நாட்டைச் சூழ கடல் இருக்ைகயில் உப்பை இறக்குமதி செய்வதா? | தினகரன்

நாட்டைச் சூழ கடல் இருக்ைகயில் உப்பை இறக்குமதி செய்வதா?

2022இன் பின்னர் உப்பை ஏற்றுமதி செய்யத் திட்டம். புதுவடிவம் பெறுகிறது ஆனையிறவு உப்பளம்

எங்களது நாக்கை சுவைபடச் செய்வது அவர்களின் உழைப்பாகும். தலையில் சுமந்த உப்புக் கூடையும், தரையிலுள்ள உப்பு நீரும் அந்த தொழிலாளியின் உடம்பில் உப்பை உருவாக்குகின்றன. அங்கு வெப்பம் 40 பாகை செல்ஸியஸ் ஆகும். யுத்த நெருப்பு எரிந்த ஆனையிறவு இன்று உப்பளமாக உள்ளது.

 வடக்கில் மிகவும் கஷ்ட ஜீவனம் நடத்தும்400 குடும்பங்களின் உழைப்பே நாடு பூராவுமுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் தொடக்கம் ஏழைக் குடிசைகளில் வாழ்பவர்களின் உணவுக்கு சுவை கூட்டுகின்றது. அது மாத்திரமல்ல பல ஆயிரம் தொழிற்சாலைகளின் இரசாயன தேவையை வழங்குவதில் ஆனையிறவு உப்பு முதலிடம் வகிக்கின்றது. அதற்குக் காரணம் இந்த உப்பளங்களில் பெறப்படும் உப்பு தூய்மையும் தரமும் கொண்டதனாலாகும்.

இலங்கையைச் சூழவும் கடல் காணப்படுகின்றது. அதில் உப்பு அதிகமாக உள்ள உவர் நீர் அநேகமான இடங்களில் காணப்படுகின்றது. ஆனால் அதன் முழு பயனையும் நாம் அடைந்துள்ளோமா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். இன்றும் நாம் எமது தேவையில் நூற்றுக்கு இருபது சதவீத உப்பை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றோம்.

ஆனால் நாம் தற்போது உப்பை ஏற்றுமதி செய்யும் இலக்கை நோக்கி சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சியான விடயமாகும். அந்த சவாலை வெற்றி கொள்ள சுட்டெரிக்கும் வெயிலில் தமது பணியினை தொழிலாளர்கள் மேற்கொள்கின்றார்கள். வியர்வையையும் உப்புநீரையும் வேறுபடுத்தி அறிய முடியாதளவு அவர்களின் வாழ்க்கை உப்பளத்துடன் இணைந்துள்ளது.

“எனது பிறந்த இடம் தெஹிவளை. இந்தப் பகுதியிலேயே திருமணம் முடித்தேன். அதனால் இங்கு வசிக்கின்றேன். கணவருக்கு தொழில் இல்லை. மூன்று பிள்ளைகளை வாழ வைப்பது சிரமமான காரியம். ஆனால் உப்பளத்தில் வேலை செய்வதால் பொருளாதார கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழ்கின்றோம்” எனக் கூறுகின்றார் கிளிநொச்சியில் வாழ்பவரான சிரியலதா.

இவரைப் போன்று கிளிநொச்சியைச் சேர்ந்த வேலை வாய்ப்பு இல்லாத பலர் இங்கு வேலை செய்கின்றார்கள்.

1983ம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உப்புக் கூட்டுத்தாபனம் பல மாற்றங்களுக்கு முகங்கொடுத்து 2002ம் ஆண்டு அமைச்சரவை அனுமதியுடன் மாந்தை உப்பு நிறுவனமாக மாறியது. ஆனையிறவில் யுத்தம் இடம்பெற்ற வேளையில் நிறுவனத்தின் வேலைகள் முடங்கின. அப்போதைய ஊழியர்கள் முகாம்களில் வாழ்ந்து ஓய்வு பெற்றார்கள். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் சண்டையிட்ட இரு தரப்பாரும் உப்பளத்தை நிலக்கண்ணி வெடிகளால் நிரப்பியிருந்தார்கள். நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் 'டேஷ்' அமைப்பு அரசாங்கத்தின் உதவியுடன் நிலக்கண்ணி வெடிகளை அகற்றியது.

750 ஏக்கர் காணியை இவ்வாறு அரசாங்கம் துப்புரவு செய்தது. அரசாங்கத்துக்குச் சொந்தமான ஒரே உப்பளம் இதுவாகும். கடந்த சில வருடங்களில் மாந்தை உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பளம் 18,000 தொன் இலக்கை அடைந்துள்ளது. தற்போது இந்த வருடத்துக்கான அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பெருந் தொகையானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றார்கள்.

இலங்கையின் தேசிய உப்புத் தேவையில் உணவுக்காக நூற்றுக்கு ஆறு வீதமே உப்பு பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய பலவிதமான கைத்தொழில்களுக்காக உப்பு பயன்படுத்தப்படுகின்றது. உலகிலுள்ள 14,000 கைத்தொழில்களுக்கு உப்பு தேவைப்படுகின்றது. அதன் மூலம் உப்பின் பெறுமதியை அறிந்து கொள்ள முடியும். மாந்தை உப்பு நிறுவனத்தின் தலைவர் எம்.எம். அமீன் கூறுகையில் "மாந்தை நிறுவனத்துக்கு மன்னார் நகரிலும் 150 ஏக்கர் உப்பளம் உண்டு.

 ஆனையிறவில் 750 ஏக்கர் உப்பளம் காணப்படுகின்றது. ஆனையிறவு உப்பின் விசேட தன்மை என்னவென்றால் வெண்ணிற சுத்தமான உப்புக் கிடைப்பதாகும். ஏனைய உப்பள உப்பு நிறம் குறைந்தே காணப்படுகின்றது. ஆகவே ஆனையிறவு உப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்கிறார்.

“எமது நாட்டுக்கு வருடத்துக்கு தேவையான உப்பின் அளவில் நூற்றுக்கு இருபது வீதம் பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. நாட்டைச் சூழ கடல் காணப்பட்டாலும் எமது உப்பு தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பது வெட்கக்கேடான விடயமாகும். அதனால் நாம் ஒரு இலக்கினை நோக்கமாகக் கொண்டு பயணிக்கின்றோம். 2022இல் நாட்டுக்குத் தேவையான உப்பை உற்பத்தி செய்து உப்பு இறக்குமதியை நிறுத்துவதாகும். இரண்டாவது இலக்கு உப்பு ஏற்றுமதி செய்வதாகும். அதற்காக எமக்குச் சொந்தமாக அண்மையில் உள்ள குருஜாதீவு உப்பளத்திலும் வேலைகளை ஆரம்பிக்கவுள்ளோம்.

 அதன் மூலம் எமது உற்பத்தியின் அளவை அதிகரிக்கலாம். கைத்தொழில் மற்றும் வாணிப நடவடிக்கைகள் அமைச்சரின் ஆலோசனையின் பேரில் அதனை திட்டமிட்டு செயற்படுத்தவுள்ளோம். இந்தத் திட்டத்தின் மூலம் வடக்கின் பாரிய பிரச்சினையான வேலைவாய்ப்பின்மைக்கும் விடை காண முடியும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பின்னர் நீர்ப்பற்றாக்குறை, அதிக உஷ்ணம், போக்குவரத்து சிரமம் மற்றும் ஏழ்மை காரணமாக சிரமத்துடன் வாழ்க்கை நடத்தும் இவர்களுக்கு உப்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைத்தமை மகிழ்ச்சியாகும்.

அவர்கள் யுத்தத்தின் விளைவாக பாடசாலை கல்வியை சரியான முறையில் பூர்த்தி செய்யாமையால் வேறு வேலைகளை தேடுவதும் கடினமாகும். அதைத் தவிர இங்கு வாழ்பவர்களில் சிலர் உடலில் ஒரு உறுப்பையேனும் இழந்தவர்களாக உள்ளார்கள். உப்பளங்களில் கோடை காலங்களில் மாத்திரமே பணிபுரிய முடியும்.மழைக்காலங்களில் இவர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

தர்மபுரத்தில் வசிக்கும் மகேந்திரராசா ஒரு கண்ணை இழந்த 46 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். 11, 9, 10, 12 ம் தரங்களில் கல்வி பயிலும் அவரின் பிள்ளைகளின் கல்வித் தேவைக்கு உப்பள வேலையால் போதுமான பணம் கிடைக்கின்றது.

“யுத்த காலத்தில் நாம் அடைந்த இன்னல்கள் ஏராளம். தற்போது நாம் உப்பளத்தில் வேலை செய்வதால் மகிழ்ச்சியாக இருக்கிறோம். மழைக் காலத்தில் சில மாதங்கள் இங்கு வேலை இல்லாத போது விவசாயம் செய்கின்றோம். மாடுகள் வளர்க்கின்றோம் அதனால் முன்னைய காலங்களை விட மகிழ்ச்சியாக இருக்கின்றோம்" என்கிறார்.

ஜனேந்திரன் பிரசக்தி என்பவர் உப்பளத்தில் வேலை செய்வதால் அவரது வாழ்க்கை இலகுவாக உள்ளதாகக் கூறுகின்றார்.

“நான் 2015ம் ஆண்டிலிருந்து இங்கு வேலை செய்கின்றேன். எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்களை வாழ வைக்க எனக்கு இந்த வேலை பெரும் பலமாகும். முன்னரை விட நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம்" என்கிறார் அவர்.

வட்டக்கச்சியில் வசிக்கும் 44 வயதான கே. யுவராசாவும், கோணாவெளியில் வசிக்கும் ஆர். சிரியலதாவும் (36) அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பது உப்பளத்தில் வேலை செய்வதால் எனக் கூறினார்கள்.

 


There are 2 Comments

வாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்

செய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.

Add new comment

Or log in with...