ஶ்ரீதேவி மரணத்தில் திருப்பம்; குளியல் தொட்டியில் மூழ்கியே உயிரிழப்பு | தினகரன்

ஶ்ரீதேவி மரணத்தில் திருப்பம்; குளியல் தொட்டியில் மூழ்கியே உயிரிழப்பு

நடிகை ஶ்ரீதேவி காலமானார்-Sridevi Passed away
ஶ்ரீதேவியுடன் மகள்கள் ஜான்வி கபூர் (இடது) மற்றும் குஷி கபூர் (வலது)

 

ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக `gulf news’ செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இரத்தப்பரிசோதனை அறிக்கையில் ஸ்ரீதேவியின் இரத்தத்தில் அல்கஹோல் கலந்திருப்பது (Traces of alcohol) உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (24) துபாயில் வைத்து மரணமடைந்த ஶ்ரீதேவி, மாரடைப்பால் மரணமடைந்ததாக முன்னர் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை துபாயில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்க ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி, போனி கபூர், ஸ்ரீதேவி ஆகியோர் சென்றுள்ளனர்.  திருமணம் முடிந்த பின், போனி கபூரும்  மகள் குஷியும் மும்பை திரும்பினர். ஸ்ரீதேவி மட்டும் பொருட்கள் கொள்வனவு (Shopping) செய்ய வேண்டிய வேலை இருப்பதால் துபாயில் உள்ள எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.

மும்பை திரும்பிய போனி கபூர், மனைவிக்கு ஆச்சரியமளிப்பதற்காக, அவரிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் 24 ஆம் திகதி சனிக்கிழமை மீண்டும் துபாய் சென்றுள்ளார். மாலை 5.30 மணியளவில், திடீரென்று மனைவியின் முன்னர் போய் போனி கபூர் நின்றதும் ஸ்ரீதேவி ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்துள்ளார்.

பின்னர், இருவரும் 15 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துள்ளனர். மனைவியை இரவு விருந்துக்கு அழைத்துள்ளார் போனி கபூர்.

தயாராகி வருவதாகச் சொல்லிவிட்டு ஸ்ரீதேவி குளியலறைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராத நிலையில் சந்தேகமடைந்த போனி கபூர், கதவைத் தட்டியுள்ளார். உள்ளே இருந்து சத்தம் வரவில்லை.

பின்னர், ஹோட்டல் உதவியாளர்களுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது, குழியலறையில் மயக்கமடைந்த நிலையில் அவர் காணப்பட்டுள்ளார்.

அதன் பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள், முன்னரே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான தடயவியல் துறையினரின் அறிக்கையைத் துபாய் பொலிஸ், அவரின் குடும்பத்தினர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது. அந்த அறிக்கையில், ஸ்ரீதேவி தற்செயலாகக் குளியல் தொட்டியில் மூழ்கி (accidental drowning) உயிரிழந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை, துபாய் பொது வழக்கு துறையிடம் துபாய் பொலிசார் ஒப்படைத்துள்ளதாக துபாய் ஊடக அலுவலகம் தனது உத்தியோகபூர்வ ட்விற்றர் செய்தில் தெரிவித்துள்ளது.

திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட காட்சி


நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார் (25.02.2018 - மு.ப. 8.28)

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்பு இந்தி திரையுலகம் வரை சென்று தன் காலடியைப் பதித்தவர்.

மரணிக்கும் போது அவருக்கு வயது 54 ஆகும்.

ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்துள்ளார்.

அவர் மரணிக்கும்போது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். மரண செய்தியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

ரஜினி, கமல் போன்ற தமிழின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ஸ்ரீதேவி நடித்திருந்தார். அவர் நடித்த 16 வயதினிலே, மூன்றாம் பிறை போன்றவை முக்கியமானப் படங்கள். திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையுலகுக்கு வந்தார்.

பத்மஸ்ரீ, ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார். அவருடைய மரணம்  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது திரையுலகுக்கு மிகப்பெரும் இழப்பாகும் என பிரபலங்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


There is 1 Comment

Pages

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...