புத் 64 இல. 27

நந்தன வருடம் ஆனி மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 11

SUNDAY JULY 01 2012

கடல் கடந்து சென்றாலும் காக்காவையே சுடும் வேடன் போன்று புலம்பெயர் தமிழர்

கடல் கடந்து சென்றாலும் காக்காவையே சுடும் வேடன் போன்று புலம்பெயர் தமிழர்

இலங்கையில் தமிழர்கள் இத்தனை துன்பங்களையும் அனுபவித்த பின்னரும் திருந்தாவிட்டால் இனி அவர்களை இறைவனே காப்பாற்ற வேண்டும். ஆனால் அதற்கு உள்நாட்டில் வாழ்ந்து வரும் தமிழினம் இடம் வைக்கவில்லை. இப்போது அவர்களது வாழ்வு முறையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. இன்று விரும்பியோ விரும்பாமலோ இனி எமது வாழ்வு இப்படித்தான் அமைய வேண்டும் என்பதாகக் கருதி எப்படி வாழ்ந்த மக்கள் எப்படியும் வாழத் துணிந்து விட்டார்கள். இது காலத்தின் கட்டாயம்.

ஆனால் இங்கிருந்து இடம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் சமூகமாக வெள்ளைக்காரரின் தயவில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் மட்டும் இன்னமும் தம்மை மாற்றிக் கொள்வதாக இல்லை. அவர்களுக்கு உள்நாட்டில் நடக்கும் விடயங்கள் முழுமை யாகத் தெரிய நியாயமில்லை. இருபத்துநான்கு மணிநேரத்தில் இருபது மணி நேரம் வேலை செய்துவிட்டு மிகுதி நான்கு மணி நேரத்தில் கிடைக்கும் கணப்பொழுதில் இணையத்தளச் செய்திகளை அரை குறையாக வாசித்துவிட்டும், உள்நாட்டிலிருந்துவரும் தொலைபேசியில் குடும்பக் கதைபோக மிகுதி நேரத்தில் நாட்டுநடப்பை அரைகுறையாகக் கதைத்துவிட்டும் இன்னும் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதாக அங்கிருந்து ஒப்பாரி வைத்து வருகின்றனர்.

தாம் சென்று குடியேறியிருக்கும் நாட்டுக்கு ஏற்ற மாதிரியோ அல்லது உள்நாட்டு விடயங்களைச் சரிவர அறிந்துகொண்டு அதற்கேற்ப தம்மை மாற்றிக் கொள்ளவோ இவர்கள் இன்னமும் முயற்சிக்காமை கவலை தரும் விடயமே. அதற்குக் காரணம் இன்னமும் இவர்கள் தாம் குடி பெயர்ந்த பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னரான நிலை யிலேயே தமிழர் பிரதேசங்களின் நிலை இருப்பதாக எண்ணி வருகின்றனர். இன்னும் சிலர் இன்னமும் இறுதி யுத்தம் நடைபெறுவது போலவும் மக்கள் யுத்த வலயத்திற்குள் சிக்கித் தவிப்பது போலவும் எண்ணியே செயற்பட்டு வருகின்றனர்.

எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும் இவ்விரு விடயங்களிலிருந்தும் இவர்களைப் பிரித்தெடுப்பது சிரமமான காரியமாகவே உள்ளது. இவர்களது மனநிலையை வெளிநாடுகளிலிருக்கும் விடுதலைப் புலிக ளின் ஆதரவாளர்களும் அதே சம நிலையில் பேணி வருகின்றார்கள் என்பதுவும் மற்றுமொரு கசப்பான உண்மையாகும். இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் அமைதி நிலவுகின்றது. அங்கு தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள் என்ற உண்மையை புலம்பெயர் நாடு களில் கசியவிட்டால் அந்நாடுகள் அங்கு பொய்யாகத் தஞ்சம் கோரி வாழும் பலரை திருப்பி அனுப்பிவிடுவர் என்பது இவர்களது மற்று மொரு காரணமாகும்.

ஐரோப்பிய நாடுகளில் இந்நிலை இனியும் தொடருமாயின் உள் நாட்டில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் மீண்டும் தமது அமைதியை இழக்க நேரிடும். வெளிநாடுகளிலிருந்து தமிழருக்காகக் குரல் கொடுப் போருடன் இங்குள்ள மக்களுக்கும் தொடர்பு இருப்பதாக பாதுகாப்புத் தரப்பு சந்தேகம் கொள்ள நேரிடும். ஏற்கனவே சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்து வாழும் முன்னாள் புலிகள் மீதும் வீணான சந்தேகங்கள் எழுவதற்கும் இடமுண்டு.

முன்னொரு காலத்தில் புலிகள் இருந்தபோது அவர்கள் தமிழ் மக்களது உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள் எனக் கூறிப் பலரும் ஆதரவளித்து வந்தனர். அவ்வேளையில் புலிகளும் இராணுவ, அரசியல் பலம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். உள்நாட்டிலேயே பலர் விரும்பியும், சிலர் பயத்தினாலும் அவர்களுக்கு நிதியுதவிக ளையும், மற்றும் பலர் சரீர உதவிகளையும் வழங்கி வந்தனர். புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்த தொண்ணூற்றைந்து சதவீதமானோரும் இவ் வாறு டொலர்களிலும், பவுண்ஸ்களிலும், யூரோக்களிலும் பணவுதவி செய்தே வந்தனர். புலிகளும் அவற்றை வாங்கி மக்களுக்காக என்ன செய்தார்களோ தெரியாது தமது தலைவர்கள் சொகுசாக வாழ தேவை யான அளவு செலவு செய்தே உள்ளனர். அவர்களது பிரதேசங்கள் படையினரால் மீட்கப்பட்டபோது அது வெட்டவெளிச்சமானது.

ஆனால் இன்று புலிகளே இல்லை என்றாகி விட்டது. ஆயுதப் போரா ட்டத்திற்கு இனி இடமே இல்லை எனும் நிலையில் படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்தி விட்டனர். இந்நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கடந்த மூன்று வருடங்களில் அரசாங் கம் தேவையான சகல உதவிகளையும் செய்து வருகின்றது. இது உள்நாட்டில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். ஒருசில குறைபாடுகள் காணப்படினும் அரசாங்கம் தனது கடமையைச் சரியாகவே செய்து வருகின்றது.

பாலம் கட்டித் தருவதும், காப்பற் வீதிகள் போடுவதும், மாடிக் கட்ட டங்களை அமைப்பதும் யாருக்குத் தேவை? தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியானதொரு தீர்வே அவசியத் தேவையெனச் சிலர் முணு முணுப்பது அரசாங்கத்தின் செவிகளில் விழாமலில்லை. ஆனால் அதற்கு அரசாங்கத்தை மட்டுமே குறைகூறவதனால் பலனில்லை. அதில் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தாமே எனக் கூறித் திரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சேர்த்தே குறை கூற வேண்டும். உண்மையில் இதற்குப் பிரதான காரணம் தமிழ்க் கூட்டமைப்பினரே. பேச்சுவார்த்தை மூலமாக ஆறு மாத காலத்தினுள் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய பிரச்சினையை இன்று யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களுக்கு மேலாகவும் இழுத்தடித்து வருவது தமிழ்க் கூட்ட மைப்பே. தமிழ்க் கூட்டமைப்பை ஒதுக்கி வைத்துவிட்டு அரசாங் கத்தினால் தனித்து தமிழ் மக்களுக்கானதொரு தீர்வை நிச்சயம் முன்வைக்க முடியும். ஆனால் அப்போதும் அவர்கள் அதிலும் குறை கூறவே தலைப்படுவர். சர்வதேசத்திடம் ஓடிச் செல்வர். அதனால்தான் அரசாங்கம் மிகவும் பொறுமையுடன் அவர்கள் தாமாகக் கனிந்து வரும்வரையில் காத்திருக்கின்றது. அதுவரையில் அரசாங்கம் எனும் ரீதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை வெளிநாட்டு உதவிக ளைப் பெற்று அபிவிருத்தி செய்தும் வருகின்றது.

இந்த உண்மை புரியாத புலம்பெயர் தமிழ் மக்கள் கடல் கடந்து சென்றாலும் காக்காவையே குறிதேடிச் சுடும் வேடன் போன்று தாமும் திருந்தாது திருந்தி வாழ நினைக்கும் உள்நாட்டுத் தமிழ் மக்களையும் வாழ விடாது தடுத்து வருகின்றனர். புலிகள் இருந்தபோது இருந்த நிலை இப்போது இல்லை என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண் டும். புலிகளால் துரோகிகள் எனச் சுட்டுக் கொல்லப்பட்டோருக்கு கொண்டாடப்படும் தியாகிகள் நினைவு தின நிகழ்வுகளில் இன்று தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களே கலந்து தியாகச் சுடர்களை ஏற்றி வைக்கிறார்கள். வெறுமனே புலிகளுக்காக கொடி பிடித்த நீங்கள் மட்டும் இன்னமும் ஏன் உங்களைத் திருத்திக் கொள்ளாமலிருக்கிaர்களோ தெரியவில்லை?

editor.tknvm@lakehouse.lk

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.