் போராளிகள். இவர்களில் 415ஆண்கள், 61பேர் பெண்கள். பொலன்னறுவையில் இருந்து 11ஆண்கள், பதுளையில் இருந்து 5ஆண்கள், கொழும்பில் இருந்து 9ஆண்கள், காலியில் இருந்து 2ஆண்கள், கம்பஹாவில் இருந்து 8ஆண்கள் மற்றும் 1பெண், கண்டியில் இருந்து 4ஆண்கள், 1பெண், நுவரெலியாவில் இருந்து 14பேர், புத்தளத்திலிருந்து 4பேர், அனுராதபுரம், கேகாலை, மொனராகலை, இரத்தினபுரி ஆகிய இடங்களில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 12,191பேர் இங்கு புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டனர். இவர்களில் 9878பேர் ஆண்கள். 

இதேவேளை யுத்தத்தின் இறுதியில் 500சிறுவர் போராளிகளும் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்ததாக மேஜர் ஜெனரல் ஜனக ரத்னாயக்க கூறுகிறார். இந்த சிறுவர்கள் புனர்வாழ்வுக்குட்படுத்தப்படவில்லை. அவர்களுக்கு அதற்குப் பதிலாக முறையான கல்வி வழங்கப்பட்டது. அவர்களுக்கு மொழிப் பயிற்சியும் வழங்கினோம். சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைக்குத் தோற்ற முடிந்தவர்களுக்கு அவர்களது கல்வியை முழுமைப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.  

சிறுவர்களுக்கு அவர்களது கல்வியை அபிவிருத்தி செய்யும் வசதிகளுடன் சமூகத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கான வசதி வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. 

2002ம் ஆண்டு முதல் 7ஆயிரம் சிறுவர்கள் புலிகள் இயக்கத்தினரால் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். யுத்தத்தின் இறுதியில் 2009மே மாதத்தில் 594சிறுவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்கள் அனைவரும் 12முதல் 18வயதுக்குட்பட்டவர்கள். 

யுனிசெப்பின் தகவல்களின்படி 2002யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் 6183சிறுவர்களை புலிகள் தமது இயக்கத்தில் சேர்த்திருந்தனர். இதில் 3732பேர் சிறுவர்கள், 2451பேர் சிறுமியர். 

வவுனியா பூந்தோட்டத்தில் வழங்கப்பட்ட புனர்வாழ்வு செயற்பாடுகள் வெற்றியடைந்ததாக கூறலாம் என்று ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக்க சொல்கிறார். ஏனெனில் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு இங்கிருந்து வெளியே சென்ற எவரும் எந்தவொரு சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அவர் கூறுகிறார். சோதனைச் சாவடியில் இருந்த இரண்டு பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான முன்னாள் போராளி சம்பவத்துடன் சம்பந்தப்படவில்லையென்று பின்னர் தெரியவந்ததையடுத்து விடுதலை செய்யப்பட்டார். மேற்கூறிய இரண்டு பொலிஸ்காரர்களும் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்கள் காணாமற் போன போதிலும் அந்த ஆயுதங்கள் முஸ்லிம் தீவிரவாத அமைப்பொன்றிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிடுகிறார்.  

2017இல் புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கென 100மில்லியன் ரூபாவை அரசாங்கம் புனர்வாழ்வு பணியகத்துக்கு வழங்கியிருந்தது. 2018இல் 50மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. அத்துடன் புனர்வாழ்வு பெறுவோருக்கு சமப்ளம் வழங்குவதற்காக மேலும் 250மில்லியன் ரூபா மேலதிகமாக வழங்கப்பட்டது. புனர்வாழ்வு பெற்று வெளியேறுவோருக்கு வேலை கிடைக்கும் போது அரசாங்கம் அவர்களுக்கு 10ஆயிரம் ரூபாவை வழங்குகிறது.

அதேவேளை பயிற்சி பெறும் போது அவர்களுக்கு அலவன்ஸும் வழங்கப்படுகிறது என்று பிரதி ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் லியனகே கூறுகிறார். 

அத்துடன் புனர்வாழ்வு பெறுவோரிடையே பகிர்ந்தளிப்பதற்காக 35மில்லியன் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள், மீன்பிடி வலைகள் ஆகியவை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 

முன்னாள் போராளிகளை அவர்களது குடும்பமோ சமூகமோ ஏற்றுக் கொள்ள விரும்பாத நிலையில் இவ்வாறான புனர்வாழ்வு அவர்களுக்கு வழங்கப்படுவது சிறப்பானதாகும். அதேநேரம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீதிகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதுடன் மேலும் பல அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என்று புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் ஜனக ரத்னாயக்க கூறுகிறார்.  

புனர்வாழ்வுக்குப் பின்னரான கட்டத்தில் புனர்வாழ்வு பணியகம் 110,442,018ரூபாவை புனர்வாழ்வு பெற்றோரின் வாழ்வாதார சுயவேலைகளில் ஈடுபடுவதற்காக செலவிட்டுள்ளது. அத்துடன் புனர்வாழ்வு பெற்றோர் தங்கியுள்ள மாவட்டங்களின் செயலாளர்களிடம் இருந்து அவர்களுக்கு மேலதிக உதவிகள் வழங்கப்படுகின்றன. 

சுயவேலைகளுக்காக 12,982,262ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாணத்துக்கு 7,650,726ரூபாவும், கிளிநொச்சிக்கு 1,000,000ரூபாவும், முல்லைத்தீவுக்கு 900,000ரூபாவும் மன்னாருக்கு 549,596ரூபாவும், வவுனியாவுக்கு 2,131,580ரூபாவும் திருகோணமலைக்கு 700,000ரூபாவும் பகிரப்பட்டுள்ளன. 

அதேவேளை, விவசாய உபகரணங்களுக்காக 7,067,838ரூபாவும் கால்நடைவளர்ப்புக்கு 6,850,000ரூபாவும், மீன்பிடி உபகரணங்களுக்காக 899,900ரூபாவும் வழங்கப்பட்டுள்ளன. 2009இல் யுத்தம் முடிவுற்ற போது 24பாதுகாப்பு தங்குமிடங்கள் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களும் அமைக்கப்பட்டன. 

யுத்தம் முடிவுற்ற ஒரு தசாப்தத்தின் பின்னர், முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வுத் திட்டம் வெற்றிகரமான ஒன்று என்று சந்தேகமின்றிக் கூற முடியும் என்று புனர்வாழ்வு பணியகத்தின் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜனக ரத்னாயக்க கூறுகிறார்.  

கமலியா நத்தானியல்..


There is 1 Comment

முன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்

Add new comment

Or log in with...