இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுவர் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு என்பன அரசு
மற்றும் பல நிறுவனங்களால் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் அவற்றின் பலனை
சிறுவர்கள் அனுபவிப்பது மிகவும் குறைவாகவேயிருக்கிறது
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமும் கூட பல செயன்முறைகளை நடைமுறைப்படுத்திய போதும் இவை
எந்தளவிற்கு சாத்தியப்பாடாக உள்ளது என்பது கேள்விக்குறியாகவேயுள்ளது.
இலங்கையில் சிறுவர்களின் தொகை 4.3 மில்லியன்களாகும். அவர்களுள் 0-14 வயது டைய
சிறுவர்கள் 24.3 வீதமாகும். இதில் ஒரு மில்லியன் சிறார்கள் பல்வேறு வேலைகளில்
ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். பாடசாலைக்குச் செல்ல வேண்டிய வயதில் பாடசாலை
செல்லாதிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை 38,000 ஆகும். இவர்களில் 56 வீதமானோர்
சிறுமிகளாவர். 900,000 சிறுவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
வாழ்கின்றனர். 1000 சிறுவர்கள் தாய் தந்தையை இழந்துள்ளதோடு 4000 சிறுவர்கள் சுனாமி
அனர்த்தத்தினால் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர்.
சுனாமிக்கு பின்னர் 500 க்கும்
அதிகமான சிறுவர்கள் காணமால் போயுள்ளனர். 300,000க்கும் அதிகமான சிறுவர்கள்
விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானோர் ஆண் சிறுவர்களாவர்.
20,000க்கும் அதிகமான சிறுவர்கள் வீட்டு உதவியாளர்களாக உள்ளனர். 2000க்கும் அதிகமான
சிறுவர்கள் வீதியோரங்களில் வசிப்பதுடன் கொழும்பில் வேலை செய்யும் சிறுவர்களாக
உள்ளனர்.
மேலும் சிறுமியர்களில் 25,000 பேர் வீட்டுப்பணிப் பெண்களாக அமர்த்தப்பட்டுள்ளனர்.
வேலைகளில் ஈடுபட்டுள்ள சிறுவர்களுள் 52 வீதமானோர் 15 வயதிற்குட்பட்டவர்களாவர்.
நாட்டினுள் காணப்படும் வீதிச் சிறுவர்களின் தொகை ஏறக்குறைய 60,000 ஆகும். பொதுவாக
2,500 பேர் கொழும்புக்கு வெளி யில் உள்ளனர். இவ்வாறான ஒரு சிறுவர் நிலைப்பாட்டினை
இலங்கையில் காணக்கூடியதாக உள்ளது எனலாம்.
இலங்கையிலுள்ள விருத்திக் குறிப்புகளிலி ருந்து சிறுவர் உழைப்பில்
ஈடுபட்டுள்ளவர்களின் தொகை 100,000 ஆகும். இதில் 75 வீதத்திற்கு மேற்பட்டவர்கள்
தோட்டப்பகுதியிலும் நகர்பகுதி யிலும் உள்ளர் எனக் கூறப்படுகின்றது. இலங்கைத் தீவு
முழுவதிலும் வேலைகளில் இருக்கும் பிள்ளைகளின் தொகை (14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள்)
1990ம் ஆண்டின் முதற் காற்பகுதியில் 82,470 என மதிப்பிடப்பட்டிருந்தது. இத்தொகை
1991 ஆண்டில் 34,861 எனவும் 1992 ம் ஆண்டில் 19,669 எனவும் 1993ஆம் ஆண்டில் 25,875
எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
முழு இலங்கையினையும் எடுத்து நோக்கும்போது மலையக சிறுவர்களிடையே அதிகமான சிறுவர்
துஷ்பிரயோகங்களைக் காணமுடிகிறது. பாடசாலைக்குச் செல்லக்கூடிய ஆயிரகணக்கான சிறார்கள்
பெரியவர்களாலும் ஏன் பெற்றோர்களாலும் கூட துஷ்பிரயோகத்துக்கு
உள்ளாக்கப்படுகின்றார்கள். மலையகத்தை பொறுத்தவரையில் அனேகமான சிறுவர்கள் வீடுகளிலும்
ஹோட்டல்களிலும் வேலை செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
ஒரு குறிப்பிட்ட ஆய்வுப்
பிரதே சத்தை எடுத்துக்கொண்டால் இது ஒரு பெருந்தோட்ட பிரதேசம் என்பதாலும் குறைந்தளவு
வருமானத்தை பெறுபவர்களாக இம்மக்கள் காணப்படுவதாலும் இப்பிரதேசத்தை சேர்ந்த கூடுதலான
சிறார்கள் நகரப்பகுதிகளிலும் தேயிலைத்தோட்டங்களிலும் வேலை செய்கிறார்கள்.
அதுமட்டுமன்றி இப்பகுதி சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும்
உள்ளாக்கப்படுகின்றனர்
சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை பல வகையாக பகுத்து நோக்கலாம். அவற்றை
நோக்குவோமாயின்,
குடும்பத்திலுள்ள உடல் சார்ந்த வன்செயல்கள் : பிள்ளையின் உடல் பாதிக்கக்கூடிய
வகையில் பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர் விளைவிக்கக்கூடிய வன்செயல்கள்.
பாலியல் துஷ்பிரயோகம் : பாலியல் துஷ்பிரயோகம் என்பது பெரியவர்கள் அல்லது வயதில்
கூடியவர்கள் அல்லது வளர்ந்த ஒருவர் ஒரு பிள்ளையைப் பாலியல் செயலில்
சம்பந்தப்படுத்துவதாகும். இங்கு மூத்தவரின் தேவைகளையும் விருப்புகளையும்
நிறைவேற்றுவதற்கும் பிள்ளை ஒரு பாலியல் பொருளாக கருதப்படுகின்றது
குடும்பத்தில் பிள்ளைகளைப் புறக்கணித்தல் : பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்கள்
பராமரிக்க முடியாத நிலைமை அல்லது பராமரிப்பினை மறுத்தல், பிள்ளைகளை விலக்குதல்,
பாலியல் ரீதியாக அல்லது உழைப்பு ரீதியாக பிறர் அவர்களைச் சுரண்டுவதற்கு இடம்
கொடுத்தல், போன்ற விடயங்களுக்கு பொதுவாக சமுதாயத்தின் பிரதான அலகாக குடும்பமே
காணப்படுகின்றது
குடும்பத்தின் மனவெழுச்சி சார்ந்த துஷ்பிரயோகம் : பிள்ளை மூலம் யதார்த்தத்திற்கு
மாறான தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இழிவாக பேசி மனதைப் புண்படுத்தல். இது
அதிகமான குடும்பங்களில் இடம் பெறுகின்றது.
நிறுவனங்களில் இம்சை : பராமரிப்பு இல்லங்களிலும் வைத்தியசாலைகளிலும் பிள்ளைகள்
முதியோரால் துன்புறுத்தப்படுதல், பெண்கள் வீட்டுக்கு வெளியே வேலை செய்வது அதிகரித்து
வருகிறது. பெரிய குடும்பங்கள்,சிறிய குடும்பங்கள் ஆகியுள்ளன.
குடும்பத்தின் புறத்தே பிள்ளைகள் சுரண்டப்படல் : ஆபாசக் கேலிக்கதைகள் மூலமும் உடல்
உழைப்பு மூலமும் சிறுவர்களைத் துஷ்பிரயோகித்தல்
ஒரு பிள்ளையின் விருப்பத்திற்கு மாறாக அதன் மீது வேலை சுமத்தபடும் போது அதற்குக்
கல்வியும் விளையாட்டும் மறுக்கப்படுகின்றன. இத்தகைய வேலை சுரண்டல் எனப்படும்.
மலையகத்தில் சிறுவர் வேலைக்கு அமர்த்தப்படுதல் :
மலையகத்தைப் பொறுத்தவரையில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் சிறுவர்களை வேலைக்கு
அமர்த்துதலே கூடுதலாக காணப்படுகின்றது. பெண்பிள்ளைகளை விட ஆண்பிள்ளைகளை வேலைக்கு
அமர்த்தப்படுவது அதிகமாக உள்ளது. இன்று பெண்பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துவதும்
அதிகரித்துக் கொண்டு வருகின்றது எனலாம்.
மொத்தத்தில் மலையகத்தில் அண்மைக்காலமாக பாலியல் துஷ்பிரயோகம், சித்திரவதை போன்ற
சிறுவர் துஷ்பிரயோகங் களும் அதிகரித்து வருகின்றது. (தொடரும்)