சட்ட மா அதிபருடன் ஜனாதிபதி மைத்திரி தீவிர ஆலோசனை | தினகரன்

சட்ட மா அதிபருடன் ஜனாதிபதி மைத்திரி தீவிர ஆலோசனை

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நிலை தொடர்பாக அமைச்சர் மனோகணேசன் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன் போது தங்கள் மீதான வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமையை எதிர்த்து கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலையை ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறிய அமைச்சர் மனோகணேசன், கைதிகளின் நிலையால் வடக்கில் தோன்றியுள்ள போராட்ட நிலை தொடர்பிலும் விளக்கியுள்ளார். வடக்கில் நடைபெறும் போராட்டங்களால் அங்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லையென தன்னிடம் பொலிஸ் மா அதிபர் கூறியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக அமைச்சர் மனோகணேசன் கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் கைதிகளின் நிலை தொடர்பாக சட்டமா அதிபருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதன் பின்பு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, 'இந்த வழக்கின் சாட்சிகளாக இருக்கின்ற முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களே தங்களுக்கு பாதுகாப்பு இல்லையெனத் தெரிவித்து வவுனியாவுக்கு செல்ல மறுப்பதாக சட்டமா அதிபர் கூறுகிறார்" என தெரிவித்துள்ளார்.

'இன்று யுத்தம் முடிந்த நிலையில் நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் எவரும் சென்று வரக்கூடிய நிலையில், சட்டமா அதிபர் இத்தகைய முடிவை எடுத்திருப்பது தமிழ் மக்களுக்கு தவறான செய்தியை தருகிறது என நான் எடுத்துக் கூறினேன்"

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோர்ட் குரே மற்றும் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தமிழ்த்தின விழாவை பொறுப்பேற்று செய்யும் எமது கூட்டணியின் பிரதித் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஷ்ணன் ஆகியோரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு (நேற்றுக் காலை) பேசினார்கள். அவர்கள் இருவரும் கூட இது தொடர்பில் எனது கருத்தையே கொண்டுள்ளனரென நான் மேலும் ஜனாதிபதியிடம் கூறினேன்."

இதுபற்றி தான் மேலும் ஆராய்ந்து முடிவை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். 'தமிழ் மக்களை பொறுத்தவரையில் திருப்திகரமான பதிலாக இல்லாமல் இந்த விவகாரம் தொடர்ந்து இழுபறியிலேயே இருப்பதை காட்டுகிறது. இது நமது அரசாங்கத்துக்கு தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற நற்பெயரை பாதிக்கும். எனவே, நியாயமான முடிவை எடுங்கள் என தான் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதாக அமைச்சர் மனோகணேசன் தினகரனுக்குத் தெரிவித்தார். 

 

 


There is 1 Comment

dear minister mano ganeshan you are a shining example for justice courage fair play equality and dharma Bless You

Pages

Add new comment

Or log in with...