இலங்கையில் ஐ.எஸ் காலூன்றியது எவ்வாறு? | தினகரன்

இலங்கையில் ஐ.எஸ் காலூன்றியது எவ்வாறு?

தெற்காசியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதே ஹாசிமின் பிரதான குறிக்ேகாள்!

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் பாதுகாப்புக் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டமை மற்றும் அமைச்சர்கள் பலரது நெருக்கடிதான் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் வேர்பிடித்து நாசகார தாக்குதலை நடத்தக் காரணம் என்று இலங்கை செய்தியாளர்கள் கூறுவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் சாய்ந்தமருது பயங்கரம் ஆகிய சம்பவங்களையடுத்து இலங்கையில் அச்சமும் அதிர்ச்சியும் இன்னும் நீங்கவில்லை. ஊடகங்களில் 'இடப்பெயர்வு' என்ற சொற்றொடர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் அச்சத்தினால் இடம்பெயர்ந்து பள்ளிவாசல்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். இன்னமும் அப்பகுதிகளில் ஏராளமான தீவிரவாதிகள் மறைந்து இருக்கலாம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பகலில் தளர்த்தப்பட்டு மாலையில் அமுல்படுத்தப்படுகிறது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் எவ்வாறு இலங்கைக்குள் ஊடுருவினார்கள் என்பதை இந்திய ஊடகமொன்று ஆய்வு செய்துள்ளது.

இலங்கையில் பாதுகாப்பு கெடுபிடிகள் குறைக்கப்பட்ட காலகட்டத்தில் இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் படிப்படியாக தலையெடுக்கத் தொடங்கினர். தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பில் ஹாசீமின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் அவரை வெளியேற்றி இருக்கின்றனர். ஹாசீம் அந்த இயக்கத்தின் முன்னாள் தலைவர்.பின்னர் அந்த இயக்கம் மிதவாத முஸ்லிம்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

ஆனால் ஹாசீம் திடீரெனத் தலைமறைவாகி சமூக வலைதளங்களில் தம்மை கடும்போக்கு தீவிரவாதியாக வெளிப்படுத்தி வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார்.

இதை அப்போதே இலங்கை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்க வேண்டும். இந்தியாவில் ஹாசீமின் வீடியோக்கள் கைப்பற்றப்பட்ட போது கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளிலும் இலங்கை அலட்சியம் காட்டியது.

ஹாசீமைப் பொறுத்தவரையில் தெற்காசியாவில் இந்தியா, இலங்கை நாடுகளில் சீர்குலைவுகளை ஏற்படுத்தி ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதன் பாரதூர விளைவுகளை பலநாட்டு உளவு அமைப்புகள் சுட்டிக்காட்டிய போதும் இலங்கை அக்கறை கொள்ளவில்லை. இதற்குக் காரணம் இலங்கை அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த சில அரசியல்வாதிகள் என்று இந்திய ஊடகங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கால்பதித்துள்ள இந்துத்துவா அமைப்பான சிவசேனைக்கும் கூட இத்தகவல் தெரிவிக்கப்பட்ட போதும் அவர்களும் கூட இதுபற்றிய அக்கறையை காட்டாமல் இருந்துள்ளனர் என்பதும் குற்றச்சாட்டு. இவர்கள் அல்லாமல் இஸ்லாமிய மக்களும் இந்த கடும்போக்காளர்கள் குறித்து கனத்த மௌனத்தைக் காட்டி வந்தனர்.

இதனால் இந்த தீவிரவாதிகள் கை ஓங்கி ஒருதேசத்தையே பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. இன்று ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றனர். வரலாற்றுத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு மக்கள் நல்லிணக்கத்தையும் அமைதியையும் முன்னெடுக்க வேண்டும் என்பது இப்போதைய இலங்கையின் தேவை.

இதுஒருபுறமிருக்க,இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டு 2 நாட்களுக்குப் பிறகே, ஐ.எஸ் அமைப்பு இதற்குப் பொறுப்பேற்றது. அதன் செய்தி நிறுவனமான ‘அமெக்’ என்ற இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியானது.

தாமதமாக பொறுப்பேற்றதன் மூலம் ஐ.எஸ் அமைப்பு தானே தாக்குதலில் ஈடுபட்டதா என சந்தேகம் எழுகிறது. இவ்வாறு தாமதமாக அறிவிப்பது ஐ.எஸ் அமைப்புக்கு வழக்கமானது இல்லை.

ஆனால், தொடர் தாக்குதல் இன்னும் முடிவடைந்ததா இல்லையா எனக் காத்திருத்து பின்னர் அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம். அல்லது, அதற்கான ஆதாராங்களை திரட்டுவதற்காக தாமதமாகியிருக்கலாம் என்று இந்திய புலனாய்வுத் துறை கருதுகிறது.

இதேவேளை இலங்கைத் தாக்குதல்களில் நேரடியாக தொடர்பில்லாவிட்டாலும், உள்ளூர் அமைப்புகளுக்கு ஐ.எஸ் உதவியிருக்கலாம். தாக்குதல் நடத்தப்பட்ட தொழில்நுட்ப உத்திகள் ஐ.எஸ் அமைப்பின் தாக்குதலுடன் ஒத்திருப்பதாகத் தெரிகிறது.

எழுத்துபூர்வமாக தெரிவித்த பின்னர், தாக்குதலில் 7 பேர் ஈடுபட்டதாக புகைப்படம் மற்றும் காணொளி ஒன்றையும் ஐ.எஸ் வெளியிட்டிருந்தது.

புகைப்படத்தில் இருக்கும் நபர்களில் ஒருவர் முகமூடி அணியவில்லை. அபு உபய்தா என்று அறியப்படும் அந்த நபர் உள்ளூர் பயங்கரவாதியான சஹ்ரான் காசிம் என்று நம்பப்படுகிறது.

ஏழு பேர் தாக்குதலில் ஈடுபட்டதாக ஐ.எஸ் கூறியது. ஆனால், அந்த குழுப் புகைப்படம் மற்றும் காணொளியில் 8 பேர் இருக்கிறார்கள்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களாக குறிப்பிடப்பட்டவர்களின் பெயர்களும் ஏற்கனவே வெளியானவைதான். சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம் மற்றும் பெயர்களைத் தொடர்புபடுத்தி தாங்கள்தான் தாக்குதல் நடத்தியதாக ஐ.எஸ் கூறியிருக்கலாம்.

அதேசமயம், சிரியாவில் ஆதிக்கம் சரிவு கண்டவுடன் ஐ.எஸ் அமைப்பின் வலிமை ஒழிந்ததாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், தாங்கள் சரியவில்லை என்பதை தெரியப்படுத்த உலகளவில் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் வர ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டு வேலைகளை செய்கிறது எனலாம்.

கடந்த மார்ச் மாத இறுதியில், மேற்கு ஆபிரிக்க நாடுகளான மாலி, பர்கினா பாசோவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றது.மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கும் தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

பின்னர், காங்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் தங்களால்தான் நடந்ததாக கூறியது. தற்போது, இலங்கையிலும் பொறுப்பேற்றுள்ளது.

காங்கோ மற்றும் இலங்கையில் இதற்கு முன்பு, நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றதில்லை.

இலங்கையில் ஐ.எஸ் அமைப்பால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அதன் ஆதரவு அமைப்புகள் செய்தியை பரவ விட்டு, அதன்மூலம் வன்முறை கட்டவிழ்க்க உள்ளூர் அமைப்புகள் முயற்சிக்கின்றன.

அதிலும், உள்ளூர் அமைப்புகள் உதவியுடன் ஐ.எஸ் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. ஐ.எஸ் கொடியுடன் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் புகைப்படம் ஒன்றும் அதற்கான ஆதாரமாக அப்போது வெளியிடப்பட்டது. இதுபோன்ற சில விபரங்களில் இரண்டு சம்பவங்களும் ஒத்துப்போகின்றன.

உள்ளூர் அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் மீதுதான் சந்தேகம் வருகிறது. ஆனால் நிச்சயம் வெளியில் உள்ள ஏதோ ஓர் அமைப்பு இவர்களுக்கு உதவியிருப்பதில் சந்தேகமில்லை.

இலங்கை தாக்குதலை பொறுத்தவரை மூளையாக செயல்பட்டது சஹ்ரான் காசிம் என்று கூறப்படுகிறது. ஐ.எஸ் வெளியிட்ட புகைப்படத்தில் முகமூடி அணியாமல் இருக்கும் ஒரே நபர் இவர்தான். கடந்த 2016-இல் இலங்கை அரசு தெரிவித்த தகவலில், இலங்கையைச் சேர்ந்த சில படித்த இளைஞர்கள் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து சிரியாவில் சண்டையிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. எனவேதான் தற்போது நடந்த தாக்குதல் இவர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 

(இந்திய ஊடகச் செய்திகள்)


There is 1 Comment

இலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான செயற்பாடுகளைப் போல் இவர்களும் செய்து விடக் கூடாது.

Add new comment

Or log in with...