தொடர் காயங்கள் தான் தோல்விக்கு காரணம் | தினகரன்

தொடர் காயங்கள் தான் தோல்விக்கு காரணம்

சரியாக ஓர் ஆண்டுக்கு முன் உலகின் முதல் நிலை அணியான அவுஸ்திரேலியாவை 3-0 என்று வீழ்த்திய இலங்கை அணிக்கு, தற்போதைய முதல் நிலை டெஸ்ட் அணியான இந்தியா இன்று டெஸ்ட் தொடரை 3-0 என வீழ்த்தி பதிலடி கொடுத்துள்ளது.

கடந்த 12 மாதங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த கடுமையான மாற்றங்கள் இலங்கை கிரிக்கெட்டின் கவலைக்குரிய நிலைமையை எடுத்துக் காட்டுகிறது. ஆனால் இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் இந்தியாவுடனான தொடர் முழுவதிலும் நீடித்த காயங்களை இந்த தோல்விக்கான காரணமாக குறிப்பிடுகிறார்.

“காயங்களே கவலைக்குரிய முக்கிய விடயமாக நான் கருதுகிறேன். அவுஸ்திரேலிய தொடரில் நாம் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருந்தோம். ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. எல்லோருமே பங்களிப்பு செய்தார்கள். இந்த தொடரில் நுவன் பிரதீப் தொடக்கம் சுரங்க லக்மால், ரங்கன ஹேரத், அதற்கு பின் அசேல குணரத்ன என்று பல உபாதைகள் பதிவாகின. கடந்த ஆறு மாதங்களில் இவர்கள் திறமையாக ஆடி வந்தவர்கள். இதுவே பிரதான விடயம். நான் நியாயம் கூறப்போவதில்லை. எம்மால் இதனை விடவும் நன்றாக விளையாடி இருக்க முடியும்” என்று சந்திமால் கூறினார்.

ஒட்டுமொத்தமாக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஆட்டத்தை 5ஆவது நாள் வரை எடுத்துச் செல்ல முடியாதது இந்தியா போன்ற வலுவான அணி ஒன்றுக்கு எதிராக இலங்கையின் தகுதியின்மையை காட்டுவதாக உள்ளது. பல்லேகல டெஸ்டில் இலங்கை இரண்டு இன்னிங்சுகளிலும் 200 ஓட்டங்களைக் கூட எட்டவில்லை. போட்டி மூன்று தினங்களுக்குள் முடிந்ததோடு இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்களால் தோற்றது இலங்கையின் ஐந்தாவது மிகப்பெரிய இன்னிங்ஸ் தோல்வியாகவும், சொந்த மண்ணில் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியாகவும் காணப்படுகிறது.

“எனக்கும் அணியினருக்கும் இது மிகக் கடினமான ஒன்றாகும். இந்தியாவுக்கே அனைத்து பெருமையும் சேர வேண்டும். தொடரில் அவர்கள் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். எம்மால் ஆட்டத்தை ஐந்தாவது தினம் வரை எடுத்துச் செல்ல முடியுமாக இருந்திருந்தால் எதனையாவது கற்றுக்கொள்ள முடிந்திருக்கும். இதற்காக நான் அதிகம் ஏமாற்றம் அடைந்திருக்கிறேன். ஆனால் இரண்டரை தினங்களுக்குள் போட்டியை தோற்றதற்கு எந்த நியாயமும் கூறமுடியாது” என்று சந்திமால் மேலும் கூறினார்.

சிம்பாப்வேயுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு முன்னரே தினேஷ் சந்திமால் இலங்கை டெஸ்ட் அணித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அந்த போட்டியில் இலங்கை 388 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. எனினும் நியுமோனியா காய்ச்சல் காரணமாக அவரால் இந்தியாவுடனான காலி டெஸ்டில் விளையாட முடியாமல் போனது.

அணிக்கு திரும்பியது தொடக்கம் சந்திமால் தனது 4 இன்னிங்சுகளிலும் 94 ஓட்டங்களையே பெற்றார். இதன் ஓட்ட சராசரி 24 மாத்திரமாகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் தொடர் ஒன்றில் சந்திமாலின் இரண்டாவது மோசமான துடுப்பாட்டமாக இது இருந்தது. இந்த தொடரில் இலங்கை அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் அரைச்சதம் கூட பெறாத ஒரே வீரரும் சந்திமால் ஆவார்.

“தொடர்ச்சியான திறமையை வெளிக்காட்டாதது இந்த தொடரில் ஒரு பெரிய பிரச்சினையாகும். நான் குறிப்பிட்டது போல, சில வீரர்களால் எல்லா தொடர்களிலும் திறமையை வெளிக்காட்ட முடியாது. ஒரு மூத்த வீரராக சிறப்பாக செயற்பட வேண்டும்.

அப்போதே இளம் வீரர்கள் அதனை பின்பற்றுவார்கள். ஒரு தலைவராக நான் இதற்கான நியாயத்தை ஏற்க விரும்புகிறேன். வீரர்கள் உளரீதியில் வீழ்ச்சி அடைவதை எம்மால் விட்டுவிட முடியாது. நாம் இந்த செயல் முறையை சரியாக செய்கிறோம். எம்மால் பெறுபேற்றை விரைவாக பெற முடியாது. ஆனால் எதிர்காலம் நான்றாக இருக்கும் என்று நாம் உறுதியாக உள்ளோம். அடுத்த தொடரில் அனைவரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்றார் சந்திமால். 


There is 1 Comment

eannathaan puluvunaalum sari varathu, ithukku munthina Series eallam eanna aacham?????..... poi poththal

Pages

Add new comment

Or log in with...