கடலில் கலக்கும் நீர் வீணா? | தினகரன்

கடலில் கலக்கும் நீர் வீணா?

கடல் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி வளி மண்டலத்துக்குச் செல்கிறது. பின்னர் அது மேகமாகி மழையாக நிலத்தில் பெய்கிறது. அந்த மழைநீர் ஆறுகள் வழியாக பாய்ந்தோடி மீண்டும் கடலில் கலக்கிறது. இது ஓர் சங்கிலித் தொடரான இயற்கை சுழற்சி. இந்த சங்கிலியின் ஒரு கண்ணியை துண்டிக்க முயன்றால் விளைவுகள் விபரீதமாகும். ஆனால் ஏனோ பலரும், பருவமழைக் காலங்களில் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாகவும் அதை தடுத்து முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சரி மழைக்காலத்தில் ஆற்றுநீர் முழுவதையும் நாமே பயன்படுத்திக் கொண்டு அது கடலில் கலக்காமல் தடுத்து விட்டால் என்ன ஆகும்? கடல் நீரின் வேதித்தன்மை மாறும். உப்புத் தன்மை அதிகரிக்கும். கடல் சூழலியல் பாதிக்கப்படும். அதனால் கடலின் மேற்பரப்பின் வெப்ப நிலையிலும் பாதிப்பு ஏற்படும். இது கடலுக்கும் வளி மண்டலத்துக்குமான காற்றோட்டத்தில் மாற்றத்தை உண்டாக்கும்.

இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி ஆற்றுநீர் மூலம் கடலுக்கு வந்து சேர வேண்டிய கடல் வாழ் உயிரினங்களுக்கான உணவுப் பொருள்கள் தடைப்படும். கடலில் வாழும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் முதல் உலகிலேயே மிகப்பெரிய பாலூட்டியான திமிங்கிலம் வரை உணவு கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். மீன்வளம் அழியும். கடல் பாசிகள் பட்டுப்போகும். மொத்தத்தில் கடல்வளத்துக்கு ஆபத்து வந்து சேரும்.

மண்ணில் விழும் மழைநீர், ஆற்றில் கலந்து கடலுக்கு சென்று சேருகிறது. இந்த தண்ணீரில் நீர்வாழ் உயிரினங்களுக்குத் தேவையான கரைந்த ஒட்சிசன் அதிகம் இருக்கும். ஆறுகள் அடித்து வரும் நுண் சத்துக்கள் அனைத்தும் ஆறும் கடலும் கலக்கும் கழிமுகங்களில் வந்து படியும். பின் அலைகளின் போக்குக்கு ஏற்ப அவை மெல்ல மெல்ல கடலின் கரையோரங்களில் பரவும். இவைதான் மீன்களுக்கும் கடல் வாழ் உயிரினங்களுக்குமான உணவு. அவை கடல் வாழ் உயிரினங்களின் நாற்றங்கால் என அழைக்கப்படும் கழிமுகங்களுக்கும், கரையோரங்களுக்கும் வந்து உணவை உண்டு செல்வதோடு இப்பகுதியில் இனப்பெருக்கத்தை முடித்துக் கொண்டு கடலுக்குள் சென்று பல்கிப் பெருகும்.

கடல் வாழ் உயிரினங்களுக்குத் தேவையான 75 சதவீத நைட்ரஜனை ஆற்றுநீர்தான் அடித்துக் கொண்டு வந்து கொடுக்கிறது. எனவேதான் ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் மீன் வளம் அதிகம் இருக்கிறது. எனவே கடல் வளத்துக்கு ஆற்றுநீர்தான் ஆதாரம்.

ஆற்றுநீர் கடலுக்கு செல்லாவிட்டால் கடல்வளம் பாதிக்கப்படும். அதனால் மீன்வளமும் பாதிக்கப்படும்.

கடல்தான் மீனவர்களின் வாழ்வாதாரம். கடல்வளத்துக்கு பங்கம் ஏற்பட்டால் மீனவர்களின் கதி என்னவாகும்?

ஆண்டுக்கு ஆண்டு பருவமழை குறைந்து வருகிறது. எனவே மழைநீரை சேமிக்க வேண்டியதும் ஆறுகளில் வரும் நீரை அணைகள் மற்றும் நீர்நிலைகளில் தேக்கி வைத்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டியதும் அவசியமே. அணைகளையும் குளங்களையும் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரை சேமித்தால் பற்றாக்குறையை குறைக்கலாம். அதை விடுத்து ஆறுகளில் செல்லும் நீரில் ஓரு சொட்டு நீரைக் கூட கடலுக்கு விடக் கூடாது என்றும் கடலில் கலக்கும் நீர் முழுவதும் வீண் என நினைப்பதும் இயற்கைக்கு முரணானது. எனவே இனிமேலாவது "ஆற்றுநீர் கடலுக்குச் சென்று வீணாகிறது' என்று கூறாது இருப்போம்.


There is 1 Comment

அய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு : ஆற்றில் செல்லும் நீரை சேமிக்க வேண்டியது 15 % மட்டுமே 1 ) குறைந்தபட்சம் நீரை தடுப்பணைமூலம் (குறிப்பிட்ட ஒவொவுறு 5KM இடைவெளியில் ) தேக்கி , அதை மக்கள் பயன்பாட்டிற்கும் , நிலத்தடி நீர் சேமிப்பதற்கும் பயன் படுத்தவேண்டும் 2 ) தடுப்பணை மூலம் , வாய்க்கால் வழி நீர் பாசனம் வயல்களுக்கு பயன்படுத்தவேண்டும் . இதன் மூலம் , ஆற்று நீரால் நிலத்தின் தன்மை மேம்படும், நிலத்தி நீர் பயன்பாடு குறையும். நிலத்தடி நீரை கோடை காலத்திற்கும், வறட்சி காலத்திற்கும் பயன் படுத்த வேண்டும் 3 ) தடுப்பணை மூலம் , குளம் மற்றும் கண்மாய்களுக்கு தண்ணீரை அனுப்பி , நீரை கோடை காலத்துக்கு சேமிக்கவேண்டும் . குளங்கள் மூலம் மீன் வளர்ப்பு , ஆடு, மாடு வளர்ப்பு நடை பாரும். அது கிராம புராணத்தை மேம்படுத்தும் " தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்." தயவு கூர்ந்து உங்களிடம் எதிர்பார்த்து . நீர் மேலாண்மை மேம்படுத்தும் கட்டுரைகள்

Add new comment

Or log in with...