ஈத் பெருநாள் தத்துவமும் உழ்ஹிய்யாவும் | தினகரன்

ஈத் பெருநாள் தத்துவமும் உழ்ஹிய்யாவும்

தங்களுடைய ஆன்மீக கடமைகளைப் பூர்த்தி செய்வதில் இறைவன் உதவியதற்காக அவனுக்கு நன்றி சொல்லும் முகமாக, முஸ்லிம்கள் அனைவரும், சகோதரத்துவ உணர்வோடும், மன மகிழ்ச்சியோடும் கூடும் நாள் தான் ஈத் என்பதாகும். இவ்வாறு நன்றி செலுத்துவது வெறும் பேச்சோடு முடிந்து விடுவதில்லை. அதற்கப்பாலும் சென்று அது சமூக உணர்வுகளையும், மனிதாபிமான உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. ரமழான் மாதத்து நோன்பினை வெற்றிகரமாக நிறைவு செய்த முஸ்லிம்கள் ஏழை எளியவர்களுக்கு செய்வதன் பெருநாளில் தானதர்மங்கள் செய்வதன் மூலமாக (இறைவனுக்குத்) தங்களது நன்றியை வெளிப்படுத்துகின்றார்கள்.

அது போலவே (ஹஜ் பெருநாள்) 'ஈதுல் அள்ஹா' அன்று ஹஜ் கடமையை நிறைவேற்றிய முஸ்லிம்களும் ஏனைய முஸ்லிம்களும் புசிப்பதற்குத் தகுந்த பிராணிகளை அறுத்து எளியவர்களுக்கு பங்கிட்டுத் தந்து (குர்பான்) தங்களுடைய நன்றியை வெளிப்படுத்துகின்றார்கள். தானதர்மங்களையும், குர்பானி பொருட்களையும் வழங்குவது பெருநாட்களின் மிக முக்கியமான அம்சங்களாகும். இவ்வாறு நன்றி செலுத்துவது ஆன்மீக உணர்வையும், மனிதாபிமான உணர்வையும் ஒருங்கிணைக்கும் ஒரு உன்னத செயலாகும்.

ஒவ்வொரு பெருநாளும் இறைவனை நினைவு கூரும் புனிதத் திருநாளாகும். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் வேளையிலும், முஸ்லிம்கள் இறைவனைத் தொழுதே அந்த நாளை தொடங்குகின்றார்கள்.

வறியவர்களுக்கு உதவி செய்கிறார்கள். துன்பங்களில் உழல்பவர்களுக்கு கருணை காட்டுகிறார்கள். நோயுற்றவர்களைச் சென்று பார்த்து, அவர்களுக்கு ஆறுதல் கூறுகின்றார்கள். தங்களைப் பிரிந்து வெளியூர்களுக்குச் சென்றுள்ள நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழத்துக்கள் அனுப்பி அவர்களையும் எண்ணிப் பார்க்கின்றார்கள். இப்படி எல்லோரையும் எண்ணிப் பார்க்கின்ற ஒருநாளாக ஈதுப் பெருநாள் இலங்குகின்றது.

தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளவும், தன்னுடைய ஆசைகளை முறைப்படுத்திக் கொள்ளவும் அறிந்துகொண்ட ஒருவர் பாவம், தவறு, அச்சம், பலவீனம், கேவலம், பொறாமை, பேராசை, ஏளனம் இன்னும் இவை போன்றவற்றிலிருந்து விடுபட்டவராவார். இந்த விடுதலையின் அடையாளமே ஈத் பெருநாளாகும். இந்த பெருநாளை வரவேற்கும் போது அவர் உண்மையிலேயே தனது வெற்றிக்கு விழா எடுக்கின்றார் என்றே பொருள். ஆகவே ஈத் எனும் பெருநாள் ஒரு வெற்றித் திருநாளாகும்.

ஒவ்வொரு ஈத் பெருநாளும் நன்மைகளின் அறுவடை நாளாகும். இறைபணியில் ஈடுபட்டிருந்த நல்லடியார்கள், நம்பிக்கையாளர் அனைவரும் தங்களது நற்செயல்களுக்கான பலன்களை அந்தப் பெருநாளன்று அறுவடை செய்கின்றார்கள். இறைவனும் தனது கருணையையும் பாக்கியங்களையும் வாரி வழங்குகின்றான்.

இதன் அடிப்படையில், மனித நலனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு விடயங்களை அல்லாஹூத்தஆலா அமைத்து வைத்துள்ளான். அந்த வகையில் மனித குலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு துல்ஹஜ் மாதம் நிறைவேற்றும் ஓர் அமலாக உழ்ஹிய்யாவைக் குறிப்பிடலாம்.

நபி இப்றாஹீம் அலைஹிவஸல்லம் அவர்களின் தியாகத்தை வெளிப்படுத்தும் விதமாக பல சோதனைகளை அல்லாஹூத்தஆலா அவருக்குக் கொடுத்தான். அந்த சோதனைகளில் ஒன்றை நினைவு கூரும் விதமாகத்தான் துல்ஹஜ் மாதத்தில் உழ்ஹிய்யா வழங்கும் நிகழ்வு தொடரப்படுகிறது.

பெருநாளுடைய தினத்திலும் அய்யாமுத் தஷ்ரீக் (துல்ஹஜ் பிறை: 11,12,13) நாட்களிலும் அறுக்கலாம் (இப்னு ஹிப்பான்)

ஜாபிர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள் “நாம் ஹூதைபிய்யா உடன்படிக்கையின்போது ஏழு நபர்கள் ஒரு ஒட்டகத்தையும், மேலும் ஏழு நபர்கள் ஒரு மாட்டையும் அறுத்துப் பலியிட்டோம்.” (முஸ்லிம், அஹ்மத், திர்மிதி)

நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் உயர்ந்த கொம்புள்ள ஒரு ஆட்டை குர்பான் கொடுத்தார்கள். அந்த ஆட்டின் வாய், கால்கள், கண்கள் என்பவை கறுப்பு நிறமாக இருந்தன. (திர்மிதி, அபூதாவுூத்)

மேலுள்ள இரு ஹதீஸ்களின் அடிப்படையில் உழ்ஹிய்யா நிறைவேற்றப்பட ஒட்டகை, ஆடு, மாடு ஆகிய மிருகங்கள் தகுதியானவை என்பதை புரிந்து கொள்ளலாம.

வசதிபடைத்தவர்கள் இறை பொருத்தத்தை நாடியவர்களாக ஒட்டகம், மாடு ஆகியவற்றை ஒருவரோ அல்லது ஏழு நபர்களுக்கு உட்பட்டவர்களோ சேர்ந்து நிறைவேற்றலாம். எனினும் ஆடானது தனியாகவே நிறைவேற்றப்படல் வேண்டும்.

முஸின்னத் என்ற பருவமுடையதைத்தவிர மற்​ைறயதை நீங்கள் அறுக்க வேண்டாம். அதனைப் பெற்றுக் கொள்வது சிரமமாக இருந்தால் ஜஸ்அத் எனும் பிராணியை அறுத்துப் பலியிடலாம் என நபியர்கள் கூறினார்ககள் (முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயி, இப்னு மாஜா)

முஸின்னத் என்பது 5 வயதுடைய ஒட்டகத்திற்கும் 2 வயது பூர்தியான ஆடு, மாடுகளையும் குறிக்கும். ஜஸ்அத் என்றால் 4 வயதுடைய ஒட்டகத்திற்கும் 01வயது முழுமையடைந்த ஆடு, மாடுகளையும் குறிக்கும் என இப்னு அஸீர் ரஹிமஹூல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார். எனவே ஒரு வயது முழுமையடையாத எந்த ஒரு பிராணியையும் உழ்ஹிய்யாவுக்காக அறுக்க முடியாது.

கொம்பில், செவியில் பாதியளவு அல்லது அதைவிடக் கூடுதலாகவோ உடைந்த அல்லது அறுபட்ட மிருகங்களை உழ்ஹிய்யாவாகக் கொடுப்பதை நபியவர்கள் தடை செய்தார்கள். (அஹ்மத், திர்மிதி, நஸாயி, அபூ தாவூத், இப்னு மாஜா)

முழுமையாக செவியற்றவை, முற்றாக கொம்புகளற்றவை, பார்வையற்றவை, பலவீனம் காரணமாக சுயமாக எழுந்து நிற்க முடியாதவை, கால்கள் உடைந்த மிருகங்கள் என்பவற்றை உழ்ஹிய்யாவாக அறுக்க நபியவர்கள் தடை செய்தார்கள். (அஹ்மத், அபூ தாவூத்)

ஜூன்துப் இப்னு சுப்யான் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள் “ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தில் நபியவர்களுடன் தொழுதேன்.

தொழுகை நிறைவு பெற்றதும் திரும்பியவுடன் அங்கே எலும்புகளும் அறுக்கப்பட்ட பிராணிகளும் கிடந்தன. தொழுகை நிறைவு பெறு முன்னமே இவைகள் அறுக்கப்பட்டன என்பதை அறிந்த நபியவர்கள், தொழுமுன் அறுத்தவர் அதே இடத்தில் வேறொன்றை அறுக்கட்டும், தொழும் வரை அறுக்காதவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும் என்று கட்டளையிட்டார்கள். (புஹாரி, முஸ்லிம்)

ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை நிறைவு பெற்றதன் பின்னரே உழ்ஹிய்யாப் பிராணி அறுக்கப்படல் வேண்டும் என்பது தெளிவாகின்றது.

அனஸ் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறாரக்ள். நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் இரண்டு பெரிய கொம்புகளையுடைய ஆடுகளை உழ்ஹிய்யாவாகக் கொடுத்தார்கள். அப்போது அவர்கள் தன் பாதங்களை அந்த ஆடுகளின் கழுத்தில் வைத்து மிதித்துக் கொண்டு “பிஸ்மில்லா” என்று கூறியும் அல்லாஹூ அக்பர் என்று கூறியும் அவ்விரு ஆடுகளையும் தன் கரத்தால் அறுத்ததை நான் பார்த்தேன் (புஹாரி, முஸ்லிம், அஹ்மத்) எனவே உழ்ஹிய்யாப் பிராணியை அறுக்கும்போது “பிஸ்மில்லாஹி, அல்லாஹூ அக்பர்” என்று கூற வேண்டும்.

ஆயிஷா றழியல்லாஹூ அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் “ஆயிஷாவே கத்தியைக் கொண்டுவாருங்கள். அதைக் கல்லில் நன்கு கூர்மையாக்கி விடுங்கள் என நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறி ஆட்டைப் பிடித்தார்கள். பின்னர் அதனை சாய்த்துப் படுக்க வைத்தார்கள். பின்னர் அதை அறுத்தார்கள். பின்பு “பிஸ்மில்லாஹி, அல்லாஹூம்ம தகப்பல் மின் முஹம்மதின் வஆலி முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின்” எனக் கூறினார்கள் (முஸ்லிம், அபூதாவுூத், நஸாயி)

எனவே, உழ்ஹிய்யாப் பிராணி அறுக்கப்பட்டதன் பின்னர் மேற்படி துஆவை ஓதுவது நபிவழியாகும்.

ஜாபிர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள் 3 நாட்களுக்கு மேல் உழ்ஹிய்யாவின் மாமிசத்தை உண்பதற்கு தடைசெய்திருந்தார்கள். பின்னர் உண்ணுங்கள், சேமித்து வையுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம், நஸாயி)

எனவே, உழ்ஹிய்யா மாமிசத்தை 3 நாட்களுக்கு மேல் உண்ணலாம், சேமிக்கலாம், தர்மம் செய்யலாம் என்பது தெளிவாகின்றது.

அலி றழியல்லாஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் உழ்ஹிய்யா ஒட்டகங்களை மேற்பார்வையிட நியமித்தார்கள்.

அதன் மாமிசம், தோல், அதன் மீது இருந்த கயிறு போன்ற பொருட்களை தர்மம் செய்யுமாறும் அதை அறுத்தவருக்கு அதில் எதையும் கூலியாக கொடுக்கவும் வேண்டாம் என்றும் கட்டளையிட்டார்கள். நாங்கள் அதற்கு தனியாகக் கூலி கொடுப்போம். (புஹாரி, முஸ்லிம்)

முஸ்லிம்களுடன் இணைந்து வாழக் கூடிய மற்றும் தன் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டினர் மற்றும் முஸ்லிம்களது வீட்டிலோ அல்லது தொழிற்சாலைகளிலோ ஊழியம் செய்பவர்களாக இருப்பின் மனம் விரும்பி கேட்கும்போது உழ்ஹிய்யாவின் பங்காகக் கருதாது தனக்கு கிடைத்தவற்றிலிருந்து சமைத்தோ அல்லது மாமிசமாகவோ கொடுப்பதில் ஆட்சேபனை இல்லை.

எனவே, ஈதுல் அழ்ஹா தியாகத திருநாளை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வதோடு, அன்றைய தினம் நிறைவேற்ற வேண்டிய முக்கிய கடமையான உழ்ஹிய்யாவையும் நிறைவேற்றி அளப்பரிய நன்மைகளைக் பெற்றுக் கொள்வோம். 

 


There is 1 Comment

very important news

Pages

Add new comment

Or log in with...