தமிழுலகில் அழிக்க முடியாத நாமம் அறிஞர் அண்ணா | தினகரன்

தமிழுலகில் அழிக்க முடியாத நாமம் அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் (கா.ந.) அண்ணாதுரை நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர்.

அரசியலில் இறங்குவதற்கு முன்பு ஒரு ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். திராவிட கட்சி, திராவிட கழகம் மூலம் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடர்ந்த அண்ணாதுரை பிறகு தன்னுடைய ஆதரவாளர்களுடன் திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற கட்சியை உருவாக்கினார். அரசியல் உலகில் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கிய அண்ணாவின் மறைவிற்குப் பின், இவரது பெயரால் 'அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' (அதிமுக) என்ற கட்சி எம். ஜி. ராமச்சந்திரனால் 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழக முதல்வராக தன்னுடைய முதல்வர் பணியை சிறப்பாகச் செய்த அண்ணாவின் புகழ் உலகெங்கும் பரவியது. இவர் நவீன இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த, வலிமையான அரசியல் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். அது மட்டுமல்லாமல் இவர் அனைவராலும் பாராட்டுப் பெற்ற ஒரு சிறந்த பேச்சாளராகவும், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய எழுத்தாளராகவும் மேடை நாடகராகவும் புகழ் பெற்றார்.

அண்ணா அவர்கள் நடராஜன் மற்றும் பங்காரு அம்மாளுக்கு மகனாக செப்டம்பர் 15, 1909- இல் காஞ்சிபுரத்தில் பிறந்தார். இவர் தனது படிப்பை சென்னையிலுள்ள பச்சையப்பா உயர்நிலைப் பாடசாலையில் தொடங்கினார். தன்னுடைய குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் எழுதுவினைஞராக வேலை புரிந்தார். பிறகு அவர் தன்னுடைய பட்டப் படிப்பை பச்சையப்பா கல்லூரியில் தொடர்ந்தார்.

1930-இல் தனது 21வயதில் ராணியை மணம் முடித்தார். பின்னர் 1934-ல் பி .ஏ (சிறப்பு) பட்டமும், பிறகு எம். ஏ (பொருளாதாரம் மற்றும் அரசியல்) முதுகலை பட்டமும் பெற்றார். தன்னுடைய கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு ஆங்கில ஆசிரியராக பச்சையப்பன் உயர்நிலைப் பாடசாலையில் தனது ஆசிரியர் பணியை தொடர்ந்தார். ஆனால் குறுகிய காலத்திலேயே ஆசிரியர் தொழிலை விட்டு பத்திரிகை மற்றும் அரசியலில் ஈடுபாடு கொண்ட அண்ணா முழு அரசியல்வாதியாக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார்.

தனது கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அரசியலில் ஈடுபட மிகவும் ஆர்வம் கொண்ட அண்ணா 1934 ஆம் ஆண்டு கோயமுத்தூர் மாவட்டம் திருப்பூரில் நடந்த ஒரு இளைஞர் மாநாட்டில் பெரியாரை முதலில் சந்தித்தார்.பெரியாருடைய கொள்கை அவரை ஈர்த்தது. அதனால் பெரியாரின் நீதி கட்சியில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார்.

பிறகு பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீதி கட்சியிலிருந்து பிரிந்து 'திராவிட முன்னேற்ற கழகம்' (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை 1949 இல் உருவாக்கினார். நீதி கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த இவர், பிறகு விடுதலை மற்றும் அதன் துணை பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியராக பணியாற்றினார். அது மட்டுமல்லாமல் 'திராவிட நாடு' என்ற தலைப்பில் ஒரு தமிழ் இதழையும் தொடங்கினார்.

தமிழக முதல்வராக அண்ணா:

1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஒன்பது மாநிலங்களில் தி.மு.க வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி சென்னையில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1967 பெப்ரவரியில் சென்னை மாநில அமைச்சர் ஆனார் அண்ணா. ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார்.

மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 'தமிழ் நாடு' என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அது மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் நிலவும் மூன்று மொழி திட்டத்துக்கு எதிராக தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையை அமுல்படுத்தினார்.

பின்னர் ஜனவரி 3, 1968 ஆம் அண்டு 'இரண்டாம் உலக தமிழ் மாநாடு' நடத்தப்பட்டது. 1968 இல் 'யேல்' என்ற அமெரிக்க பல்கலைக்கழகம் இவருக்கு 'சுபப் பெல்லோஷிப்' என்ற விருதை வழங்கி கௌரவித்தது. இந்த விருதை பெற்ற அமெரிக்கர் அல்லாத ஒரு இந்தியர் என்ற பெருமையை தேடித் தந்தது. பின்னர் அதே ஆண்டில், அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலமாக கெளரவ முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.

அண்ணாவின் இலக்கியப் பங்களிப்பு:

அண்ணா அரசியல் வாழ்க்கையைத் தவிர, நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவராக விளங்கினார். அது மட்டுமல்லாமல் அண்ணாதுரை ஒரு மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்.

அவர் தனக்கே உரித்தான தனிப்பட்ட பாணியில் அனைவரையும் கவர்கின்ற வகையில் பேசும் திறன் மற்றும் எழுத்தாற்றலும் பெற்றவராக விளங்கினார். அவர் பல நாவல்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் சார்ந்த மேடை நாடகங்களையும் எழுதினார். அவர் தனது சொந்த நாடகங்களில் நடித்தும் உள்ளார். மேலும் 1948 இல் எழுதப்பட்ட இலட்சிய வரலாறு மற்றும் வாழ்க்கைப் புயல், ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ., கலிங்கா ராணி ,பாவையின் பயணம் இவரின் முக்கிய படைப்புகளாகும்.

அண்ணாவின் திரைப்பட வாழ்க்கை:

1948 ஆம் ஆண்டு ‘நல்லதம்பி’ என்ற திரைப்படத்தை முதன் முதலில் அரங்கேற்றினார். இந்த படம் ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்தப் படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு 12,000 ரூபாயை பெற்றுத் தந்தது இது அந்த நேரத்தில் ஒரு பெரிய தொகையாகும்.

அதுமட்டுமல்லாமல் இவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி (1949) மற்றும் ஒர் இரவு போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. இத்தகைய திரைப்பட பணியின் மூலமாக இ.நாராயணசுவாமி, K.R. ராமசாமி, N.S. கிருஷ்ணன், எஸ் ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்ற திரை நட்சத்திரங்களின் ஆதரவு இவருக்கு கிடைக்கப் பெற்றது.

இறப்பு:

இரண்டு ஆண்டு காலம் தமிழக முதல்வராகப் பணியாற்றிய அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி இறந்தார். அவர் புற்றுநோயால் அவதிபட்டுக் கொண்டிருந்த போதிலும், தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டார். அவருக்கு புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது.

அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு 'கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்' இடம்பெற்றுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 மில்லியன் மக்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இவருடைய உடல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு இவரின் நினைவைப் போற்றும் வகையில் இவ்விடம் 'அண்ணா சதுக்கம்' என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நினைவுகளை பறைசாற்றும் சின்னங்கள் :

திமுகவில் கட்சி பிளவு ஏற்பட்டு நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனால் 1972 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.இ.அ.தி.மு.க) என்ற புதிய கட்சி அண்ணாவின் பெயரால் உருவாக்கப்பட்டது. அண்ணாவை நினைவு கூரும் வகையில் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புக்கு 'அண்ணா நகர்' என பெயரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு 'அண்ணா பல்கலைக்கழகம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தற்போதிய திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு அவரின் நினைவாக 'அண்ணா அறிவாலயம்' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய வீதியான மவுண்ட் ரோட் 'அண்ணா சாலை' என அவரது பெயரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சிலை கூட அங்கு அமைக்கப்பட்டது, மேலும் 'அண்ணா நூற்றாண்டு நூலகம்' அண்ணாதுரை என்ற உயர்ந்த மனிதருக்கு காணிக்கையாக 2010 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது.


There is 1 Comment

ilam thalai muraikku oru puhal pooththa varalaaru thanthu munmaathiriyaaka vaalnthu kaattiya annave! Ungal adich chuvadikalil enathu paathaththukkum oru idam veandum.. annal nabi pola vaala manam virumbi nallavar anaivaraiyum vaasiththu vantha pothu vallavan ungal varalaaru kidaiththathu... 1000 kodi nandrikal. ungal aathma saanthi pera naadi piraarthikkirean

Pages

Add new comment

Or log in with...