உயிரியல் மூலக் கூறு ஆய்வுக்காக இரசாயனவியலுக்கான நோபல் பரிசு | தினகரன்

உயிரியல் மூலக் கூறு ஆய்வுக்காக இரசாயனவியலுக்கான நோபல் பரிசு

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் நாட்டின் ஸ்டொக்ஹோம் நகரில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம் மற்றும் பெளதீகவியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இதன்படி இரசாயனவியலுக்கான நோபல் பரிசு சுவிட்சர்லாந்தின் ஜாக்குஸ் டுபோசெட், அமெரிக்காவின் ஜோச்சிம் பிரான்க், பிரிட்டனின் ரிச்சர்ட் ஹென்டர்சன் ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது. இரசாயனவியலை புதிய யுகத்தை நோக்கி நகர்த்திய ஆய்வுக்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இம்மூவரும் உயிரியல் மூலக்கூறு வடிவங்களை எளிமையாக படம்பிடித்து ஆய்வில் நுணுக்கங்களை அதிகரிக்க மேம்பட்ட முறையிலான கிரையோ எலக்ட்ரோன் மைக்ரோஸ்கோபியை கண்டுபிடித்துள்ளனர்.

இரசாயன, மருத்துவ துறை ஆகியவற்றில் இந்த கண்டுபிடிப்புகள் முக்கிய பங்காற்ற உள்ளன. விரைவில் உயிர் மூலக்கூறுகள் குறித்த விரிவான, விளக்கமான, நுட்பமான படங்கள் நமக்குக் கிடைக்கும்.

மானுடக் கண்களுக்குத் தெரியாத விடயங்கள் ஏராளமாக உள்ளன, இவற்றை வெற்றிகரமாக படம்பிடிக்கும் போதுதான் விஞ்ஞானத்தில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. இதுவரை இரசாயனவியல் வரைபடங்கள் உயிரிகளின் மூலக்கூறு அமைப்புகளை சரிவர படமாகக் காண்பிக்கவில்லை, படங்களுக்குப் பதிலாக வெற்றிடம்தான் அங்கு இருக்கும்.

தற்போது இந்த நோபல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கிரையோ-எலெக்ட்ரோன் மைக்ரோஸ்கோப் இதனை புரட்சிகரமாக மாற்றியமைக்கும். இதனால் மருத்துவம் மற்றும் மூலக்கூறு துறையில் புதிய கண்டுபிடிப்புகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


There is 1 Comment

Pages

Add new comment

Or log in with...