பச்சைக்
கிளியே! பவளப்
பகட்டாம் சொண் டுக்கிளியே!
இச்சைக் கினியே பறவைநீ
இவ்விடம் விட்டகன்று
உச்சமாம் மக்கா பதியில்
உழைத்திடு மென்தலைவன்
நச்சிடும் சேதியைக் கூற
உதவிடு பைங்கிளியே!
-*-
கொண்டவர் பாலை வனத்தில்
கெடுபிடி வேலையிலே
மண்டையைப் போட்டுக் குழப்பி
மயிரில்லை யென்று சொன்னார்!
அண்டையில் பட்ட கடனோ
அடைபடத் தோதுமில்லை!
சண்டையில் சாய்ந்த குடும்பச்
சகதியும் நீங்கலை யே!
-*-
அறபியும் கூலி ஒழுங்காய்
அளிப்பதாய் இல்லையென்று
இறம்ழான் பிறந்திடு முன்னே
நவின்றது வாட்டுதென்னை
பிறப்பது நோன்புப் பெருநாள்!
புதுவுடை கேட்டு மக்கள்
முறைப்பதை நீயும் முறையாய்
மொழிந்திடு பைங்கிளியே!
-*-
ஊரெல்லாம் நோன்புப் பெருநாள்
உசார்ப்படும் இந்த வேளை
சீரில்லை எங்கள் மனையில்
சிரிப்பில்லை மக்களிடம்!
நீரில்லாப் பாலை வனமான
நம்நிலை நீயறிவாய்!
யாரிடம் சொல்வேன் இழிவை-நீ
யேதூது செல் இனிதே!
நோன்பாம் நோன்பு
- இ. ஷமீலா இஸ்மத் -
மாதங்களில்
ரமழான் வந்ததும்
மனிதனுக்கு ஞாபகமும் வரும்
அதுதான் புனித நோன்பு
அன்று என்றும் மறவாதது.
நம் மனிதர் பலரிடையே
பழக்கப் படுத்திய மாதமானது
இனிது பழக உகந்தது
இனிமையான நோன்பாகும்
மக்கள் மத்தியில் பிரபல்யமானது
நோன்பு என்றால் வேறெதுவும்
அதைப் போன்று ஈடாகாது
மனம் முழுவதும் நிறைந்திருந்தது.
வானவர் போற்றிய ஐந்து கடமைகளிலும்
வாஞ்சையான நோன்பானது நான்காவது
தோன்றியதும்
பெண்கள் அனைவரும் உதவிக்கொள்ளும்
ஆண்கள் மத்தியில் பரபரப்பை கொண்டு
வரும் நோன்பு
உலகம் முழுதும் உவகை பொங்க
உன்னதமான நோன்பு இறைவனிடம்
இருந்து
எம்மை வந்து சேர்ந்தமை குறித்து
எல்லோரும் பரவசம் அடைய வேண்டும்
நோன்பு வந்ததுவே நோன்பு வந்ததுவே
இல்லம் இன்புற உள்ளம் உவகையாக
இருப்பதற்கென்று வந்த நோன்பை
வாழ்த்தலே வையகம் போற்றவே போதும்
மனிதனாகவாழடா
- சுலைமா சமி இக்பால் -
அன்பு மகன் நீயடா
ஆசை பொங்க பாரடா!
மாண்புடன் வாழ்ந்த நீ
மாணிக்கமாய் ஒளி வீசடா!
ஏடெடுத்துப் படித்து நீ
ஏற்றம் பல காணுவாய்!
நாடு போற்ற வாழவே
நாயன் துணையாகுவான்!
மண்ணில் உலவும் நிலவு நீ
மடியில் பூத்த மலரும் நீ!
கண்ணில் நிறைந்த செல்வமே
காலமெல்லாம் சிறந்து வாழ்!
உண்மை என்றும் பேசடா
உத்தமனாய் வாழடா!
நன்மை செய்து நாளுமே
நாடு போற்ற வாழடா!
பெற்றோர் தம்மை பேணடா
பணிகள் செய்து வாழடா!
கற்றோர் பேச்சை கேளடா
கண்ணியமாய் வாழடா!
ஏழை எந்தன் செல்வமே
என் கண்ணின் மணி நீயடா!
நாளை இந்த உலகிலே
நல் மனிதனாக வாழடா!
செய்து
பார்...
- எஸ். வை. சசீகரன் -
உனக்கு
குருதி
எங்கிருந்து?
படைத்தவன்
கொடுத்தான்
என்பாய்
செய்துபார் குருதிக்கொடை
எங்கோ ஓர்
உயிருக்கு
படைத்தவனுக்கு
நிகராவாய்
சுவடுகள் தடயங்களாகட்டும்
- நீலா பாலன் -
விதையாய்
இருந்த உன்னை
நீரூற்றி நான் வளர்த்தேன்
வெய்யிலில் நான் வேகுகையில்
நிழல்தந்து குடைபிடித்தாய்
கடல் அலைகள் நடக்கையிலே - வானம்
கைபோட்டு அதனை அள்ளும்
தரை அனலாய்க் கொதிக்கையிலே
தண்ணீராய் மழையைத் தள்ளும்
அவருக்கு இவரென்றும்...
இவருக்கு அவரென்றும்...
தருணம் அறிந்துதவுவதே
தர்மத்தில் பெருந்தர்மம்
“ஆயிரம் நன்றிகள் - அகிலத்தில் என்னை
அனைத்தும் பெற்ற ஜீவனாய் படைத்தமைக்கு!
ஆனால்.... முழுதா யதை
அனுபவிக்கும் முன்னமே அதிரடியாய்
ஓர் அஞ்சல் வந்ததே?!”
“ம், அப்படியா?... என்ன அது?”
“உலகனைத்தும் ஈராறில் அழிவதாய் உண்மைதானா?”
“ஹா, ஹா நல்ல நகைச்சுவை,
அன்று யாம் படைத்த வண்ணமாய்
இன்னுமிந்த உலகு இருக்கிறதா என்ன?
அனைத்தும் அழிந்துதானே நிற்கிறது?”
“இல்லையில்லை, இப்படி நிகழ வேண்டுமென்பது
உமது நியதிதானே, இதில் எம் பங்கென்ன இருக்கிறது?”
“எது, எப்படி, எவ்வாறு ஏனென்ற எமது நியதி
எம் படைப்பின் அரிதான மானிடரால்
மாண்டு கொண்டு இருக்கிறதே!”
“அனைத்துமே நீதான் - அனைத்திற்குமே நீதான்”
“அது சரி இப்படி என் - பெயரைச் சொல்லித்தானே
அளவு கடந்த அநீதி நடக்கிறது?!”
“சரி சரி சன்மானம் கொடுத்தால் - எல்லாம்
சரியாகி விடுமா?”
“மனிதாபிமானமும், மானமும் இன்று பணத்தால்
மாலையிடப்பட்டன. ஐயகோ!
மாண்புடன் படைத்த இவ்வுலகே
மாசடைந்து போனதை யாம் கண்டோம்!
மாற்றம் ஒன்று தேவையென மறுபடியும்
மாற்றி தீர்ப்பை எழுதியுள்ளோம்! - இனியென்ன
மாற்ற வேண்டியது தான்!”
“அடடா, நீ அன்புள்ளவன் என வேதம் சொல்கிறதே”
அதிரடி முடிவு தேவைதானா?
“அழிவு என்றவுடன் அன்பை நினைக்கிaர்களே
அனைத்திற்கும் தலைவன் எமக்கே உபதேசமா?”
“மன்னிக்க வேண்டும் - அடியேன் இதற்கு என்ன செய்ய வேண்டும்?”
“ஆறறிவுடன் எம் சாயலாய் உமைப்படைக்க
அன்றிலிருந்து இன்று வரை அகிலம் அமைதியே காணவில்லை
அதுவே தானாய் அழித்துக் கொள்ள - அடுத்தினி புதுயுகந்தான்....
அங்கே ஒரு குரல் அழைக்கிறது உமதழைப்பைத்
துண்டிக்க வேண்டியிருக்கிறது!!”
“ஐயோ இங்கும் இடைஞ்சலா!, ஹலோ ஆண்டவா நன்றி
நாளை தொடரலாம் அப்பப்பா, ஆயிரமாய் வியர்த்து விட்டது
எங்கே அந்த ஏ.சியைப் போடுங்கோ, கொஞ்சம் இலேசாக வேண்டும் மனம்”
ஆன்மிக முதிர்ச்சி அளிக்கும் திங்கள்
- கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி -
கடிவாளம் அற்ற மனக்
குதிரைக்குப் பசியே தான்
கடிவாளம் ஆகுமெனக்
காட்டும் திங்கள் - இறை
கட்டளைக்கும் பசிக்குந் தொடர்
பூட்டும் திங்கள்
பருகாமல் புசிக்காமல்
பசித்திருத்தல் மூலமெமக்
கான்மிக முதிர்ச்சியினை
அளிக்குந் திங்கள் - அருள்
கொழிக்குந் திங்கள்!
ஆன்மிகப் பயிற்சிக்கு
ஆதார சுருதியாய்
ஆகி, அருள் நாதத்தை
மீட்டுத் திங்கள் - அப்
பயிற்சியிலே இணைந்தோர்தம்
பாவத்தின் கறையெல்லாம்
ஓட்டுந் திங்கள் - மணங்
கூட்டும் திங்கள்!
நெஞ்சங்கள் இனிதுவக்கும்
நிறைவான ஆன்மிக
நிகழ்வுகளி னூடு அருள்
பொழியுந் திங்கள் - பாவம்
அழியுந் திங்கள்! - நம்
சொந்தங்கள் சுற்றங்கள்
சூழவர உள்ளவர்கள்
எல்லோரும் இறைவனுக்குப்
பணியுந் திங்கள் - மனங்
கனியுந் திங்கள்!
எண்டிசையும் எழில்நிறைந்த
இவ்வவனி படைத்தாளும்
அந்தமிலான் அருளிவைத்து
‘ஆஹிறப்’ பாதை! - நாம்
போகிற பாதை!
அண்டிவரும் மரணத்தை
அடுத்துவரும் வாழ்வுக்கு
ஆயாத்த மாகும்படி
கூறும் மாதம் - நல்லமல்
ஊறும் மாதம்!
அம்மா
- உதயகுமார் -
நல்ல
கவிதைகள் நான் படைக்க
என்னைப் படைத்த
அழகிய கவிதை
என் அம்மா!
அம்மாவின்
அருகிலிருந்த காலங்கள்
இனிமையாகவும்
இங்கிதமாகவும்
சுகம் வளர்ந்த காலங்கள்
என்பேன்...!
எங்கள் அம்மா
அதிக தூரம் நடப்பாள் ...
துலாபிடித்து இழுத்து
தண்ணீர் அள்ளி
தலைமேல் சும்மாடு அணையாக...
மண்குடத்தில்
தண்ணீர் நிறைந்திருக்கும்
தலையிலும் இடுப்பிலும்
தண்ணீர்க்குடங்கள் கனந்துகொள்ளும்
வெயிலிலும் மழையிலும்
காததூரம் நடந்து
தண்ணீர் அள்ளிவந்து
எங்கள் தாகம் தீர்த்து வைப்பாள்!
மாலை நேரங்களில்
கிணற்றடி கூட்டிச் செல்வாள்
நாங்கள் இளவல்கள் ஐவரும்
வரிசையாக இருந்து
அம்மாவின் அழைப்பிற்காகக்
காத்திருப்போம்!
ஒவ்வொருவராக
எங்களை
அம்மா அழைப்பாள்...!
அழகாகவும்...
அவதானமாகவும்...
குளிப்பாட்டுவாள்...!
ஆழமான கிணற்றின்
துலாக்கொடி பிடித்து
துள்ளித் துள்ளி...
இழுத்து வலித்து...
தண்ணீர் அள்ளிக்
களைத்துப் போவாள்
அம்மாவின் சுமைகளும்!
அம்மாவின் வலிகளும்!
அறியாத பிள்ளைகளாக
அன்று நாங்கள்!
நானும் தம்பியும்
அம்மாவிற்கு ஓட்டம் காட்டுவோம்
சிறு கம்பு முறித்து வந்து
எங்களைக் களைத்துப் பிடித்து
வந்து குளிப்பாட்டுவாள்!
ஒவ்வொரு சனியும்...
விடியற் பொழுதில்
தலையிலும் உடலிலும்
நல்லெண்ணெய் தேய்த்து...
சூடுகலைத்து...
ஒவ்வொருத்தருக்கும்
இருபத்தொரு வாளி தண்ணீர்
என்று அள்ளி முழுகவார்ப்பாள்!
முழுக்கு முடித்து
தலை ஈரம் துவட்டி
உச்சி வகிடெடுத்து
பவுடர் போட்டு
சுட்ட உள்ளியைப்
பக்குவமாகப் பிரித்து
எடுத்து
ஊட்டி விடுவாள்...
இத்தனை
உன் செயல்களிலும்
இத்தனை
உன் அர்ப்பணிப்புகளிலும்
உன் பக்குவம் உணர்ந்தோம்
அம்மா...!
எங்களுக்காக
நீ பெற்ற சுமைகளும்
எங்களுக்காக
நீ கொண்ட வலிகளும்
எங்கள் இதயங்களில்
வரி வரியாக
வந்து விழுந்து
வலிமை பெறுகின்றன...!
எத்தனை
உறவுகள் எங்களுக்கென்று
இருந்த போதும்
உனக்கு மட்டும் எப்பிடி...?
எங்களுக்காகவே
இப்படி வாழ முடிந்திருக்கிறது!
அம்மாவின் பெருமைகளும்
அம்மாவின் கருணைகளும்
அம்மாவின் தியாகங்களும்
நன்கு உணர்ந்தோமே
இன்று!
தன் நலம் கருதாமல்
தன்னடக்கமாக வாழ்ந்த விதமும்
தன்பசி மறந்து எங்கள்
பசிகாத்த முறையும்
தன்பிணிக் காலங்களிலும்
எங்களுக்கான
தன்பணி மறக்காத திறனும்
தானாக நினைத்து ஊனாகத் தன்னை
உருக்கிய கொடையும்
உன்னை விஞ்ச
இங்கே
எவர் உண்டு என்று
சொல்லுங்க அம்மா...!
சொல்லுங்க...!
அம்மா...! அம்மா...!
அம்மா...!
எங்களுக்காகவே
வாழும் அம்மா
அம்மாதான்...!
நாள் வருமோ
- மூதூர் கலைமேகம் -
மனம் விரும்பி காதலித்தாள்
மடல் மடலாய் எழுதி வந்தாள்
கண மென்னைக் காணாது
கண்ணுறங்காத் தவித்திடுவாள்
மானமது அவள் நடத்தை
மணம் புரிய நாள்வருமோ!
எத்தனையோ தடைதாண்டி
என்னோடு உறவாடி
உத்தமனாய் மதித்தவளை
உதறி விட எண்ணலாமோ
சொத்தென்றால் அவளல்லவோ
சேரும் நாள் வருமாமோ!
பெண்ணினத்தின் கண்ணாவாள்
புதுமைப் பெண் அவளாவாள்
எண்ணத்தில் எனை இருத்தி
இன்ப முறும் ஏந்திளையாள்
வண்ணமுள்ள விழி மாதை
வாழவக்க நாள் வருமோ!