ஒரு நாட்டின் அபிவிருத்திப் பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கும், மக்கள் நலன்
கருதி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் உச்ச பயன்பாட்டை அடையச்
செய்வதற்கும் அந்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டப்பட
வேண்டியது அவசியமாகும்.
எமது நாட்டில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள்
மாவட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதுடன் அதற்கான ஒதுக்கீடுகளும் அத்திட்டங்கள்
தொடர்பான மேற்பார்வையும் மாவட்ட செயலகங்கள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. மற்றொரு
வகையில் கூறுவதாக இருந்தால் மாவட்டத்துக்குப் பொறுப்பான அரசாங்க அதிபர் மாவட்டத்தின்
அபிவிருத்திக்காகப் பொறுப்புக் கூற வேண்டியவராவார்.
எனவே தான் அரசாங்க தகவல் திணைக்களம் மாவட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும்
அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக மக்களை அறிவூட்டும் நோக்கில் பிரதேச
ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்குகளையும் கண்காணிப்புச் சுற்றுலாக்களையும் ஏற்பாடு
செய்து வருகின்றது.
அந்த வரிசையில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு முதலான மாவட்டங்களின்
அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கருத்தரங்கை அண்மையில் மன்னார் மாவட்டச்
செயலகத்தில் நடத்தியது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில்
மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்கள் தொடர்பான விளக்கவுரைகள்
குறிப்பிட்ட மாவட்டச் செயலாளர்களால் நடத்தப்பட்டன. இக்கருத்தரங்கை ஆரம்பித்து
உரைநிகழ்த்திய வன்னிப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் கைத்தொழில் மற்றும்
வாணிப அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வன்னிப் பிரதேசத்தில் புதிதாக இரண்டு
தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவற்றின் மூலம் பத்தாயிரத்துக்கும்
மேற்பட்டவர்களுக்கு நேரடித் தொழில் வாய்ப்புகள் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கம் ஏனைய மாவட்டங்களைப் போலவே மன்னார் மாவட்டத்திலும் பாரிய அளவிலான விவசாய
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. வன்னிப் பிராந்தியத்தில் யுத்த
நிலை காரணமாக சில தசாப்த காலங்களாகத் தடைப்பட்டிருந்த விவசாய நடவடிக்கைகளை
மேம்படுத்தவும் குடிநீர் மற்றும் ஏனைய பாவனைகளுக்கும் தண்ணீர் இன்றிக் கஷ்டப்படும்
மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நோக்கிலும் நீர்ப்பாசனத் திட்டங்களை
அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இம்மூன்று
மாவட்டங்களிலும் பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சின் ஆலோசனையில் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது முல்லைத்தீவில் வசிக்கும் குடும்பங்களில் ஐம்பது சதவீதத்தினருக்கு மின்சார
வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டத்தில் வாழும் மக்களின் குடிநீர்
வசதித் திட்டத்துக்காக நீர் வடிகால் அமைச்சு 400 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு
செய்துள்ளது.
பயங்கரவாத நடவடிக்கை காரணமாக தடைப்பட்டிருந்த முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில்
கடற்றொழில் நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு மீனவர்களுக்கு சந்தர்ப்பம்
கிடைத்துள்ளது. மன்னாரிலுள்ள கட்டுக்கரைக் குளத்தின் இரண்டாம் கட்டப் புனரமைப்பு
நடவடிக்கைகள் மிக விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன. மல்வத்து ஓயா அபிவிருத்தி
நடவடிக்கைகள் நிறைவடையும் போது 30,000 ஏக்கர் விவசாயக் காணிகளுக்கு நீர் விநியோக
வசதிகள் கிடைக்கப்பெறவுள்ளன. இதன் மூலம் இப்பிரதேச விவசாயிகள் இரு போகத்திலும்
நெற்செய்கையை மேற்கொள்ள வழி பிறப்பதுடன் வருடாந்த நெல் உற்பத்தியை இரு மடங்காக
அதிகரிக்கச் செய்யலாம் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இதற்காக எட்டாயிரம்
மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் வீடில்லாத மக்களுக்காகப் புதிதாக அமைக்கப்பட்டு வரும் வீடமைப்பு
நடவடிக்கைகள் இப்பிரதேசத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இக்கருத்தரங்கில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க
அதிபர் என்.வேதநாயகம் உரைநிகழ்த்துகையில் வட மாகாணத்தில் நிலவிய அசாதாரண காலத்தில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் இன்னும் மூன்று
மாத காலத்திற்குள் குடியமர்த்தப்படுவார்கள். இதற்கென கண்ணிவெடிகள் அகற்றும் வேலைகள்
துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன் அப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. கண்ணிவெடிகள்
அகற்றும் வேலைகள் முடிவடைந்தவுடன் மீள குடியமர்த்தும் நடவடிக்கைகள் உடனடியாக
ஆரம்பிக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துரை வழங்குகை யில், ‘இடம்பெயர்ந்த மக்களை மீள குடிய மர்த்த
நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்ப டுத்தியுள்ள அதேவேளை இடம்பெயர்ந்த மக்களும் தாம்
சொந்த இடங்களில் மீளக்குடி யமர வேண்டும் என்ற ஆவலாய் உள்ளனர்.’
முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரையில் எமது மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த
சுமார் 6,500 பேர் மட்டுமே தற்போது அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். அதனை விட
சுமார் 1500 பேர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்கள்
அனைவரும் மூன்று மாதத்திற்குள் மீள குடியமர்த்தப்படுவார்கள்.
மீள குடியமர்த்தப்படுபவர்களுக்கு தங்கள் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்குரிய காணி மற்றும்
விவசாய நீர்ப்பாசன வசதிகள் செய்து கொடுக்கப்படுவதுடன் மீள
குடியமர்த்தப்படுபவர்களுக்கு உடனடிக் கொடுப்பனவாக 5,000 ரூபா வழங்கப்பட்டு
வருகின்றது. அதனை விட தற்காலிக வீடொன்றை அமைத்துக் கொள்வதற்காக இன்னுமொரு 20,000
ரூபாவும் வழங்கப்படுகின்றது. அதனைவிட விவசாய உபகரணங்களும் வழங்கப்படும். மற்றும்
விவசாய உற்பத்தி மூலம் அறுவடை கிடைக்கும் வரை அவர்களது அன்றாட வருமானத்தை
ஈட்டிக்கொள்ள வசதியாக மாட்டுப்பண்ணை, ஆடு வளர்ப்பு, கோழிப் பண்ணை ஏற்படுத்திக்
கொள்ள கால்நடைகளும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பண்ணை
உரிமையாளர்களுக்கு நவீன ஆலோசனைகளையும் மற்றும் ஏனைய உதவிகளையும் மேற்கொண்டு வருவதாக
அரச அதிபர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் வாழுகின்ற மக்களின் வாழ்வாதார முறைகள், சமூக பொருளாதார
நிலைமைகள், அடிப்படை வசதிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன என்பன தொடர்பாகவும் ஆராயப்பட்டன. அப்போது மன்னார், வவுனியா மற்றும்
முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அபவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கம் 46211
மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்தனர்.
விவசாயிகளுக்கு வழி காட்டும் திவிநெகும விவசாயப் பயிற்சி நிலையம்
திவி நெகும திட்டத்தின் மற்றுமொரு மைல் கல்லாக விளங்கும் வவுனியா மாவட்டத்தின்
கனகராயன் குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விவசாயப் பயிற்சி நிலையம் வெற்றிகரமாக
இயங்கி வருகின்றது. இது குறித்து அப்பிரதேச விவசாயிகள் அரசாங்கத்துக்கு பெரிதும்
நன்றி தெரிவிக்கின்றனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 28 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள
இப்பயிற்சி நிலையத்தின் மூலம் பிரதேச விவசாயிகளுக்கு நவீன விவசாய நுட்பங்கள்,
உபகரணங்கள் குறித்தும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும்
பயிர்ச்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டு
வருகின்றன.
இந்த நிலையத்தின் மூலம் இதுவரை சுமார் 219 பயிற்சித்திட்டங்கள்
மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் 2903 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தூர இடங்களில் இருந்து
வருகின்ற பயிலுனர்களுக்கு தங்கியிருந்து பயிற்சி பெறவும் இந்நிலையத்தில் வசதிகள்
செய்யப்பட்டுள்ளன. இந்த மத்திய நிலைய மகரந்த சேர்க்கை ஆய்வு கூடத்தை பராமரித்து
வருவதுடன் இங்கு நவீன தொழில்நுட்பத்தை பாவித்து விவசாயக் கைத்தொழிலில் பாரிய
முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் அறிய முடிகின்றன. நாற்று மேடைகளில் வளர்க்கப்பட்ட
கன்றுகள் மற்றும் விதைகள் விற்பனைக் கூடத்தில் நியாயமான விலையில் விற்கப்படுகிறது.
இந்த விற்பனைக் கூடத்தில் பழவகைக் கன்றுகளான மாங்காய், மாதுளை, தோடை மற்றும் தென்னை,
கஜூ, பலா, ஈரப்பலா முதலான பலதரப்பட்ட கன்றுகள், மரக்கறி, விதைகள், பூக்கள்
போன்றவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நவீன நீர்ப்பாசன முறை, குறைந்த செலவில் உரம் தயாரிப்பு வழிமுறை, நோய் தடுப்பு முறை
உட்பட பண்ணை வளர்ப்பு முறைகள் தொடர்பான பல்வேறு பயிற்சிகளும் இந்த நிலையத்தின்
மூலம் வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமன்றி வெளிமாவட்ட
விவசாயிகளும் பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் பெற்று நன்மை அடைந்து வருகின்றனர்.
எழுச்சி பெற்று வரும் மன்னார் மீன்பிடித்துறை மீனவர்களுக்கு அரசு பல வழிகளிலும்
உதவி
மன்னார் மற்றும் தலை மன்னார் பகுதிகளில் மீன்பிடித்துறையின் முன்னேற்றத்திற்கு
அரசாங்கம் பல வழிகளிலும் உதவி வழங்கி வருகின்றது. குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழும்
மீனவர்களின் மேம்பாட்டுக்காக வசிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன் புதிய
மீன்பிடிப் படகுகள் மீன்பிடி உபகரணங்கள் போன்றவற்றையும் வழங்கி வருகின்றது.
மீனவர்களுக்கான இலகு கடன் வசதிகளுக்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
அத்துடன் இத்தொழிற் துறைக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்து
கொடுக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் தற்போது பெருமளவில் மீன் கிடைத்து வருகின்றது. தலைநகரிலிருந்து
செல்லும் வர்த்தகர்கள் அவற்றை நேரடியாகக் கொள்வனவு செய்து வருகின்றார்கள்.
கனகராயன் குளம் பகுதியில் பல மில்லியன் செலவில் அபிவிருத்தி
1889இல் அமைக்கப்பட்டிருந்த கனகராயன் குளத்தின் அணைக்கட்டு யுத்த நடவடிக்கைகள்
காரணமாக பழுதடைந்திருந்தது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித
மீட்சித் திட்டத்தின் ஏற்பாட்டில் 37 மில்லியன் ரூபா செலவில் ஒரு வருட காலத்தில்
அணைக்கட்டு மற்றும் மதகு புனரமைக்கப்பட்டதுடன் புதிதாக கால்வாயும்
அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதேசத்தைச் சேர்ந்த 210 விவசாயக் குடும்பங்கள்
பயனடைந்து வருவதுடன் அவர்கள் அரசாங்கத்துக்கு நன்றி பாராட்டுகின்றனர். இதன் மூலம்
தற்போது 314 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வடக்கின் முதலாவது அரச ஊழியர் வீடமைப்புத் திட்டம்
வருட இறுதிக்குள் பூர்த்தி
வடக்கின் முதலாவது அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டம் வவுனியா மாவட்டத்தில்
வெற்றிகரமாக நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் இங்கு 300 வீடுகள் அமைக்கப்பட்டு
வருகின்றன. வடக்கில் கடமையாற்றும் அரச ஊழியர்களின் நன்மை கருதியும் கடமைகளை கிரமமாக
மேற்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்தும் வகையிலுமான இலவச வீடமைப்புத் திட்டத்தை
அரசாங்கம் முதற் கட்டமாக வவுனியா மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அரச ஊழியர்களுக்கு வீடுகளை அமைப்பதற்காக தலா 40 பேர்ச்
காணியையும் 5 இலட்சம் ரூபாவைக் கடனுதவியாகவும் வழங்கி உள்ளது. வீடமைப்பு அதிகார
சபையின் ஏற்பாட்டில் அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியினால் வழங்கப்படும் இக்கடன்
தொகைக்கு குறைந்த வீத வட்டி அறவிடப்படுகின்றது.
மடு உற்சவத்திற்காக மீண்டும் ரயில் சேவை
தலைமன்னார் வரையான புகையிரதப் பாதை மீளமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள் ளப்பட்டு
வருவதால் அடுத்த வருட முற்பகு தியில் மடு உற்சவத்துக்குச் செல்லும் பக்தர்கள் ரயில்
மூலம் பயணம் மேற்கொள்ள வாய்ப்புக் கிட்டும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த வருட மடு உற்சவத்திற்கு பக்தர்க ளுக்கு ரயில் மூலம் பயணம் செய்வதற்காக
மன்னார் ரயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.