தமிழர் பிரதிநிதித்துவம் என்பது சப்ரகமுவவிற்கு மட்டும்தானா?
தமிழர் பிரதிநிதித்துவம் என்பது
சப்ரகமுவவிற்கு மட்டும்தானா?
சப்ரகமுவ மாகாணத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவதற்காக நடைபெறவுள்ள
மாகாணசபைத் தேர்தலில் புதியதொரு வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக எவருமே கனவில்
கூட நினைத்தும் பார்க்காத வகையில் ஓர் அரசியல் கூட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரசியலில் எதிரும் புதிருமாக, கீரியும் பாம்புமாக இருந்த அமைச்சர் ஆறுமுகன்
தொண்டமானும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் தமக்கிடையே கூட்டு
வைத்துச் செயற்பட முன்வந்துள்ளனர். இதனை மலையகப் பெருந்தோட்ட மக்கள் மட்டுமன்றி முழு
நாட்டிலும் வாழும் தமிழ் மக்களும் வரவேற்றுள்ளனர்.
ஏன் இந்தத் திடீர் கூட்டு? இது உண்மையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை
ஏற்படுத்துவதற்குத்தானா அல்லது வேறு ஏதாவாது நிகழ்ச்சித் திட்டத்திற்கான
முன்னேற்பாடா ? என்ற கேள்விகள் பலரது மனங்களில் எழுந்தாலும் ஒரு இலட்சத்திற்கும்
அதிகமான தமிழ் மக்கள் வாழும் சப்ரகமுவ மாகாணத்தில் குறைந்தது மூன்று தமிழ்ப்
பிரநிதிகளை தெரிவு செய்வதற்காக இப்போதாவது ஒன்றுபட்டுச் செயற்பட முன்வந்தமை
வரவேற்கக் கூடியதொரு விடயமே.
அமைச்சர் ஆறுமுகன், மனோ கணேசன் கூட்டிற்கு மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினி
சந்திரசேகரனும் தனது ஆதரவை வழங்குவது மேலும் பலம் சேர்ப்பதாக உள்ளது.
இரத்தினபுரியில் நடைபெற்ற முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் இம்மூவரும் ஒரே
மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்தமையைக் கண்டு மகிழ்வுறாத தமிழர்கள் இருக்கவே முடியாது.
தமது சொந்த விருப்பு வெறுப்புகளை உதறித்தள்ளிவிட்டு சமூக சிந்தனையுடன் இத்தலைவர்கள்
செயற்பட முன்வந்தமை இவர்களது தலைமைத்துவப் பண்பையும், ஆளுமையையும் எடுத்துக்
காட்டுகிறது. சப்ரகமுவவில் இதுவரை காலமும் தமிழரது வாக்குகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்
கட்சிக்கு அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கே கிடைத்து வந்தன. இவ்விருகட்சிகளிலும்
போட்டியிடும் இ.தொ.கா. வேட்பாளர் ஒருவரே தெரிவாகும் வாய்ப்பும் கிடைத்து வந்தது.
குறைந்தது மூன்று அல்லது நான்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யக் கூடிய மக்கள் பலம்
இருந்தும் கூட கூட்டு வைக்கும் பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் அதன் பெரும்பான்மையின
வேட்பாளர்களுக்கும் வாக்குகளைத் தாரை வார்ப்பதால் தமிழர் தெரிவாவது தடுக்கப்பட்டுக்
கொண்டு வந்ததே வரலாறு.
ஆளும்கட்சியுடன் கூட்டு வைத்திருப்பதால் அதற்குப் பங்கம் ஏற்படுத்தி பகைமை
காட்டக்கூடாது என்பதற்காக இதுவரை காலமும் தமிழர் பிரநிதித்துவம் பற்றி எவருமே
சிந்தித்தது கிடையாது. அத்துடன் தமிழர் கட்சிகளுக்கிடையேயான போட்டி, பொறாமை காரணமாக
அவை சமூகத்தை மறந்து தம்மை வளர்த்துக் கொள்பவை களாகவே இருந்து வந்துள்ளமையும்
மறுக்கப்படாத உண்மை.
இந்நிலையில்தான் இவை எல்லாவற்றையும் மறந்து, புறந்தள்ளியதாக சப்ரகமுவவில் புதிய
சிந்தனைக்கு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது வெற்றியளிக்கும் பட்சத்தில்
பாராளுமன்றத் தேர்தலிலும் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்தும், கேகாலை
மாவட்டத்திலிருந்தும் நிச்சயமாக ஒவ்வொரு தமிழ் பிரநிதிதிகளை இலகுவாகப் பெறும்
வாய்ப்பு தமிழ்க் கூட்டுக் கட்சிகளுக்குக் கிடைக்கும். எனவே அந்த எதிர்கால நலன்
கருதி கூட்டுக் கட்சிகள் தமக்கிடையே ஒற்றுமை, புரிந்துணர்வு, விட்டுக்
கொடுப்புக்களுடன் செயற்பட வேண்டும்.
தேவைக்குக் கூட்டு, தேவை முடிந்ததும் கழற்றிவிடல் என்பதாகவோ, உள்ளொன்று வைத்துப்
புறத்தில் வேறுவிதமாக நடந்து கொள்வதோ உண்மையான கூட்டிற்கு அபத்தம். கடந்துவந்த
காலங்களில் சில பல தேவைகளுக்காக இத்தகையை திடீர் கூட்டுக்கள் தோன்றிப் பின் மறைந்ததை
நாம் நினைவிற்கொண்டிருக்க வேண்டும். அரசாங்கத்தையும், அதன் நல்ல செயற்பாடுகளையும்
எந்நேரமும் விமர்சித்தும், எதிர்த்தும் அறிக்கை மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும்
தமிழ்த் தேசியவாதி மனோ கணேசன், தான் சார்ந்த மலையக மக்கள் பற்றியும் சிந்திக்க
முன்வந்திருப்பது நல்ல விடயம். அதே சமயம் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக
இருக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அரசிற்குத் தனது நிலைப்பாட்டைத்
தெரிவித்துவிட்டு வழமை போன்றே சமூக சிந்தனைக்கு முதலிடம் கொடுத்துள்ளமையை பாராட்டவே
வேண்டும்.
அரசாங்கத்தின் முழு அமைச்சரும், அரசை முழுநேரமாக எதிர்ப்பவரும் தாம் சார்ந்த
சமூகத்திற்காக ஒன்றுபட்டு கூட்டுச் சேர்ந்துள்ளதை மக்கள் பல்வேறு கோணங்களில்
நோக்கினாலும் இறுதியில் அது நன்மையையும், வெற்றியையும் தரும்போது இப்போது எழும்
சந்தேகங்கள் யாவும் தீர்ந்து விடும். தமிழர் பிரநிதித்துவத்திற்காக என்று துணிந்து
புறப்படுள்ள இரு தலைவர்களுக்கும் இடையூறாக எவரும் நிற்கக் கூடாது. குறிப்பாக ஐக்கிய
தேசியக் கட்சியில் வேட்பாளராக நிற்கும் தமிழ் உறுப்பினர்கள் தமிழர் வாக்குகளைச்
சிதறடிக்க இடம் கொடுக்காது உடனடியாகவே போட்டியிடுவதிலிருந்து தம்மை விலக்கிக் கொள்ள
வேண்டும். அதுவே அவர்கள் தமது சமூகத்திற்குச் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்.
தமிழர் ஓரணியில் நிற்கிறோம் என்பதை இவர்கள் சகல பெரும்பான்மை கட்சிகளுக்கும்
உணர்த்த இதனைச் செய்தே ஆகவேண் டும்.
அடுத்ததாக அமைச்சர் ஆறுமுகன், மனோகணேசன் கூட்டு சப்ரகமுவ வுடன் மட்டுப்படுத்தப்படக்
கூடாது என்பது பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. மலையகத்தின் ஏனைய மாகாணங்களுக்கும்.
மாவட்டங்களுக்கும், பிரதே சங்களுக்கும் இக்கூட்டு முன்னெடுக்கப்பட வேண்டும்.
குறிப்பாக களுத் துறை, காலி மாவட்டங்களிலும் மலையக மக்கள் வாழ்கிறார்கள். அங்கும்
சப்ரகமுவ நிலையே அம்மக்களுக்கு உள்ளது. அம்மக்களுடன் தலைவர்கள் ஒன்றிணைந்தால் அப்
பகுதிகளிலும் தமிழர் பிரநிதித்துவம் காப்பாற்றப்படும்.
அங்குள்ள மக்கள் பலர் தாம் தமிழர் என்பது தெரியாமலேயே வாழ்ந்து வருகிறார்கள்.
சிங்கள மொழியில் பேசுகிறார்கள் பிள்ளைகள். சிங்களப் பாடசாலைகளில் கல்வி
கற்கிறார்கள். தமிழருக்கான கலாசாரம் மட்டுமே அங்கு காணப்படுகிறது.
மலையகம், பெருந்தோட்டத்துறை என்றதும் தொழிற்சங்கங்கள் கண்டி, நுவ ரெலியா, மாத்தளை,
தலவாக்கலை, பதுளை போன்ற நகரங்களைப் பற்றியே சிந்திக்கின்றன. காலி, களுத்துறை,
மத்துகம, இங்கிரிய பகுதிகளில் எத்தனை மலையக மக்கள் வாழ்கிறார்கள் என்பது
எத்தொழிற்சங்கத்திற்காவது பூரணத்துவமான விபரங்களுடன் தெரியுமா என்றால் நிச்சயம்
தெரியவே தெரியாது. எனவே சப்ரகமுவவில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டு மலையகத்தின் ஏனைய
பிரதேசங்க ளுக்கும் விஸ்தரிக்கப்படுவதுடன் தொழிலாளர்களது சம்பள உயர்வுக்கும்,
அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்வடைவதற்கும் உந்துசக்தியாக அமைய வேண்டும் என்பதே எமது
எதிர்பார்ப்பாகும்.