விட்டுக்கொடுப்புடன் பேச்சு நடத்த மு.கா தயார் | தினகரன்

விட்டுக்கொடுப்புடன் பேச்சு நடத்த மு.கா தயார்

வடக்குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோம் என ஒரேயடியாக ஒதுக்குவது ஆரோக்கியமானதல்ல.இந்த விடயத்தில் பேச்சுக்கள், விட்டுக் கொடுப்புகள் இடம்பெற ​வேண்டும். அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருக்கிறது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு விடயங்களை சில தரப்பினர் பெரிதுபடுத்தி ஊதிப்பெரிதாக்கி ஏதோ விபரீதம் நடந்தது போன்று காட்டி அரசியல் பிழைப்பு நடத்துவாக குற்றஞ்சாட்டிய அவர், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பான விடயத்தின் போது முஸ்லிம் தனி அலகு என்ற கோரிக்கையும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் பதவிக்கு தமது தரப்பு தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் கருத்தை வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம் தொடர்பில் ஒரு வகை மெத்தனப் போக்கையே கடைபிடிக்க வேண்டியுள்ளது. தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு தொடர்பில்

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி தேவையில்லாத விபரீதம் ஏற்படுத்த ஜே.ஆர் அரசு முயன்றது.

வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம் தனி அலகு என்ற ​கோரிக்கை அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தைகள், முன்னெடுப்புகள் மற்றும் விட்டுக் கொடுப்புகள் இடம் பெற ​வேண்டும். என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோம் என ஒரேயடியாக ஒதுக்குவது ஆரோக்கியமானதல்ல. சிக்கலை ஏற்படுத்த முயலும் தரப்பினருக்கு இது மேலும் தூபமிடுவதாகவே அமையும்.

தமிழ், முஸ்லிம் மக்களிடையில் எந்தவிதமான நல்லுறவும் பேணப்படக்கூடாது என்ற போக்கையே இத்த கையோர் கொண்டுள்ளனர். இது பிழையான அணுகுமுறையாகும் என்றும் அவர் கூறினார்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்ப்பதாகவும் கல்முனையை தனி மாவட்டமாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் கூறியிருப்பது பற்றி வினவியதற்கு பதிலளித்த அவர்,

அது அவரின் சொந்தக் கருத்து .கட்சியின் நிலைப்பாடல்ல. கட்சி மற்றும் ஊர் சார்ந்த உணர்வுகளுடன் சில கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான கருத்துக்களினால் வேறு சக்திகளுக்கு அறியாதவகையில் உந்து சக்தி வழங்குவதாக அமைந்து விடும்.இவற்றை தவிர்த்துக் கொள்வது உகந்தது என்றார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றத்தினூடாகவே அங்கீகரிக்கப்பட வேண்டும். வடக்கையும் கிழக்கையும் இணைக்க இரு மாகாணங்களும் அங்கீகாரம் வழங்கினாலும் அது சாத்தியமாகாது. இவ்வாறான சில காப்பீடுகளும் இருக்கும் நிலையிலே இந்த விடயங்களை சில தரப்பினர் பெரிதுபடுத்தி ஊதிப்பெரிதாக்கி ஏதோ விபரீதம் நடந்தது போல காட்டி அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர். வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் அவசரப்பட்டு பேசுவது அரசியல் பிழைப்புவாத பேச்சுக்கள் மட்டுமே. நாளைக்கே வடக்கும் கிழக்கும் இணைந்துவிடுவதைப்போன்று பேசுகின்றனர்.

முஸ்லிம்களின் உடன்பாடின்றி இதனை செய்ய முடியாது. செய்யவும் மாட்டோம் என சம்பந்தன் கூறியிருக்கிறார். வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முன்னர் எமக்கு தீர்வுக்கு வேண்டிய பொதுவான விடயங்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவேண்டும். அடுத்து இதனை பற்றி ஆராயலாம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம் 


There is 1 Comment

They should function separately Uniting will be a disaster in waiting

Pages

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...