TNA யிலுள்ள முன்னாள் புலிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் என்னைப் போன்று
அரசாங்கம் புனர்வாழ்வு அளிக்க வேண்டும்
TNA யிலுள்ள முன்னாள் புலிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் என்னைப் போன்று
அரசாங்கம் புனர்வாழ்வு அளிக்க வேண்டும்
"தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் தமது வாக்குத் தளத்தைப் பேணுவதற்காக இலங்கைத்
தமிழர்களின் பிரச்சினைகளைக் கையில் எடுக்கிறார்கள். திமுக தலைவர் கருணாநிதி ஒரு
சந்தர்ப்பவாத அரசியல்வாதி. காலத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு அரசியல் காய்நகர்த்தல்களை
மேற்கொள்ள முடியும் என்று அவருக்கு நன்கு தெரியும்.
தற்போது தமிழ் நாட்டில் எந்தப்
பிரச்சினையும் இல்லாததால் அவர் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை முன்வைத்து தமது
பிரபல்யத்தைத் தக்கவைக்கப்பார்க்கிறார். அவரின் பின்னால், வைகோ, நெடுமாறன் சீமான்
போன்றோரும் அணிதிரள்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் எமது பிரச்சினையில்
தலையிட வேண்டிய அவசியமே இல்லை. எமது பிரச்சினைகளை நாம் எமது நாட்டு அரசாங்கத்துடன்
பேசித் தீர்த்துக்கொள்வோம். இதில் வெளிச் சக்திகள் தலையிட வேண்டியதில்லை."
அழுத்தம் திருத்தமாக அடித்துச் சொல்கிறார் கே.பி என்கிற குமரன் பத்மநாதன். ஒரு
காலத்தில் புலிகள் இயகத்திற்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டவர். தற்போது பாதுகாப்பான
சூழலில் இருந்துகொண்டு மக்கள் நலப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்.
இலங்கைத் தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் சமாதானமாக வாழ்வதற்கு விருப்பம்
கொண்டுள்ளவர்களாக இருக்கும்போது தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் தனித்தமிbழத்தைத்
தோற்றுவிக்க வேண்டும் என்று கோஷமிடுவது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவிக்கும்
திரு.பத்மநாதன், "அவர்கள் அங்கு எதை வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும் எமக்கு
அவர்களுடன் எந்தத் தொடர்பும் கிடையாது" என்று உறுதியாகச் சொல்கிறார்.
"தமிழகத்தில் நடைபெறவுள்ள 'தமிbழ ஆதரவாளர்கள் அமைப்பின்' (ரெசோ) மாநாட்டில் ஈழம்
பற்றிப் பிரஸ்தாபிக்கக் கூடாது என்று இந்திய அரசாங்கம் தமிழக முன்னாள் முதல்வர்
கருணாநிதிக்கு அறிவுறுத்தியிருப்பதைப்பற்றி என்ன நினைக்கிaர்கள்?"
"ஆம். அது பொருத்தமான அறிவுரைதான் என்றாலும், தாம் இன்னமும் ஈழக்கோட்பாட்டைக்
கைவிடவில்லை என்று கருணாநிதி தெரிவித்திருக்கிறாரே. அவரை இன்னமும் யாரோ தவறாக
வழிநடத்துகிறார்கள். கருணாநிதி மட்டுமல்ல தமிழகத்தைச் சேர்நத ஏனைய அரசியல்வாதிகளும்
எமது மக்களுக்கு உதவ விரும்பவில்லை. அவர்கள் எமது பிரச்சினையை வைத்து வாக்குகளைச்
சேகரித்துக்கொள்ளவே முயற்சிக்கிறார்கள். புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது இவர்கள்,
வன்னி மக்களாகிய எமக்கு ஆதரவாகக் குரல் எழுப்புமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை
விடுத்தார்கள்.
ஆனால் அப்பாவி மக்கள் இவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலை அறியாமல்
அவர்களை நம்பினார்கள். ஈற்றில் தமது வாக்குகளுக்காக அப்பாவி மக்களை ஒரு கருவியாக
இவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது கவலைக்குரிய விடயம். எந்த ஒரு வெளிச்சக்தியாலும்
எமது பிரச்சினை தீரப்போவதில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். சிங்களவர்களும்
தமிழர்களுமாகிய நாம் பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்கிறோம். எமது பிரச்சினைகளைத்
தீர்ப்பதற்கு எந்தவொரு சக்தியும் எமக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியதில்லை.
உதாரணமாக மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தினர் தமது பிரச்சினைகளில் தலையிடுவதற்கு
இந்திய அரசியல்வாதிகளை அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடம் நான் ஒன்றைக்
கேட்கிறேன். அவர்களின் மக்கள் சார்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு எங்கள் தமிழ்
அரசியல்வாதிகளை அனுமதிப்பார்களா? இல்லை. அனுமதிக்கமாட்டார்கள். பிறகு ஏன் எங்கள்
பிரச்சினையில் அவர்கள் மூக்கை நுழைக்கிறார்கள்?"
"என்றாலும் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு, இயல்பு வாழ்க்கை குறித்து ரெசோ
மாநாட்டில் பேசப்போவதாகத் தெரிவித்துள்ளார்களே?"
"(ஏளனச் சிரிப்புடன்) என்ன வேண்டுமானாலும் அவர்கள் அங்கே பேசிக்கொள்ளட்டும். எமக்கு
எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் எப்படி எமது பிரச்சினைகளைக் கலந்துரையாடுவார்கள்,
இதனையெல்லாம் செய்வதற்கு அவர்கள் யார்? என்பதுதான் பெரிய நகைச்சுவை. எமக்குப்
பிரச்சினை இருந்தால், இலங்கைத் தமிழர்களாகிய நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் பேசி
தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வோம். சாதாரண தமிழர்கள் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு
தமிழ்நாட்டை ஒருபோதும் கோரவில்லை.
உண்மையாகவே அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு
உதவுவதாக இருந்தால், தமிழ்நாட்டின் அகதி முகாம்களில் நரக வாழ்க்கை வாழ்ந்து வரும்
ஒரு இலட்சம் தமிழர்கள் சார்பில் குரல் எழுப்பட்டும். உண்மையாகவே உதவிட விரும்பினால்,
மாநாட்டுக் கண்காட்சி எல்லாவற்றையும் விட்டுவிட்டு அதற்குச் செலவளிக்கும் பணத்தை,
வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கட்டும். "
"ரெசோ மாநாட்டில் உள்ளூர் அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இல்லை என்று நீங்கள்
சொன்னாலும், அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கேற்கவிருக்கிறது. அவர்களின்
நிலைப்பாட்டைப் பற்றி உங்கள் கருத்து என்ன?"
"(மீண்டும் ஒருமுறை ஏளனச் சிரிப்பு) அந்த மாநாடு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள
கூட்டமைப்பின் தலைவர், கலந்துகொள்வதைப்பற்றி இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று
தெரிவித்திருக்கிறார். அப்படி அவர்கள் அதில் கலந்துகொள்ளச் சென்றாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை. சர்ச்சைக்குரிய அறிக்கைகளை விடுவதில் கூட்டமைப்பின் தலைவர்
பிரசித்திபெற்றவர். அந்தக் கட்சிக்குச் சரியான ஒரு தலைமைத்துவம் இல்லை என்றுதான்
நான் சொல்வேன்."
"சம்பந்தன் இருக்கிறாரே... ஏன் அப்படிச் சொல்கிaர்கள்?"
"நான் அவரின் அரசியல் அனுபவத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், ஓர் ஆளுமையுள்ள
தலைமைத்துவம் தேவை என்பதை அவருடைய கருத்துகள் எடுத்துக்காட்டுகின்றன. அதற்கு கடந்த
மேதின வைபவம் நல்லதோர் எடுத்துக்காட்டு. மட்டக்களப்புவில் நடைபெற்ற இலங்கை
தமிழரசுக்கட்சியின் மாநாட்டிலும் சம்பந்தன் ஆதரவை இழந்தார். அவர் ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் வெவ்வேறான நிலைப்பாட்டை எடுக்கிறார். ஐக்கிய இலங்கைக்குள்
தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்த முடியாது என்று மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களைத்
தவறாக வழிநடத்துகிறார். இவர்களெல்லாம் வன்னியில் மக்களோடு வாழ்ந்திருந்தால் நிலைமை
புரியும்.
தேர்தல் காலத்தில் மட்டும்தான் மக்களோடு கலந்திருக்கிறார்கள்.
கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் சம்பந்தன் தமது அரசியலையும் நிலைப்பாட்டையும்
நேரத்திற்கு நேரம் மாற்றிக்கொள்ள முடியாது. இது பக்குவமான ஓர் அரசியல்வாதிக்கு
அழகல்ல. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது ஒரு நிலைப்பாடு, வெளியில்
மக்களைச் சந்திக்கும்போது வேறோரு நிலைப்பாடு. மக்கள் ஒருமுறை
ஏமாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், மீண்டும் ஏமாறுவதற்குத் தயார் இல்லை என்பதை இவர்கள்
புரிந்துகொள்ள வேண்டும்."
"புலிகளின் தனிநாட்டுக் கோட்பாட்டுக்கு ஆதரவளித்த முக்கியமான ஒரு நபரான உங்களுக்கு
அது சாத்தியமில்லை என்பதை உணர 30வருட காலம் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால்,
கூட்டமைப்பு இன்னமும் அதற்காகப் பிரசாரம் செய்து வரும் வேளையில், வடக்கு கிழக்கு
மக்கள் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டார்கள் என்று நினைக்கிaர்களா?"
"மாவை சேனாதிராசா கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையை எவராவது
வாசித்திருந்தால், ஆச்சிரியப்பட்டிருப்பார். மேற்கத்தேய நாடுகளின் புரட்சிகர
வரலாற்றுக் கதைகளைப் படிக்கும்படி அவர் இளைஞர்களுக்கு உபதேசம் செய்கிறார். அதேநேரம்
தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வு தேவை என்பதை சர்வதேசத்திற்கு
உணர்த்துவதற்காகக் கிழக்கில் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும்
கேட்டிருக்கிறார். மேற்கத்தேய நாடுகளுக்கு அவர்களின் சொந்தப்
பிரச்சினைகளைத்தீர்ப்பதற்கே நேரம் இல்லாதபோது மாகாண சபைத் தேர்தலைப்பற்றியெல்லாம்
அலட்டிக்கொள்ளமாட்டார்கள். ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு ஓடி முறையிட்டு
வந்தார்கள். இப்போது மேற்கு நாடுகளுக்கு பறக்கிறார்கள்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் சீ,என்.அண்ணாதுரை, அமெரிக்காவில் வைத்து ஓர்
ஊடகவியலாளருடன் நடத்திய கலந்துரையாடலில் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தமிழ்நாடு அதன் சொந்தப் பிரச்சினையை, உளளூரிலேயே தீர்த்துக்கொள்ளும். வெளிநாட்டு
உதவி அவசியம் இல்லை என்று தெரிவித்தார். ஏன், நெல்சன் மண்டேலாகூட வெளிநாட்டு ஆதரவைக்
கோரவில்லை.
ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இந்தியாவிற்கும் வெளிநாடுகளுக்கும்
ஓடுகிறார்கள். அவர்கள் உண்மையாகவே மக்கள் மீது அக்கறைகொண்ட வர்கள் என்றால் முதலில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடம் பேச்சுவார்த்தை நடத்தட்டும். அதனைவிடுத்து சர்வதேச
ஆதரவைத் தேடச் சென்றால், அது மீண்டும் மக்களை ஏமாற்றுவதாகவே அமையும். இறைமையுள்ள ஒரு
நாடு வெளிநாடொன்றின் தீர்வுப்பொதியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை."
"தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான வரலாற்றுப் பிணைப்பு சிதைவடைவதற்குப்
பிரதான காரணம் மொழி என்கிறார்கள். தற்போது இரு சாராருக்கும் மொழியைக் கற்பிப்பதற்கு
அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இஃது எந்தளவு பயன்தரும் எனக் கருதுகிaர்கள்?'
"நிச்சயமாக. வடக்கில் உள்ள அநாதரவான சிறுவர்களைக் கவனிப்பதில் கூடுதல் நேரத்தைச்
செலவிடுவதால், சிங்களத்தைப் பயில்வதற்கு எனக்குக் குறுகிய கால அவகாசமே கிடைக்கிறது.
இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பும் பாலமாக மொழியைப் பயன்படுத்த
முடியும். அதற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றதே. முன்னாள்
போராளிகளுக்கு சிங்களம் கற்பிக்கப்பட்டதைக்கூட விமர்சித்திருந்தார்கள். இதே
அரசியல்வாதிகள் புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகள் வேற்று மொழிகளைக் கற்பதை
எதிர்க்கமாட்டார்கள்.
தமது சொந்த மக்களை வேற்று மொழியைக் கற்க வேண்டாம் என்று கூறும்
அரசியல்வாதிகள் இந்த உலகத்தில் எங்கும் இருக்கமாட்டார்கள். கூட்டமைப்பு
அரசியல்வாதிகள் இன்னமும் இளைஞர்கள் மனதில் பிரிவினைவாத விஷத்தை விதைத்து
வருகிறார்கள். இந்த அரசியல்வாதிகளும் ஏதோ ஒரு வகையில் புலிகள் இயக்கத்தில்
இணைந்திருந்தவர்கள்தான். அவர்களும் (என்னைப்போல்) புனர்வாழ்வுக்கு
உட்படுத்தப்படவேண்டும் (சிரிக்கிறார்). ஸ்ரீதரன் எம்பி முன்னாள் புலி. சுரேஷ்
பிரேமச்சந்திரன் மண்டையன் குழுத் தலைவர்.
மாவை சேனாதிராசா ஆயுதம் ஏந்தாவிட்டாலும்,
இளைஞர்களை அதற்கு ஊக்கப்படுத்தியவர். மாற்றமடைவதற்கான வாய்ப்பு கிட்டாததால்,
அவர்களுக்கு இன்னமும் கள நிலவரம் புரியவில்லை. பிரிவினைவாதத்திற்குப் பிரசாரம்
செய்தவர்களையும் ஆயுதம் ஏந்தியவர்களையும்தான் மக்கள் பிரதிநிதிகளாக புலிகள்
நியமித்தார்கள். ஆபிரிக்க தேசிய காங்கிரஸினரை எப்படி நெல்சன் மண்டேலா
மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துமாறு பணித்தாரோ, அதேபோன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
எம்பீக்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டும்."
"தமிழர் நலன்பற்றிப் பேசும் பிரதான தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லையே,
இவர்களால் தமிழ் மக்களுக்கு பயன் கிடைப்பதாக எண்ணுகிaர்களா?"
"அதுதான் முதலிலேயே சொன்னேனே.. அதிகாரப்போட்டி மட்டுமே உண்டு. அவர்களைப் பொறுத்தவரை
அரசியல் என்பது மேலதிக வருமானத்திற்கான ஓர் உபாயம் அவ்வளவுதான். அரசியல்வாதிகள்
மக்கள் மத்தியில் இருந்து உருவாகி வர வேண்டும். அவர்களுக்குத்தான் மக்கள்
பிரச்சினைகள் புரியும். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், மக்கள்
பிரச்சினைகளுடன் வரும்போது இந்த அரசியல்வாதிகள் தீர்மானங்களை மேற்கொள்ளமாட்டார்கள்.
அதனால், மக்கள் மந்திரிமாரை நாடிச் செல்லவேண்டியிருக்கிறது. ரீஎன்ஏ அரசியல்வாதிகள்
ஒருபோதும் இந்திய மீனவர் தொடர்பான பிரச்சினையைப் பேசமாட்டார்கள். ஏனென்றால்
அவர்களின் குடும்பத்தவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்."
"மதிமுக தலைவர் வைகோ, நீங்கள் தமிழரைக் காட்டிக்கொடுத்துவிட்டு அரசாங்கத்தின்
பங்காளியாகிவிட்டீர்கள் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். அவருக்கான உங்கள் பதில்
என்ன?"
"முதலில் நான் கேட்கிறேன், நான் காட்டிக்கொடுத்துவிட்டேன் என்று குற்றஞ்சாட்டுவதற்கு
அவர் யார்? நான் ஓர் இலங்கையன். எனது மக்களுக்கான ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கு
நான் போராடினேன். பின்னர் நான் தவறாக வழிநடத்தப்பட்டதைப் புரிந்துகொண்டு எனது
மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன். எமக்கொரு கனவு இருந்தது உண்மைதான். ஆனால் எல்லாக்
கனவுகளும் நிறைவேறுவதில்லையே.. மலையாளத்தையும் கன்னடத்தையும் தமிழ்நாட்டையும்
இணைத்துத் தனித்தமிழ் நாட்டை உருவாக்குவதற்குப் பெரியார் முயற்சித்தார். எனினும்
இப்போது அந்த மாநிலங்கள் எல்லாம் தனித்தனி மாநிலங்களாக விளங்குகின்றன. இஃது
அவர்களின் கனவு. அந்தக் கனவில் மிதந்த வைகோ எவ்வாறு அந்தக் கனவை மறந்தார்? இதனை அவர்
மீட்டிப்பார்க்க வேண்டும். ஈழத்தின் நிலையும் இதுதான். பாதிக்கப்பட்டவர்கள் நாம்.
எனவே எமது எதிர்காலத்தைத் தீர்மானித்துக்கொள்வதற்கு எமக்குத் தெரியும். ஆகவே
யுத்தத்தின் தாற்பரியம் தெரியாத வைகோ போன்ற தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின்
குற்றச்சாட்டுகளை நான் பொருட்படுத்தப்போவதில்லை. என்னைக் குறை சொல்வதற்கு அவர் ஓர்
இலங்கைத் தமிழர் இல்லை. இஃது எனது தாய்நாடு. எனது நாட்டுக்கும் எனது மக்களுக்கும்
எது சிறந்தது என்பது எனக்குத் தெரியும்."
"அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் ஏதும் உள்ளதா?"
"இல்லவே இல்லை. அரசிலுக்கு வரும் திட்டமில்லை. எனது வன்னி மக்கள் சந்தோசமாக
வாழ்வதைப் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னவா. பிள்ளைகள் நன்றாக கல்வி கற்க
வேண்டும். இளைஞர்கள் கற்றுத் தமது சொந்தக் காலில் நிற்க வேண்டும். என்ன
விலைகொடுத்தேனும் எனது இலக்கை வெற்றியடையச் செய்வேன். நான் அரசியலில்
பிரவேசிக்கப்போவதாகப் பல வதந்திகள் வெளியாகின. அவை வதந்திகள் மட்டுமே."