புலிகளின் கோரிக்கைகளையே முன்வைக்கும் தமிழ்க்கூட்டமைப்பு
புலிகளின் கோரிக்கைகளையே முன்வைக்கும் தமிழ்க்கூட்டமைப்பு
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயம் எந்தளவில் உள்ளது? இவ்விடயத்தில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும், உறவும் அரசாங்கத்துடன் எவ்வாறு உள்ளது?
இனப்பிரச்சினைத் தீர்விற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமாகத் தீர்வு காண்பதில்
அரசாங்கம் மிகவும் உறுதியாக உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இது
தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினை ஒரு தேசியப் பிரச்சினை. இதற்கு
நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளினதும் ஆலோசனை பெறப்பட்டே தீர்வு காணப்படும். ஆனால்
தமிழ்க் கூட்டமைப்பினர் அன்று புலிகள் செயற்பட்டது போன்று இன்று பிடிவாதத்துடன்
செயற்பட்டு வருகின்றனர். அவர்கள் அந்நிலையிலிருந்து இறங்கி பாராளுமன்றத்
தெரிவுக்குழு மூலமாக தீர்வு காண முன்வர வேண்டும். எச்சந்தர்ப்பத்திலும் தமிழ்க்
கூட்டமைப்புடன் மட்டுமே பேசி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையின் கீழ் இப்பிரச்சினைக்கு ஜனாதிபதியாகிய
தங்களால் தீர்வொன்றினை முன்வைத்து முற்றுப்புள்ளி வைக்க முடியுமென தமிழ்க்
கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றதே?
இது தனிப்பட்டதொரு பிரச்சினை அல்ல இதுவொரு தேசியப் பிரச்சினை. என்னால் அப்படியொரு
தீர்வைத் தனித்து முன்வைக்க முடியாது. இவ்விடயத்தில் சகல கட்சிகளும் கூடி ஆராய்ந்து
செயற்பட்டு இறுதி முடிவொன்றினைச் சகலரதும் சம்மதத்துடன் எடுப்பதே பொருத்தமானது.
அதற்கு அவர்கள் முதலில் தெரிவுக்குழுவிற்கு வரட்டும். என்னால் தனித்து முன்வைக்கும்
தீர்வை தமிழ்க் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டாலும் அதனை ஏனைய கட்சிகளும் ஏற்கும் என
எப்படி உறுதியாகக் கூறமுடியும். அல்லது இதுதான் தீர்வு என என்னால் எவர் மீதும்
திணிப்பை ஒருபோதும் மேற்கொள்ள முடியாது. அது சாத்தியமே அற்றது. அவ்வாறு செய்தால்
அதன் பின்னரும் இப்பிரச்சினை வேறு வடிவத்தில் தொடரவே செய்யும். அதனால் இதற்கு ஒரே
வழியும், தெரிவும் பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமான தீர்வே. இதற்கு முன்வராத கட்சி
தனது பொறுப்பிலிருந்து தவறிய கட்சியாகவே கருதப்படும்.
இந்த மூன்று மாகாண சபைகளுடனும் சேர்த்து ஏன் வடமாகாண சபைத் தேர்தலையும்
அரசாங்கத்திற்கு வைக்க முடியாது போனது?
வைக்க முடியாது போனதால்தான் சேர்த்து வைக்கவில்லை. வடக்கில் வாக்காளர் இடாப்புப்
பதிவுகள் 1981ஆம் ஆண்டு காலத்தில் பதியப்பட்ட வையே இப்போதும் நடைமுறையிலுள்ளது.
அந்த இடாப்பின்படி தேர்தலை நடத்தினால் அது மக்களுக்குச் செய்யும் அநீதியாகும்.
நூற்றுக்கு இருபத்தைந்து சத வீதமானவர்களே வாக்களிக்க முடிவதுடன் அந்தப் பழியும்
அரசாங்கத்தின் மீதே சுமத்தப்படும். இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் சிறிய அளவில்
முகாம்களில் உள்ளனர். கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றிய பின்னர் அம்மக்களையும்
அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்திய பின்னர் நிச்சயம் அடுத்த வருடம்
செப்டம்பரில் தேர்தலை நடத்துவோம். சிலர் சொல்வதற்காக உடனடியாகவே தேர்தலை நடத்த
முடியாது. நாம் பொறுப்புள்ள அரசாங்கம். பொறுப்பற்ற அரசாங்கம் ஒன்று
பதவியிலிருந்திருந்தால் ஒருவேளை நடத்தியிருப்பார்கள். ஆனால் என்னால் அப்படிச் செய்ய
முடியாது.
அடுத்த வருடம் செப்டம்பருக்குள் நீங்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் அனைத்தும்
பூர்த்தியடைந்து விடுமா?
அதுதான் அதற்கான உத்தரவை நான் பிறப்பித்துள்ளேன். எனவே நிச்சயம் அடுத்த வருடம்
செப்டம்பருக்குள் பூர்த்தியாகும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டு விரைவாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியா தெற்கில் சுமார் 34,000 சிங்கள மக்கள்
வாழ்ந்து வந்தனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள அவர்களும் மீளக்குடி
யமர்த்தப்பட வேண்டும். அதுபோன்று வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களும்
உள்ளனர். அவர்களையும் முழுமையாகக் குடியமர்த்த வேண்டும். அத்துடன் கற்றறிந்த
பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரகாரம் அதில் பரிந்துரைக்கப்பட்ட
மீள்குடியேற்றம், குடியேறும் மக்களுக்கான கட்டுமாணப் பணிகள் தொடர்பான
விடயங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துச் செயற்பட்டு வருகின்றோம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த நாடளாவிய ரீதியில் தேசிய
செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்கும் நோக்கில் சக்தியுள்ள செயலணி ஒன்றை அண்மையில்
உருவாக்கியுள்Zர்கள். அதன் செயற்பாடுகள் என்ன?
போருக்குப் பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப அம்மக்களிடமே
கருத்தறியவும், கடந்த காலத் தவறுகளை இனம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்யவுமென
நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தவன் நான். அந்த ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளை
அமுலாக்க எனக்குத் தெரியும். தற்போது அதில் தெரிவிக்கப்பட்ட ஐம்பது சதவீதமான
விடயங்களை அமுலாக்கிவிட்டோம்.
இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பலரின் இலங்கை தொடர்பான செயற்பாடுகள் எமது
நாட்டின் தனித்துவத்திற்குச் சவாலாக அமைந்து வருகின்றது. இதனால் எமது நாட்டின்
அயல்நாட்டுடனான நட்பிற்குப் பாதகம் ஏற்படுமா?
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமது உள்ளூர் அரசியலுக்காகச் சிலவற்றைச் செய்து
வருகிறார்கள். எமக்கு மத்திய அரசுடனேயே நேரடித் தொடர்பு உள்ளது. அது சகல
விடயங்களிலும் நல்லுறவாக அமைந்து வருகிறது. நான் அண்மையில் இந்தியப் பிரதமரைச்
சந்தித்துரையாடியபோதும் இருநாடுகளுக்குமிடையில் நெருக்கமான உறவைக் கட்டிக்காக்கும்
விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. எனவே தமிழ்நாட்டு உள்ளூர் அரசியல்வாதிகளின்
செயற்பாடுகள் குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
இருந்தாலும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் எமது நாட்டிற்கு எதிராகச்
செயற்படும் தமிழ் நாட்டுத் தலைவர்களுடன் உறவை வைத்துள்ளனர். தேசியக் கொடியை ஏற்ற
மறுக்கின்றனர். இது ஜனநாயக நாட்டின் சட்ட வரையறையை மீறும் செயலாக அமையாதா?
ஒரு சிலரின் முட்டாள் தனமான இவ்வாறான செயற்பாடுகளை நாம் பெரிது படுத்தக் கூடாது.
காலம்தான் பதில் சொல்லும். காலப் போக்கில் அவர்கள் திருந்திக் கொள்வார்கள். தான்
பிறந்து வளர்ந்த தனது சொந்தத் தாய் நாட்டைப் பிறர் நாடு என்று கூறுபவர்களை
என்னவென்று அழைப்பது. இவ்வாறானவர்களுக்கு மக்கள்தான் பதில் கூற வேண்டும். முன்னாள்
ஜனாதிபதி ஜே.ஆர். அவர்களின் காலத்தில் 1983ஆம் ஆண்டு ஆறாவது திருத்தச்
சட்டத்தின்போது உறுதி மொழியை ஏற்க மறுத்த தமிழ் உறுப்பினர்கள் அனைவரும்
நீக்கப்பட்டனர். இது அவர்களுக்கு பாரிய பிரசாரமாக அமைந்தது. சர்வதேச ரீதியிலும்
பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டது. அதனால் இது பற்றி அலட்டி அவர்களுக்குக் களம்
அமைத்துக் கொடுக்கத் தேவையில்லை.
அமைச்சரவை மாற்றம் இடம்பெறவிருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன. ஜனாதிபதி அவர்களே,
அது உண்மையா?
தற்போதைக்கு அப்படியெதுவும் இல்லை. மாற்றம் இருந்தால் உங்களுக்குத்தானே முதலில்
தெரியவரும். அதுவரை பொறுமை காப்போமே.
நாட்டில் ஊழல், இலஞ்சம் அதிகரித்து வருவதாக ஒரு பொதுவான குற்றச்சாட்டு உள்ளது.
இதனைத் தடுக்க ஏதேனும் விசேட நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஊழல், இலஞ்சம் தொடர்பாக விசாரிக்க ஒரு ஆணைக்குழு உள்ளது. அந்த ஆணைக்குழுவிற்குக்
கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அனைத்துமே விசாரிக்கப்படுகின்றன. அதில் அரசியல்வாதி,
உயர் பதவி வகிப்பவர், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ளவர் என்ற பேதத்திற்கு இடமே
இல்லை. அந்த ஆணைக்குழு சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் செயற்பட்டு வருகின்றது.
எனவே எவராவது பாதிக்கப்பட்டால் முறையிடலாம். முறைப்பாடுகள் விசாரிக்கப்படும்.
நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களைக்
கட்டுப்படுத்த மரண தண்டனையை அமுலாக்க வேண்டும் எனப்பலதரப்பிலிருந்தும் குரல்கள்
எழுந்து வருகின்றன. அது சாத்தியமாகுமா?
பல துஷ்பிரயோகங்கள் குடும்பங்களிலேயே இடம்பெறுகின்றன. உறவினர் முறையிலானவர்க ளாலேயே
இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற் றுள்ளமையை அறிய முடிகின்றது. எனவே தண்ட னையை
கடுமையாக்குவது தொடர்பாக ஆராயும் அதேவேளை இப்பிரச்சினைக்கான தீர்வை
அடிமட்டத்திலிருந்து அமுலாக்க வேண்டும். குடும்ப மட்டத்தில் விழிப்பாக இருப்பதுடன்
இவ்விடயம் தொடர்பாக சமயஸ்தலங்களில் போதனைகளை உப தேசிக்க வேண்டும். இதுவொரு சமூகப்
பிரச்சினை, இதனை வளரவிடாது தடுப்பது ஒவ்வொருவரதும் கடமையாகும். குடும்பம், பாடசாலை,
வணக்கஸ்தலங் கள், சமூக மையங்களில் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சமூக சிந்தனை வேண்டும். சில ஊடகங்களில் பிரசுரமாகும் விளம்பரங்களைப் பார்த்தால் அவை
இளம் சிறுவர் பராயத்தினரைக் கெடுப்பதாக உள்ளது. எனவே சமூக சிந்தனையோடு செயற்படின்
இதனை இல் லாது செய்துவிடலாம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்புக்காக பொலிஸாரை
நியமிக்க முடியாது. அது வேறு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். எனவே தவறுசெய்பவர்கள்
தாமாக உணர்ந்து திருந்தவேண்டும்.
சில இணையத்தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கை மூலமாக ஊடக அடக்குமுறையைப்
பிரயோகித்து இந்த அரசாங்கம் நல்லாட்சியிலிருந்து தவறி தான்தோன்றித் தனமாக
நடந்துகொள்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அது உண்மையா?
நான் அவ்வாறு நினைக்கவில்லை. நாட்டில் ஊடகச் சுதந்திரம் தாராளமாக உள்ளது.
ஜனாதிபதியான என்னை எத்தனையோ விதத்தில் விமர்சனம் செய்கிறார்கள். நான் கோபிப்பது
கிடையாது. ஆனால் ஊடகச் சுதந்திரத்தை வைத்துக் கொண்டு எமது தேசத்தைக் கொச்சைப்படுத்த
என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அத்துடன் சில தனிப்பட்டவர்களை அவர்களது
தனிப்பட்ட வாழ்வை இழுத்து மிலேச்சத்தனமாகச் சேறு பூசுவதையும் அனுமதிக்க முடியாது.
எதற்கும் ஒரு எல்லை உள்ளது. அதனால்தான் சில இணையத்தளங்கள் மீது சட்ட நடவடிக்கை
எடுக்க நேரிட்டது. சில இணையத்தளங்கள் பிரித்தானியா விலிருந்து இயங்குகின்றன. ஆனால்
அவற்றிற்கு இங்குள்ள சிலர் இங்கிருந்தவாறே செய்திகளையும், சேறு பூசும்
விடயங்களையும் பதிவேற்றம் செய் கின்றனர். எப்படி இவற்றை அனுமதிக்க முடியும்.
ஜனாதிபதி அவர்களே! நீங்கள் தெரிவித்தது போன்று சில இணையத்தளங்கள் இங்குள்ள சில
பத்திரிகை ஆசிரியர்கள் தொடர்பாகவும் சேறு பூசி பொய்யான செய்திகளை வெளியிட்டு
பின்னர் அதனை மின்னஞ்சல் மூலமாக பலருக்கும் அனுப்பிவைத்து வரும் செயலை
மேற்கொண்டுவருகின்றன. இது பாரதூரமான விடயம். இதனை யார், எங்கிருந்து செய்கிறார்கள்
என்பதை நவீன தொழில்நுட்பம் மூல மாகக் கண்டுபிடிக்கலாம். இவ்விடயத்தில் அரசாங் கம்
கவனம் செலுத்துமா?
நிச்சயமாக, எமது தேடுதலை நாம் கை விடவில்லை. ஜனாதிபதி, அமைச்சர்கள், குடும்ப
அங்கத்தவர்கள் எனத் தொடங்கி இப்போது பத்திரிகை ஆசிரியர்களிலும் கைவைக்கத்
தொடங்கிவிட்டார்கள். முதற்கட்ட விசாரணைகளில் அகப்பட்ட சிலர் தமது குற்றத்தை
ஒப்புக்கொண்டுள்ளனர். இன்னும் சிலர் தமக்கு சம்பந்தமில்லை எனக்கூறி வேறு சிலரின்
பெயர்கள் அடங்கிய பட்டியலை என்னிடம் தந்துள்ளனர். விசாரணைகள் பல கோணங்களில்
நடைபெற்று வருகிறது. இத்தகைய ஊடக நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை
எடுக்கும்போது நீங்கள்தானே கொட்டை எழுத்தில் ஊடக அடக்குமுறை, சர்வாதிகாரப் போக்கு
என்றெல்லாம் எழுதினீர்கள் இன்று அத்தகைய உங்கள் மீதே கை வைத்துள்ளார்கள். இந்தக்
காலாசாரத்தை இல்லாமற் செய்ய உண்மையான ஊடகங்கள் தமது காத்திரமான பங்களிப்பைச் செய்ய
வேண்டும்.
சில இணையத்தளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டவகையில் விஷமப் பிரசாரங்கள்
மேற்கொள்ளப்படுகின்றன. இவை பல சந்தர்ப்பங்களில் சிங்கள, முஸ்லிம் ஒற்றுமையைச்
சீர்குலைக்கும் விதத்தில் நடந்து கொள்கின்றன. மஹரகமை அரபுக் கல்லூரி நிகழ்வொன்றை
ஜிகாத் அமைப்பின் கருத்தரங்கு எனப் பிரசாரம் செய்தன. இனவிரிசலை ஏற்படுத்தும் இவை
தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
இவை போலியான முகவரியைக் கொண்டியங்கும் போலியான இணையத்தளங்கள். நிச்சயமாக இது
குறித்துக் கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக் கப்படும். பாதுகாப்பு அமைச்சு
இப்போது இவ்வா றான இணையத்தளங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகின்றது.
விரைவில் எல்லோரும் அகப்படுவார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தின்
பக்கம் வரவுள்ளதாக நம்பிக்கையான தகவல்கள் கசிந்துள்ளன. ஜனாதிபதி அவர்களே, அதில்
உண்மை உள்ளதா?
அப்படியா எனக்குத் தெரியாது. நீங்கள் ஊடகவியலாளர்கள், உங்களுக்குத்தான் இத்தகைய
விடயங்கள் முன்கூட்டியே தெரியவரும். தெரிந்தால் எனக்கும் கூறுங்கள். (நகைச்சுவையாக
சிரித்தபடியே கூறினார் ஜனாதிபதி) ஆனால் ஒன்று எமது பக்கம் யாரும் வரலாம். அதேபோன்று
யாரும் வெளி யேறிச் செல்லவும் முடியும். எமது அரசினதும், கட்சியினதும் கதவுகள்
என்றுமே திறந்துள்ளன. குறிப்பிட்டுக் கூற வேண்டுமாயின் சிகை அலங்கார நிலையங்களில்
இருப்பது போன்று இரு பக்கமும் தள்ளிச் செல்லும் கதவு போன்றதே எமது கதவும். வருபவரை
ஏற்பதுடன் செல்பவரை செல்லவும் விடுவோம். ஐ.தே.க பிரதித் தலைவருக்கு நீங்கள்
குறிப்பிடும் இளம் பாராளுமன்ற உறுப்பினர் தேவையில்லைப்போலும். வந்தால் வரட்டும்
பார்ப்போம்.
அரசாங்கத்தின் பக்கம் இவ்வாறு வருபவர்கள் மீதான ஏற்கனவே உள்ள ஊழல் மற்றும்
இன்னோரன்ன குற்றச்சாட்டுக்கள் களையப்படுவதற்கு அரசின் பக்கம் வந்தபின்னர் சலுகை
அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி அவர்களே உண்மையா?
ஒருபோதும் கிடையாது. அரசாங்கத்தில் இருப்போர் அவர் அமைச்சராக இருந்தாலும் தவறு
செய்யுமிடத்து அவர் மீது சட்ட நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருவதை நீங்கள் நன்கு
அறிவீர்கள். அவ்வாறிருக்க வருபவர்கள் மீது கருணை காட்டுவதா? சட்டத்தின் முன்பாக
சகலரும் சமன். எனது அரசாங்கத்தில் அப்படியானதொரு சிறிய சம்பவமும் இடம்பெற்றதாக
சரித்திரம் இல்லை.
ஜனாதிபதி அவர்களே, பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள்
அடிக்கடி வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பல்கலைக்கழக கல்வி மிகவும்
பாதிக்கப்படுகின்றது. இது குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதேனும்
எடுக்கப்படுகின்றதா?
உண்மைதான் இப்பிரச்சினையை அரசியல்மயப் படுத்தாமல் இரு தரப்பினருக்கும் வெற்றி என்ற
அடிப்படையில் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளுமாறு நான் கேட்டுள்ளேன். இன்று
பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சிரேஷ்ட போதனாசிரியர்கள் ஆகியோர்
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் பெறும் சம்பளத்தை விடவும் அதிகமாகப் பெறுகின்றனர். எனவே
இவர்கள் சம்பள உயர்வு கோருவதில் எவ்விதமான அர்த்தமும் கிடையாது. விட்டுக்
கொடுப்புடன் மாணவர்கள் நலன் கருதி பேச்சுவார்த்தை மூலமாக இப்பிரச்சினைக்குத் தீர்வு
காணப்பட வேண்டும்.