புத் 64 இல. 32

நந்தன வருடம் ஆடி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரமழான் பிறை 16

SUNDAY AUGUST 05 2012

 

மணித்தேர்

மணித்தேர்

அவனுடைய தாய் தந்தையருக்கு நம்ப முடியா விட்டாலும் நம்பித்தான் ஆக வேண்டியிருந்தது. இது தான் நாம் இனி வாழப் போகும் மாளிகை என்றும் நமக்குப் பணியாற்றத்தான் இத்தனை செவிலியர் இருக்கிறார்கள் என்றும். சற்று நேரத்தில் இருவர் வந்து இவர்களை அழைத்துச் சென்று நீராட்டி புதுப்புது ஆடைவகைகளை அணிவித்தார்கள்.

விமலதர்மராஜன் தனக்கு அளவான ஆடைகள் இருக்குமோ என்று எண்ணிக் கொண்டு ஒரு ஆடை யைத் தூக்கினான். அது அவனுக்கு அளவாக மாறியிருந்தது. ஆகவே கவலையை விட்டு விட்டு தனக்கு வேண்டியதை எடுத்து அணிந்து கொண்டான்.

அவன் வெளியே தனது தாய் தந்தையருக்கு முன்னால் வந்த போது “மகன் இப்போது நீ ஒரு இளவரசன் மாதிரி இருக்கிறாய் மகன்” என்றார்கள். “நீங்கள் அப்படி எண்ணிக் கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்றார்கள்” என்றான்.

அவர்கள் தங்கள் வாழ்நாளில் அனுபவித்திராத செளகரியத்தை யும் வசதிகளையும் அங்கு அனுபவித்தார்கள். அந்த நாட்டு மக்களும் அப்படித் தான் வாழ்கின்றார்கள் என்பதையும் புரிந்து கொண்டார்கள். இன்னும் ஏன் சொர்க்கம் என்ற எண்ணம் அவர்கள் மனதில் எழத்தொடங்கியது. சொர்க்கம் இப்படித் தான் இருக்கும் என்பதை யாரும் சொல்லாமலே அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

இப்படிச் செல்வந்தர்களாத் தாம் என்றாவது ஒருநாள் வாழ்வோம் என்று கனவு கூடக்காணவில்லை. ஆனால் இப்போது அதை அனுபவிக்கத் தொடங்கியிருந்தார்கள். அவர்களுக்கு ஒரு புது உலக வாழ்க்கை கிடைத்திருந்தது. விமலதர்ராஜன் சிறுவனாக இருந் தாலும் அவனுக்கு இப்போதே எல்லாவற்றையும் அனுபவிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

விமலர்தமராஜன் ஒரு நாள் சாரதியிடம் கூறினான் “ நாம் அடுத்த நாட்டைப் பார்த்து வரலாமா?” என்று.

“அதற்கு நாம் அதிகாலையில் எழுந்து விடிவதற்கு முன் செல்ல வேண்டும் அப்போதுதான் அந்த நாட்டைச் சென்றடைய முடியும்” என்றான்.

“அந்த நாட்டின் பெயர் என்ன?”

“மணிபல்லவம்”

“இன்னுமொரு நாளைக்கு நாம் சென்று வருவோம் அதற்கு ஆயத்தப் படுத்தி வைத்துக் கொள்” என்றான்.

“ஆகட்டும்” என்று விடை பெற்றுக் சென்றான்.

அந்த நாளும் வந்தது. இருவரும் புறப்பட்டுச் சென்றார்கள்.

அது கடல் அருகாக இருக்கும் நாடு அதனால் அங்கு மரக்கலங்களில் வெளி நாட்டார் வந்து வியாபாரம் செய்வது வழக்கம். அதனால் அந்த நாட்டில் இல்லாதது ஒன்றும் இல்லை. அவர் கொண்டு வருவதை இங்கு கொடுத்து விட்டு இந்த நாட்டுப் பொருட்களை பண்ட மாற்றாக வாங்கிச் செல்வார்கள். இதனால் அங்கு சிறந்த அங்காடிகள் இருந்தன.

மரக்கலங்கள் வரும் நாட்களில் அங்கு நிறைய வெளிநாட்டவர்களையும், புதுப் புதுப் பண்டங்களையும் காணலாம். அப்போது அந்த நாட்டின் நகரங்கள் திருவிழாக் கோலம் பூண்டது போல சிறப்பாக இருக்கும்.

அந்த நாட்டின் அங்காடியைச் சுற்றி வந்த விமலதர்மராஜன் அங்கு விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தேரில் மனதைப் பறிகொடுத்தான்.

அது விற்பனைக்குத் தான் இருக்கிறது என்றதும் அதைத் தான் வாங்கிவிட வேண்டும் என்று விரும்பினான். அதன் விலை ஒன்றும் அவனுக்குப் பெரிதாக இருக்கவில்லை.

(தொடரும்)

அவனிடம் இருந்த பொன்னைக் கொண்டு இதுபோல் எத்தனையோ அவனால் வாங்க முடியும். ஆனால் இப்போது முடியாதே. அவன் அதற்கு ஆயத்தமாக வரவில்லை. என்பது தான் குறையாக இருந்தது.

தேர் விட்டத்திலே சுற்றிவர மணித் தொங்கல்கள் தொங்கின. முத்தாலும் பவளத்தாலும் மாலைகள் தொங்கின. ஓடும் போது அந்த மணிகள் சலசலத்துக் கொண்டிருக்கும் என்பது அவனுக்குப் புலனாகியது.

அதனருகே நின்ற காவலர்கள் “ஐயா இது மணித் தேர். இதனை பெரும் வீட்டுப் பிள்ளைகள் இங்கு வரும் போது வாங்கிப் செல்வார்கள். மனோ வேகத்தில் செல்லக் கூடியது. நீங்கள் விரும்பினால் இதை வாங்கிக் கொள்ளலாம்” என்றார்கள்.

“இதை வாங்க வேண்டும் என்று தான் ஆசையாக இருக்கிறது. இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்” என்றான் விமலதர்மராஜன்.

“இந்த குதிரைகளை எல்லாம் எங்கிருந்து எடுக்கிaர்கள்?” என்றான்

“எல்லா நாட்டுக்கும் குதிரைகள் எங்கள் நாட்டின் ஊடாகவே செல்கின்றன. கடலும் துறைமுகமும் உள்ள நாடு எங்களுடையது தான். மரக்கலங்களில் குதிரைகள் வரும் அப்போது எல்லோரும் போட்டிபோட்டுக் கொண்டு ஏலம் வைத்து எடுப்பார்கள். அவரவர் நாட்டுக்கு குதிரைப் படைகளுக்கு குதிரை தேவையல்லவா? ஆனால் இந்தக் குதிரைகள் பஞ்சகல்யாணக் குதிரைகள் இவை கட்டளை அனுப்பி சவூதி அரேபியாவில் இருந்து எங்கள் அரசரால் எடுத்து வரப்பட்டவை அதிகமாக இவ்வாறான குதிரைகள் அஸ்வமேதயாகம் செய்வதற்காகவே தருவிக்கப்படும்.

“இவ்வாறு கஷ்டப்பட்டு எடுத்த குதிரைகளைப் பூட்டி இத்தேரை விற்கிaர்களே அது தான் எனக்குப் புதுமையாக இருக்கிறது”. என்றான்.

அவர்கள் அந்த இரகசியத்தை சொல்லக் கூடாது என்பது அரசனின் கட்டளை. விமலதர்மராஜனைப் பார்க்கும் போது அவன் ஒரு சிறுவனாக இருப்பதும். அழகாக இருப்பதும் அவனே இத்தேரை வாங்க வேண்டும் என்று அவர்கள் மானசீகமாக விரும்பினார்கள். ஆனால் காரணத்தைச் சொல்ல வில்லை.

அவனைப் பார்த்தும் ஒரு நாட்டின் இளவரசனாக இருப்பானோ என்ற ஐயம் கூட அவர்களுக்கு எழுந்தது.

அடுத்த முறை திரும்பி வந்து அதை வாங்கிச் செல்லலாம் என்று வந்து விட்டார்கள். ஆனால் விமலதர்மராஜனுக்கு இரவில் தூக்கமே வரவில்லை. காரணம் அந்தத் தேரில் பூட்டப்பட்டிருந்த நாலு பஞ்சகல்யாணக் குதிரைகளும் அவன் மனக் கண்முன்னே நின்று கொண்டிருந்தது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.