புத் 64 இல. 33

நந்தன வருடம் ஆடி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரமழான் பிறை 23

SUNDAY JULY 12 2012

 
“நம்பினோரைக் காக்கும் நல்லை வேலன்”

“நம்பினோரைக் காக்கும் நல்லை வேலன்”

நல்லூர்க் கந்தனின் தேர்த் திருவிழா இம்மாதம் 16ஆம் திகதி

குறிஞ்சிக்கடவுளுக்கு குவலயமெல்லாம் தமிழர் கோவிலெடுத்த காலம் மிகப்பழைமையது. இந்த வகையிலே ஈழத்திலே முருகவழிப்பாட்டில் சிறந்த வேற்கோட்டங்கள் தோன்றின. ‘முருகனே வேல், வேலாயுதமே முருகன்” முருகனின்றி வேலில்லை. வேலின்றி முருகனில்லை அது அவனது சக்தி.

கருவறையில் வேல் மல இருளைக் கெடுத்து ஞானமாகிய ஒளியைத் தந்து காக்கும் வேலையே கற்பக்கிருகத்தில் கொண்டு விளங்கும் நல்லை கந்தப்பெருமான் கைதொழுவார்க்கெல்லாம் கருவினை களைத்து நல்லருள் பாலிக்கும் தண்ணருள், மழையாக விளங்குகிறான். நம்பி வந்தவர்களை வெம்பி அழுதிடாமல் காத்துவருகிறான் தும்பிமுகன் தம்பி நல்லைக் கந்தன். அவன் திருவருள் பெற நாம் பூர்வஜன்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். பேரொளி வீசிப்பிரகாசிக்கும் வேலாக விந்தைபுரியும் ஆறுதிருமுகங்களையுமுடைய சண்முகப்பெருமானாக, முத்துக்குமரனாக, பழனியாண்டவனாக, கஜவல்லி மாவல்லி புடைசூழவரும் சுப்பிரமணியனாக நல்லைப்பதி வீதியிற் பவனி வரும் காட்சியைக் காண நாலாயிரம் கண்கள் வேண்டும். அற்புதமான இக்கருத்தை அருணகிரியார் பாடுகிறார்.

“மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை, மெய்ஞான தெய்வத்தை மேதினியில், சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ நானாயிரம் படைத்திலனே அந்த நான்முகனே’’ என்பது அருணகிரியாரின் ஏக்கம். வருடந்தோறும் நடைபெறும் நல்லூர் கந்தனது மகோற்சவத்தின் போது வடிவேற்பெருமான் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன் தோற்றமளிக்கும் காட்சியைத் தரிசிப்பது அத்துனைப்பாக்கியம்.

பரப்பிரம்மமாய் அன்று மால், அயன் ஆகிய தேவர்களுக்கு உள் ஒளியாய்த் தோன்றிக் காட்சி தந்த பரமசிவனே, பன்னிருகரமும் கருணைகூர் முகங்களாறும், கொண்டு சண்முகனாக தோன்றினார்.

சிவம் என்பது பூரணப்பொருளாய் என்று முள்ளதாயுள்ள பொருள் சிவத்திடமிருந்து, அந்த சிவஜோதியாகிய பூரணத்திலிருந்து வெளிவந்த ஜோதி- குக ஜோதியும் பூரணப் பொருளே பிரமனைச்சிறைப்படுத்திய சுவாமி நாதன் முருகன் பின்பு தந்தையாகிய சிவபெருமானுக்கே உபதேசம் செய்பவராகவரும் கதை இந்த பூரண தத்துவத்தையே சுட்டிநிற்கிறது.

இதை ‘உபதேச்ய உபதேச சுபாவ சம்பந்தம்” என்று வடமொழிவேதம் கூறும், உலகுக்கு உண்மை உணர்த்தும் தண்டாயுத பாணி இந்த தத்துவத்தை விளக்கும் பாணியில் தான் மாம்பழத் திருவிழா எனப்படும் தண்டாயுதபாணி உற்சவம் கோவில்களில் இடம்பெறுகிறது.

பூரணமான பரப்பிரம்மம் சிவன். இறைவனிடம் யாவும் அடங்கியுள்ளது என்ற உண்மையை முருகன் அறியாதவர் அல்ல ஆயினும் உலக மக்களுக்கு இப்பெரும் உண்மையை விளக்குவதற்காகவே மயிலின் மீதமர்ந்து உலகையே வலம் வந்தார்.

ஞானப்பழமான கந்தனுக்கு இன்னொரு பழமா?

சுரமுனிவர் நாரதருக்கு ஒரு அற்புதமான மாங்கனி கிடைத்தது. அதனை எவ்வாறாயினும் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற கருத்தோடு நாரதர் “சம்போ மகாதேவா” என்று சிவ நாம உச்சாடனத்தோடு திருக் கைலாசத்துக்கு செல்கிறார் சக்திதத்துவத்தை வெளிப்படையாகக் கொண்ட முருகப் பெருமான் அன்னை பார்வதியின் அருகே அமர்ந்திருக்ந்தார். மூத்த விநாயகன் ஐயனின் அருகில் அமர்ந்திருக்கிறார். தேவனும் தேவியும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அற்புதமான வேளை சிவகுடும்பத்தின் திவ்விய தரிசனத்தை பெற்று அடிபணிந்த நாரதமுனிவர் ஐயனின் கைகளில் தாம் கொணர்ந்த கனியை நீட்டினார். கனியைக் கண்ட பாலர்களான கணேசனும் குமரனும் சும்மா இருப்பார்களா? ஐயன் புன்முறுவலோடு நாரதரைப் பார்த்து “நாரதர் என்ன மீண்டும் எம்மிடத்திலே குருகலகத்தை ஏற்படுத்தத் தான் வந்தாயா?” என்றார் அப்பன் சிவன். “ஐயையோ கடவுளே தாங்கள் அறியாததா? இக்கனியின் மூலம் உலகத்துக்கு உண்மையை வெளிப்படுத்துவீர்கள் என்ற எண்ணத்தில் தான் இக்கனியை தந்தேன்” என்றார் சுரமுனியான நாரதரிஷி அப்போது எம்பெருமான் அவர்கருத்தை ஏற்பதாகத் தெரிவித்து அக்கனிக்காக ஒரு பந்தயம் நடத்த தீர்மானித்தார்.

“கணேஷா - முருகா இருவரும் கேளுங்கள்! உங்களில் எவர் இந்த உலகத்தை முதலில் சுற்றி வலம்வந்து திரும்புகிaர்களோ அவருக்கு இந்த மாங்கனியைத் தருவேன் என்றார்”

என்றும் இளையனாய், அழகனாய், ஏறூர்ந்தான் ஏறென விளங்கும் முருகன் உடனே தன் மயிலில் துள்ளி ஏறி உலகத்தை ஒரு நொடியிலே சுற்றி வந்துவிடுவதாகக் கூறிப்புறப்பட்டார். பானைவயிற்றுப் பெருமான் மூத்த பிள்ளை கணேசன் ஒரு கணம் யோசித்தான்.

“தந்தையே அம்மையாரே தாங்களிருவரும் தானே உலகில் நிறைந்திருப்பவர்கள். எமக்கு தாயும் தந்தையுமாய் உருவாய் அமையும் நீங்களின்றி இந்த உலகம் ஏது- எனவே நான் தங்களிருவரையும் வந்து சுற்றி விடப்போகிறேன். “என்று கொஞ்சுமொழியில் கூறிக் கொண்டே வலம் வந்து, ஐயன் கையிலிருந்து அற்புத மாங்கனியையும் பெற்றுக்கொண்டார். மயிலிலேறி உலகத்தைச் சுற்றிவந்த குமரனுக்கு மாங்கனி கிடைக்க வில்லை. ஞானமூர்த்தியான தமையன் செயலால் தம்மைத் தேற்றிக் கொண்டவர். பழனியாண்டியாகி குன்றின் மீதமர்ந்து கொண்டார்.

இறைவன் நடத்திய நாடகம் இந்த நாடகத்தை இறைவனே நடத்திவைத்து உலகம்யாவும் இறைவனில் அடக்கம் என்ற உண்மையை மக்களுக்கு புலப்படுத்தினார். மூத்தகணபதியின் அனுபவஞானமுதிர்ச்சியை இவ்வரலாற்றிலே கண்டு மகிழும் யாம் ஞானப்பழமான முருகனின் லீலைகளை கண்டு மெய்சிலிர்க்கிறோம்.

எத்தனை அற்புதமான உற்சவத்தை நல்லூரில் கண்ட நாம், நல்லைக் கந்தனை நாடி காலடிகளோடு வரும் பக்தர்களின் பக்தி மெய்ப்பாடுகளை அவன் கார்த்திகை உற்சவத்திலும், தேர்த்திருவிழா என்றும் தீர்த்த உற்சவத்திலும் கண்டு நெகிழ்வோம். பக்தியில் உன்மத்தராகி ஆடும் காவடி ஆட்டக்காரர்கள் உள்ளத்தில் முருகன் குடி கொண்டு ஒருவித வைராக்கியத்தை ஏற்படுத்தி விடுகிறான். நல்லைக்கந்தன் அவன் திருவடியை நினைத்து நல்லூர்த் தேசியன் யோகசுவாமிகள் பாடிய,கீர்த்தனைகளை பாடிப் பாடி காவடிகள் ஆடுவர்.

நல்லைத் தேர்திருவிழாவில் காவடிகள்

“நல்லூரான் திருவடியை

நான் நினைத்த மாத்திரத்தே

எல்லாம் மறப்பேனடி - கிளியே

இரவுபகல் காணேனடி”

தேவர் சிறைமீட்ட செல்வன் திருவடிகள்

காவல் எனக்காவடி - கிளியே

கவலையெல்லாம் போகுமடி

பஞ்சம் படை வந்தாலும் - பாரெல்லாம் வெந்தாலும்

அஞ்சுவமோ நாங்களடிகிளியே! ஆறுமுகன் தஞ்சமடி’’

ஆடி மாதம் அற்புதமான மாதம் அன்னை பராசக்தி, முத்துமாரியாக காளிதேவியாக துர்க்கையாக நின்று அடியார்களின் குறைதீர்க்கும் நோன்புகள் நிறைந்த மாதம் ஆடிப்பிறப்பு, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கார்த்திகை ஆடிச்செவ்வாய் என்பன அற்புதமாக ஒளிரும் காலம். கோவில் தோரும் பால்குடபவனியும் பொங்கலும் படையலும் அற்புதமான இம் மாதம் முருகவழிபாட்டுக்கும் உகந்தது “ ஆடி விரதம் தேடிப்பிடிக்கும் சைவமக்களுக்கு கதிர்காம கோவிலின் திருவிழாவும் ஆடி மாதத்து அமாவாசையைத் தொடர்ந்து வரும் சட்டிதிதியில் நல்லூர்க்கந்தனின் மகோற்சவமும் ஆரம்பிப்பது நிறைவானது. முருகனுடைய திருவருளினால் அவனது அருள் களப்பினால் தான் உலகமே வாழ்வைப் பெறுகிறது என்று நம்புபவர்கள் நம் சைவத்தமிழ்மக்கள் ஆபத்பாந்தவனாக கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளுபவன்.அசுரரை அழித்து வாழ்வு நல்கிய பெருமான், எம்மையும் காப்பான்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.