புத் 64 இல. 32

நந்தன வருடம் ஆடி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரமழான் பிறை 16

SUNDAY AUGUST 05 2012

 
தலைவரை பணய கைதியாக வைத்து காரியங்களை சாதிக்கும் மனநிலையில் சிலர்!

தலைவரை பணய கைதியாக வைத்து காரியங்களை சாதிக்கும் மனநிலையில் சிலர்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆற்றிய உரை

நேர்மையான ஆட்சி, முஸ்லிம் காங்கிரஸ¤க்கான அரசியல் அதிகாரம், அதற்கான உத்தரவாதம், முஸ்லிம் கமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்காலம் பற்றிய தெளிவு என்பன தேவை. அரபு வசந்தம் அரபுலகில் குறிப்பாக எகிப்திலும் டூனேசியாவிலும் எதனை எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இந்தக் கிழக்கு மண்ணிலும் முஸ்லிம்களின் அரசியல் பிரவாகம் ஆரம்பமாகப் போகின்றது. அத்தகைய சூழ்நிலையில்தான் இந்த தேர்தலை நாங்கள் சந்திக்கின்றோம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் இயக்கத்தின் எழுச்சிப் பிரவாகத்தை அணைபோட்டுத் தடுக்க முடியாது என்பதனால் தடுமாறிப்போயிருக்கின்ற சிலர் மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட வெளிக்கிட்டு இருக்கிறார்கள்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இந்த அரசை ஏமாற்றி கபடநாடகம் ஆடி தனியாகப் போட்டியிடுவதற்கு களமிறங்கியிருப்பதாக ஒருவர் கூறுகின்றார். ஊடகங்களுக்கு பக்கத்து ஊரிலுள்ள ஒருவர் இதனைச் சொல்ல, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்னொன்றைச் சொல்கின்றார். மஹிந்த ராஜபக்ஷவோடு நான் ஒப்பந்தம் செய்து முஸ்லிம்களின் வாக்குகளை அவருக்கு திரட்டிக்கொடுப்பதற்காக நாங்கள் தனித்துப்போட்டியிடுவதாக கூறுகின்றார். ஜனாதிபதிக்கு ஆதரவளித்து நான் முஸ்லிம் சமூகத்தை படுகுழியில் தள்ளப்போகிறேன் என அவர் கூறுகிறார். அவர்களுக்கு நான் பதில் கூறிக் கொண்டிருக்க முடியாது.

படித்த மக்கள் நிறைந்த அக்கரைப்பற்றில் இவ்வாறான கதைகளை கட்டவிழ்ப்பதால் அவர்கள் அவற்றை ஒரு போதும் நம்பப் போவதில்லை. நம்பத் தயாருமில்லை. இன்று அக்கரைப்பற்றில் அரசியல் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பள்ளிவாசல் சம்மேளனத்தைக் கூட்டி அவர் சொன்ன படி செய்யச்சொன்னதை தம்பி தவம் பள்ளிவாசலோடு தொடர்பு கொண்டு தலைகீழாக மாற்றியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் மிகப்பெரிய மாற்றத்தை இந்தப் பிரதேசத்தில் கொண்டு வரப்போகின்றது. இது எந்த ஒரு தனி மனிதனுடையதும் கட்சியல்ல. அமைச்சுப் பதவி வேண்டும் என்பதற்காக கட்சி தொடங்குகின்றார்கள். முழு அமைச்சுப் பதவி வேண்டுமென்றால் ஒரு கட்சி தேவை என்று எண்ணுகிறார்கள்.

பெருந்தலைவர் அஷ்ரப்பின் மரணத்திற்குப் பிறகு 2000 ஆண்டிலிருந்து இந்த தலைமைத்துவத்திற்கான போட்டி ஆரம்பித்துவிட்டது. அதே நிலைமையை இந்த தேர்தலின் பின்பும் தொடரலாமா என சிலர் நினைக்கின்றார்கள். இந்த அரசியல் இயக்கம், தன்னோடு இணைந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி விரும்பிய போது அவர் சொன்னதல்லாம் தனி மனிதர்களை தான் பறித்தெடுத்தாலும், மக்கள் அவர்களோடு வர மாட்டார்கள். அவர்கள் முஸ்லிம் காங்கிரஸோடுதான் இருப்பார்கள் என்பதாகும். ஜனாதிபதியின் பட்டறிவு அவருக்கு அதனை உணர்த்தியது.

இந்த தேர்தலுக்கு பின்னரான நிலைமையில் கட்சியை எவராவது தங்களுக்கு வேண்டியவாறு கையாள நினைத்தால் விளைவு விபரிதமாகி விடும். அடுத்த கிழக்குமாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான். அதை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய முடியாது. கட்சிக்குள்ளே மக்கள் ஆணையோடுதான் விசயங்களைச் சாதிக்கலாம்.

இந்த இயக்கமும் இந்த இயக்கத்தின் போராளிகளும் இந்தக் கட்சியை எவரும் ஓர் இழிவான நிலைமைக்கு இட்டுச் செல்வதற்கு அறவே இடமளிக்கமாட்டார்கள். தார்மீகமாக நடந்துகொள்பவர்கள் யார் என்பதை இந்த தேர்தலோடு மக்கள் உணர்ந்துகொள்வார்கள். கட்சிக்கான பணியை யாராவது சரியாக நிறைவேற்றவில்லை என்றால் அவர்கள் அதனை உணரத்தான் போகின்றார்கள்.

இது சமூகத்தின் இருப்பை பாதுகாக்கும் பணி. இதை யாரிடத்திலும், எந்த சக்தியிடத்திலும் அடகு வைத்து விட்டு இந்தக் கட்சியோடு யாரும் விளையாட முடியாது. இதனை கட்சிக்குள்ளும், வெளியிலும் உள்ள எல்லோரும் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இது மிகவும் நெருக்கடியான காலகட்டம். எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச வேண்டிய தேவையில்லை என நினைக்கின்றேன். தலைவரை விடவும் கட்சிப் போராளிகள் நிலைமைகளை நுணுக்கமாக நோக்குகின்றனர். கட்சியில் கரிசனையுள்ள அவ்வாறான பலர் உங்கள் மத்தியிலும் இருக்கின்aர்கள். இந்த மேடையிலும் இருக்கின்றார்கள். பதவிகளுக்காக சோரம் போகின்றவர்களாக எங்களை வெளியிலுள்ள பலர் பார்க்கின்றார்கள். நாங்கள் அவ்வாறு பதவிகளுக்கு சோரம் போகின்றவர்களாக இருந்தால், என்ன வந்தாலும் பரவாயில்லை என்று அரசாங்கத்தோடு இரண்டறக் கலந்து வெற்றிலைச் சின்னத்தில் சங்கமாகியிருக்கலாம்.

அண்மையில் இங்கு பிரதேச சபைத் தேர்தல் நடந்த போதும் மிகத் திடகாத்திரமாகச் சொன்னோம். விட்டுக்கொடுப்பிற்கும் ஓர் எல்லையுண்டு. நாங்கள் இறுதி முடிவை மேற்கொள்ளும் போது ஜனாதிபதி இருக்கவில்லை. ஆனால் நிச்சயமாக ஜனாதிபதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நேர்மையை சரிவர ஜீரணிக்கின்ற அளவிற்கு நாங்கள் அவருடன் பேசியிருக்கின்றோம். இதற்கு மேலும் அவருடன் சென்று பேசி முஸ்லிம் காங்கிரஸின் தன்மானம், சுயகெளரவம் மக்கள் பணி இவற்றையெல்லாம் பறிகொடுத்து விட முடியாது. மிகவும் பக்குவமாக இந்த விடயங்களை கையாள வேண்டியுள்ளது. இந்த தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்காக கட்சிப்பிரதிநிதிகளை பொத்துவிலுக்கு அழைத்து கலந்துரையாடினேன். எந்த அடிப்படையில் இந்த தேர்தலை சந்திப்பதென்ற விடயங்களை விரிவாக ஆராயந்தோம்.

ஆனால் தற்பொழுது அரசாங்கத்தோடு நீண்ட, நெடிய பேச்சுவார்த்தைகளின் பிறகு முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என்று தீர்மானம் எடுத்ததன் பிறகு, அடுத்த கட்டமாக வெற்றி பெற்று, இந்த சமூகத்தின் இருப்பைத் தீர்மானிக்கின்ற முறையில் அந்தஸ்தோடு மாகாண சபையில் அமர வேண்டும். அதற்கு பல்வேறு மாறுபட்ட வழிமுறைகள் உள்ளன. அவற்றை எல்லாம் இந்தக் கூட்டத்தில் சொல்லிவிட முடியாது. ஆனால் அடிக்கடி பத்திரிகைகளில் கட்சியின் பிரதானிகள் வெவ்வேறு விதமாக கருத்துக்களைக் கூறுகின்றார்கள். ஒவ்வொருவரதும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப இந்தக் கட்சியை கொண்டு செல்ல முடியாது. இந்தக் கட்சி வெற்றி பற்றி பேச வேண்டும். வெற்றியின் பின்னரான நிலைமை பற்றி மக்கள் தந்த பதவிகளில் இருப்பவர்கள், அந்தப் பதவிகளின் தார்மீகப் பொறுப்பு என்ன என்பதை பற்றிச் சிந்திக்க வேண்டும்.

தேர்தலின் பின்பு நாங்கள் இன்னும் எப்படி பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வது, பதவி உயர்வுகளைப் பெறுவது என்பது அரசியல்வாதிகளின் இயல்பான குணம், ஆனால் கட்சி எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று தடியெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் என்ற பாணியில் கபடத்தனமாகவும், நயவஞ்சகத்தனமாகவும் நடந்துகொள்ளக் கூடாது. நாங்களாகவே எங்களது கட்சியை தோற்கடிப்பதற்கான முயற்சிகள் அரங்கேறியுள்ளன. ஆனால் இந்த இயக்கத்திற்கு மக்களிடத்திலுள்ள பேரபிமானத்தின் காரணமாக அவர்களிடம் சென்று இந்த கட்சியை தோற்கடியுங்கள் என்று சொல்ல முடியாத நிலையிலிருக்கிறார்கள். இந்தக் கட்சியின் மரச்சின்னத்தின் மீதுள்ள பற்றை வைத்துத்தான் அவர்கள் அர்ப்பணிப்புடன் கட்சியை கட்டிக்காக்கின்றார்கள்.

இந்த பந்தயத்தில், சதுரங்க ஆட்டத்தில் கட்சியின் சின்னத்தை மக்கள் மனங்களிலிருந்து அகற்றிவிட முடியாது. எந்த கபட நாடகத்தை ஆடினாலும் அது கைகூடாது. அதற்காக கட்சி வேலைகளை களமிறங்கி நடத்துவதுதான் தலைவரான எனக்கு எஞ்சியிருக்கும் பணியாகும். எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் இந்த கிழக்கு மண்ணிலே பத்தாயிரம் பேருக்கும் அதிகமான ஓர் ஆளணியை திரட்டியாக வேண்டும். இந்தக் கட்சியின் செல் வாக்கையும், பலத்தையும் எல்லா தரப் பினருக்கும் புரிய வைக்க வேண்டும். ஆரம்பித்திலிருந்து இந்தக் கட்சியை பாதுகாக்கின்ற பணி இறைவன் அரு ளால் கட்சிப் போராளிகளில் தங்கியி ருக்கின்றது.

இதனை எந்தவிதமான ஊடுருவல்களும் பிரித்துவிட முடியாது. அக்கரைப்பற்றில் மூன்று வேட்பாளர்களை களத்தில் இறக்கியிருக்கின்றோம். பொதுவாக வேட்பாளர் பட்டியல்களை தயாரிப்பதில் தலைவர் பட்ட கஷ்டம் நேரில் வந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். இந்தக் கட்சியின் அரசியல் பலம் இந்த அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்ல முழுகிழக்கிலங்கையிலும், நாடு முழுவதிலும் விஸ்தரிக்கப்பட வேண்டும். அரசியல் அதிகாரம் எல்லா இடங்களுக்கும் பங்கிட்டு பகிர்ந்தளிக் கப்பட வேண்டும்.

அட்டாளைச்சேனை என்ற இந்த கட்சியின் கோட்டையாக திகழ்கின்ற மண்ணில் ஒரு திருப்பு முனையாய் இந்த தேர்தலை நாம் நோக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நான் விடுக் கின்றேன். கட்சியின் தலைவரை பண யக் கைதியாக வைத்து காரியங்களைச் சாதிக்கும் மனநிலை மாற வேண்டும். நான் இந்த முட்கிரீடத்தை பயந்து, அஞ்சி தலையில் சுமந்தவன் அல்ல சவால்க ளுக்கு முகம் கொடுத்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாறி, மாறி தேர்தல்களில் போட்டியிட்டு சமூகத்தின் ஒட்டுமொத்த நன்மையை நோக்கமாகக் கொண்டு வெற்றி பெற்றவன். இவ்வாறு மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.