சிலைகளை தகர்ப்பதன் மூலம் வரலாற்றை மறைக்கும் முயற்சி! | தினகரன்

சிலைகளை தகர்ப்பதன் மூலம் வரலாற்றை மறைக்கும் முயற்சி!

இந்தியாவின் திரிபுராவில் இருபத்தைந்து ஆண்டுகளாக ஆட்சியைப் பிடிக்க முடியாத பாரதிய ஜனதா கட்சி, தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி ஐ.பி.எப்.டி கூட்டணியுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

ஆட்சியைப் பிடித்தவுடனே திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சிக் காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலையை புல்டோசர் மூலம் அகற்றி உள்ளது. இதனால் திரிபுராவில் கலவரம் வெடித்தது. இந்தச் செயலுக்கு சிறிதும் வருத்தம் தெரிவிக்காத பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜா, லெனின் சிலையைத் திரிபுராவிலிருந்து அகற்றியது போல தமிழ்நாட்டில் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று ஃபேஸ்புக்கில் பதிவு தட்டியிருந்தார்.

இந்தப் பதிவுக்குப் பலரது கண்டனங்கள் எழுந்தவுடன், அவர் அந்தப் பதிவை நீக்கி விட்டார்.

சிலை என்பது வரலாற்றின், நட்பின், சுதந்திரத்தின், மக்களாட்சியின் அடையாளம் என்கிறார்கள் அமெரிக்கர்கள். அதற்கு சாட்சிதான் அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை என்கிறார்கள். உலகின் ஆகச் சிறந்த சிலையாக கூறப்படுவது டேவிட் எனும் மைக்கல் ஏஞ்சலோவின் சிலை. பைபிள் கதாபாத்திரமான டேவிட் உருவத்தில் மிகப் பெரிய கோலியாத்தை வீழ்த்தினான். வீரத்தின் அடையாளமாக டேவிட்டின் சிலை இத்தாலியில் நிருவப்பட்டுள்ளது. உலகின் தத்ரூபமான சிலை இது என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு சிலைக்கு பின்பும் ஒரு வரலாறு இருக்கிறது.

இன்று திரிபுராவில் லெனின் சிலையை அகற்றி விட்டார்கள். தமிழ்நாட்டில் பெரியார் சிலையை அகற்றி விடுவோம் என்று நாட்டை ஆளும் கட்சியின் தேசிய செயலாளர் ட்விட் செய்கிறார். வேலூரில் பெரியார் சிலை தாக்கப்படுகிறது. இதற்கெல்லாம் நிச்சயமாக பிரதமர் மோடி பதிலளிக்க மாட்டார். ஆனால் பிரதமர் மோடி பிரசார மேடைகளில் பேசும் பழைய வரலாற்றை சிலை விவகாரத்திலும் பார்க்க வேண்டியது அவசியம்.

இந்தியாவில் குப்தர்களின் காலம் தொடங்கிக் கொண்டிருந்த நேரம் அது... அப்போது சிலைகளின் தலைகளை உடைத்தெறிந்து வரலாறுகள் அழிக்கப்பட்டதாக தகவல். அப்போதுதான் கனிஷ்கரின் சிலையில் தலை உடைத்தெறியப்பட்டது, இன்று நாம் பார்க்கும், படிக்கும் கனிஷ்கரின் சிலைக்கு தலை கிடையாது. இப்படித்தான் வரலாறுகளை அன்றைய அரசுகள் அழித்தன. ஒரு தலைமுறையை அழிக்க இன்று அணு ஆயுதங்களும், இரசாயனத் தாக்குதல்களும் தேவைப்படுகின்றன. ஆனால் அன்று ஒரு நாலந்தாவும், ஒரு யாழ்ப்பாண நூலகமும் கொழுத்தப்பட்டு வரலாறு முற்றிலும் அழிந்து போனதன் இன்னொரு பக்கம்தான் இந்த சிலை உடைப்புகளும், சிலை திருட்டுகளும்.

இரும்பு மனிதனுக்கு உலகிலேயே மிகப் பெரிய சிலை செய்யப் போகிறார்கள். வீர சிவாஜியின் சிலை உலகத்தின் பெரிய சிலையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வீர சிவாஜிக்கு செலவழிக்கப் போகும் தொகை 3600 கோடி ரூபா. இது இந்திய மின்சாரத்துறை அமைச்சகத்துக்கு ஒரு பட்ஜெட்டில் மஹாராஷ்ட்ராவுக்கு ஒதுக்கப்படும் தொகையை விட 5 மடங்கு அதிகம். மஹாராஷ்ட்ராவில் கிராமங்களின் வீதியை புதிதாக போட ஆகும் செலவை விட 7 மடங்கு அதிகம். மஹாராஷ்ட்ராவின் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்படும் நிதியைப் போல 3.5 மடங்கு அதிகம் என்கிறார்கள். இதையெல்லாம் யார் பணத்தில் செய்யப் போகிறார்கள். இந்த சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்க எவ்வளவு தொகையை செலவழிக்கப் போகிறார்கள். சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை சர்தார் சரோவர் அணைக்கு 3.2 கிமீ தொலைவில் அமைக்கப்படவுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விஷயங்கள் எழுந்ததை யார் கேட்டார்கள்?

தேர்தலில் ஜெயிப்பதற்கு முன்பு எவ்வளவு வரலாறுகளை அந்த மண் சார்ந்து முன்வைக்கிறார் பிரதமர். அந்த மண்ணில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைவரை அவமதிப்பதை மட்டும் ஏன் தட்டி கேட்க மறுக்கிறார்? தமிழின் பெருமையை உணர்த்த கடற்கரை வீதிகள் முழுவதும் தமிழ் அறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. கண்ணகி சிலையை அகற்றியதற்கு பல போராட்டங்கள் நடத்தி கண்ணகி சிலையை மீட்ட வரலாறு எல்லாம் தமிழக மண்ணுக்கு உண்டு. திரிபுரா தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா வெளிநாட்டு தலைவர்களுக்கு இருக்கும் மரியாதை இந்திய தலைவர்களுக்கு இந்த மாநிலத்தில் இல்லை என்கிறார். மரியாதை என்பது கேட்டு வாங்குவது அல்ல. தானாக கிடைப்பது என்பது கூடவா ஒரு நாடாளும் கட்சியின் தலைவருக்கு தெரியவில்லை.

பாஜகவின் தேசிய செயலாளர் ஹச்.ராஜா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று கூறிய 12 மணி நேரத்துக்குள் வேலூரில் ஒரு பெரியார் சிலை தாக்கப்படுகிறது. இது கலவரத்தை ஏற்படுத்தும் செயல் இல்லையா? இது தேச விரோதம் இல்லையா?

மோடியை விமர்சித்தாலே அவர்கள் இந்தியன் இல்லை என்று கூறிய ஹெச். ராஜா ஏன் கைது செய்யப்படவில்லை. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டத்தை எதிர்த்து துண்டுப் பிரசுரம் விநியோகித்த வளர்மதி மீதும், தமிழர்களுக்காக குரல் கொடுத்த திருமுருகன் காந்தி மீதும் கண்மூடித்தனமாக பாய்ந்த குண்டர் சட்டம் ஹெச்.ராஜா மீது பாயாதது ஏன்?

இந்தியாவில் அதிகம் தாக்கப்பட்ட சிலைகளின் பட்டியலில் முன்னணி வகிப்பது அம்பேத்காரின் சிலைகள் தான். பல இடங்களில் விளிப்புநிலை மக்களை பாதுகாக்க போராடியவர் பாதுகாப்பாக கூண்டுக்குள் இருப்பதை பார்த்திருப்போம். எங்கு இது போன்றவர் தாக்கிவிடுவார்களோ என்பதற்காக தான் அந்த கூண்டுகள் போடப்பட்டுள்ளன. சிலைகளைத்தான் அகற்ற முடியும், சித்தாந்தங்களை அகற்ற முடியாது. உங்களைப்போன்றவர்களால் அடுத்த தலைமுறை வரலாற்றை அறிந்து கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற தொலைநோக்கு பார்வையில் ஊரில் பாதி பேருக்கு லெனின், ஸ்டாலின், மார்க்ஸ் என்று பெயர் வைத்து வரலாற்றை நிலை நிறுத்திய ஊர் தமிழகம். புதிய இந்தியாக்களுக்கு வடிவம் கொடுக்கும் பிரதமர் மோடிக்கு இந்தியாவை பழைய இந்தியாவாகவே வைத்திருக்க போராடிக் கொண்டிருக்கும் இந்த ஹெச்.ராஜா போன்றவர்கள் கண்ணுக்கு தெரியாதது ஏன்?

(விகடன்)


There is 1 Comment

The Indian people have to rise up against the Hindu fascism .Otherwise they will loose their democratic rights.

Pages

Add new comment

Or log in with...