புத் 64 இல. 32

நந்தன வருடம் ஆடி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரமழான் பிறை 16

SUNDAY AUGUST 05 2012

 
கோழிக்கறியும் தாம்பூலமும்!

கோழிக்கறியும் தாம்பூலமும்!

மாணிக்கம் விளையும் மலைநாட்டு பகுதியில் கடந்த வாரம் ஒரு விழா நடந்தது. பத்தோடு பதினொன்றாக ‘ஆற அமர’ அமர்ந்தருந்தேன். அங்கு வந்திருந்த ஒரு பெரும்பான்மையின கல்வி அதிகாரி பார்ப்பதற்கு கண்ணியமான, பொறுப்புள்ள ஒருவராகக் காணப்பட்டார். அவர் நிகழ்ச்சியில் உரையாற்றுவார் என எதிர்பார்த்திருந்து ஏமாற்றம் தான். “நேர முகாமைத்துவம் பலவீனமாக இருக்கிறது எனக்கு 12 மணிக்குப் போகவேண்டும்” என்று கூறிவிட்டு கெளரவமாக வெளியேறிவிட்டார்.

அவர் செல்வதற்கு முன்னர் மண்டபத்திற்கு வெளியே சில நிமிடம் உரையாடக்கிடைத்தது. “சில தமிழ் ஆசிரியர்கள்தான் கஷ்ரப்படுகிறார்கள். அநேகருக்கு அக்கறை என்பதே கிடையாது. யாராவது ஓர் அரசியல்வாதியின் பின்னால் இருப்பதைத்தான் பெருமையாகக் கருதுகிறார்கள். பாடசாலையைப் பற்றியோ, பிள்ளைகளின் கல்வி பற்றியோ இவர்களுக்கு அக்கறை இல்லை. இதற்கு நாம் ஏதாவது செய்யவேண்டும். அதற்கு பூரண ஒத்துழைப்பைத் தருவேன்” என்று நொந்த மனதுடன் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

அப்போதுதான் இன்னொரு விடயமும் காதில் விழுந்தது. மஞ்சள் தோட்டப் பகுதியில் ஏற்கனவே பிள்ளைகளிடம் பணம் வசூலித்து ‘ஆட்டையைப்’ போட்ட சூரியக் குஞ்சு இந்தத் தேர்தலில் இரட்டை வேடம் போட்டிருக்கிறாராம். தான் சார்ந்திருக்கும் தாம்பூலத்திலும் வாயை வைத்துக்கொண்டு மறுபுறம் ‘கோழிக்கறிக்கும் ஆசைப் படுகிறாராம். இப்படி ஒருவர் சொன்னதும்’ “கோழி உயிருடன் வந்துவிட்டால் இவர் எப்படி கறி சாப்பிடுவார்?” என்று இன்னொரு நண்பர் கேட்கிறார். ஏனென்றால், தாம்பூலம் சிறக்க வேண்டுமென்று வெளியில் இவர் கூறிக்கொண்டாலும், தமக்கையின் மகன் கோழி பிடிக்க வெளிக்கிட்டிருப்பதால், அவர் அகப்படாமல் திரும்பி வந்து விட வேண்டுமென்பதே அவருக்கு உள்ளூற ஆசையாம். அதனால்த சூரியக் குஞ்சிக்கு இப்போது இரண்டுங்கெட்டான் நிலை என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பிள்ளைகளுடம் பணம் கறந்து மாட்டிக்கொண்டிருப்பதால், சட்ட நடவடிக்கைக்கும் முகங்கொடுத்திருப்பதாகக் கேள்வி.

இப்படி எல்லாம் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு எப்படி இவர்களால் சமூக நலன் கருதி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்கிறார்கள். நியாயமான கேள்விதானே! இவர்கள் இழைக்கும் குற்றங்களை மறைப்பதற்காகவே யாராவது ஓர் அரசியல்வாதியின் தயவு இவர்களுக்குத் தேவைப்படுகிறது என்கிறார் விழாவுக்கு வந்திருந்த ஒரு பெற்றார்.

சரி அதைவிடுங்கள் மலையகத்தின் மையப்பகுதியில் அண்மையில் இரண்டு ஆசிரியர்களும் ஓர் ஆசிரியையும் நையப்புடைக்கப்பட்டார்கள் இல்லையா! அதில் ஒருவர் சமூகப் பணியாற்றும் செய்தியாளர் என்ற போர்வையில் பல்வேறு கைங்கரியங்களைச் செய்திருப்பது இப்போது அம்பலமாகியிருக்கிறது. தமது நிறுவனத்தில் அடையாள அட்டையை வாங்கி வைத்துக்கொண்டு இவர் செய்தி எழுதுவதற்குப் பதிலாக கள்ளக் காதலிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். ஒரு நாள் குடும்பத்தவர்களும் ஊரவர்களும் அப்படியே கோழியை அமர்த்துவதைப்போல் அமர்த்திவிட்டார்கள். இதனால், நயமானபனையில் நாறிப்போயிருக்கிறது. பின்னர் இவரை வேறு பாடசாலைக்கு மாற்றி அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

இன்னொருவர், காதலென்றால், நான்தான் ஜெமினி என்று அலைந்து படாதபாடும்பட்டிக்கிறார். இப்படி நடிக்கத் தெரிய வராமல் எத்தனையோ கூத்துகள் அன்றாடம் நடந்தேறி வருகின்றன. வடக்கு, கிழக்கு, கொழும்பில் தமிழ்க் கல்வித் துறையில் பிரச்சினைகள் இருந்தாலும், அவை இம்மாதிரியான ஈனப்பிரச்சினைகளாக இல்லை. ஆகவே, இம்மாதிரியான ஆசிரியர்களைத் திருத்தி வழிக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு யாருடையது? என்ற கேள்விக்கு குடும்பமும், சமூகமும், ஊடகமும் மட்டும் அக்கறை செலுத்துவதில் பலனில்லை போல்தான் தெரிகிறது.

ஏனெனில், இவர்களைத் தண்டிக்க வேண்டிய கல்வி அதிகாரிகளும் யோக்கியர்களாக இல்லாமையின் காரணமாக, என்னதான் இடித்துரைத்தாலும் ஏழையின் பேச்சு அம்பலம் ஏறாததைப்போல், விழலுக்கு இரைத்த நீராக இருக்குமானால் மலையகம் கல்வியில் மேன்மையுற்று விளங்கும் என்பதை இந்த ஜென்மத்தில் யதார்த்தமாக்க முடியாமல் போய்விடும். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களும் ஆற அமர சந்தித்துக்கொள்வோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.