இந்திய, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை இழுபறிகளை முடித்து வைக்க முயற்சி
இந்திய, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை
இந்திய, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை
இழுபறிகளை முடித்து வைக்க முயற்சி
இந்திய - பாகிஸ்தான் உயர் மட்ட பேச்சுக்கள் சென்ற வாரம் சிறப்பாக ஆரம்பமானது.
நெடுங்காலமாக இழுபறிக்குள்ளாகியுள்ள முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் அடுத்த
சந்ததியினருக்கும் விட்டு வைக்காமல் ஒட்டுமொத்தமாக முடித்துவைப்பதே இந்தப் பேச்சு
வார்த்தைகளின் நோக்கம்.
எவ்வளவுதான் உள்முரண்டுபாடுகள், கோபதாபங்கள் இருந்தாலும் அயலவர் இருவரும்
முரண்பட்டுக் கொண்டிருப்பது இரு நாட்டு பொதுமக்களுக்கும் நல்லதல்ல. உள்ளவற்றை
வெளிப்படையாக எடுத்துரைத்து அரசியல் நலன்களுக்கப்பால் சென்று தேசங்களின் நன்மைக்காக
இந்திய - பாகிஸ்தான் தலைவர்கள் செயற்பட வேண்டியுள்ளது.
இந்திய உயர்மட்டக் குழுவொன்று பாகிஸ்தான் சென்று சென்றவாரம் பேச்சுவார்த்தைகளில்
ஈடுபட்டது.
இந்திய பாதுகாப்பு, உள்துறை அமைச்சர்கள் பாகிஸ்தான் பாதுகாப்பு, உள்துறை
அமைச்சர்களுக்கிடையிலான நேரடிப்பேச்சுக்கள் மட்டுமல்லாது அமைச்சுக்களின் செயலாளர்கள்
மட்டம் வரையும் இந்தப் பேச்சுவார்த்தைகள் வியாபித்தன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நவிட்கமார்
ராவல்பிண்டியில் இது குறித்துப் பேச இந்திய உள்துறை அமைச்சர் சிங் பாகிஸ்தான்
உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மலிக் ஆகியோர் இஸ்லாமாபாத்தில் பேச்சுக்களை நடத்தினர்.
ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துக் கொண்ட இரு
பாதுகாப்பு அமைச்சர்களும் காஷ்மீர் எல்லைப் பிரச்சினை, எல்லைதாண்டிய பயங்கரவாதம்,
அணு மற்றும் ஆயுத ரீதியான போட்டிகள். சியாச்சின் மலைத்தொடர், இரண்டு நாடுகளுக்கும்
எல்லையில் பாயும் நதி நீரிணைகள் பற்றிப் பேசினர்.
இவ்விரண்டு நாடுகளதும் எல்லையோரங்களில் பாயும் நதிகள் யாருக்குச் சொந்தம். எவ்வளவு
தொகையான நீர் விவசாயிகளுக்கப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதிலும் எல்லா
விடயங்களைப் போலவும் இழுபறியுள்ளது. இறைவனின் இயற்கை எழில் கொஞ்சும் மலைத்தொடர்
நதித்தொடர். பச்சைப் பசேல் என்னும் வயல் தொடர்களைக் கொண்ட பிரதேசங்களே இவ்வாரு
நாடுகளையும் எல்லைகளாகக் கொண்டுள்ளன.
யார் எதை எடுப்பது என்பதில் விவசாயிகளுக்குள்ள போட்டியும், பொறாமையும் இந்திய,
பாகிஸ்தானை யுத்தகளத்திற்கும் அழைக்கின்றது.
1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் மூன்று யுத்தங்கள் இந்தப் பெரிய
தேசங்களிடையே மூண்டுள்ளன. போட்டிக்குப் போட்டியாக வளரும் தொழில்நுட்பம், விஞ்ஞானம்,
விவசாயம், கைத்தொழில் துறைகளால் இராணுவ, பொருளாதார மட்டங்களிலும் சமநிலைகளை
உரசிப்பார்ப்பது போன்ற உணர்வுடன் இந்நாடுகள் செயற்படுகின்றன.
என்னதான் சொன்னாலும் இந்தியாவோடு பாகிஸ்தானை ஒப்பிட முடியாத நிலையே இப்போது
காணப்படுகின்றது. சீனாவின் பின்புறத்தை நம்பியே பாகிஸ்தான் வளர்ந்து உயரப்
பார்க்கின்றது. இப் போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடிகள்
அழுத்தங்கள், தலிபான் அல்கைதா அமைப்புக்களின் செயற்பாடுகளால் உள்நாட்டிலும்,
வெளிநாட்டிலும் பொறியில் மாட்டிக்கொண்ட நிலை¨மையிலுள்ளது பாகிஸ்தான். இவ்வளவு
சிக்கல்களை வைத்துக்கொண்டு மிகப்பெரிய நாடான இந்தியாவுடன் சமனாக வளரப் பிரயத்தனம்
செல்வதும் தேவையேற்பட்டால் சண்டித்தனம் பேசுவதும் பாகிஸ்தானின் பின்புலங்களையும்,
பலங்களையும் நம்பிய செயற்பாடே.
ஐயாயிரம் கி.மீற்றர் சீறிப்பாயும் ராட்சத ஏவுகணையை அண்மையில் இந்தியா வெள்ளோட்டம்
விட்டு வெற்றியும் கண்டுவிட்டது.
சீனாவையும் அச்சுறுத்தும் வகையிலான இந்த ஏவுகணை இந்தியாவின் உச்சக்கட்ட இராணுவ
வளர்ச்சியின் எடுத்துக்காட்டு. ஏட்டிக்குப் போட்டியாக சூட்டோடு சூட்டாக பாகிஸ்தானும்
இது போன்ற ஏவுகணைகளை வெள்ளோட்டமிட்ட போதும் இந்தியாவின் எல்லையோ இலக்கோ, எட்ட
முடியாத தூரத்திலுள்ளதென்பது உறுதியாகியுள்ள பின்னணியிலேயே இந்திய, பாகிஸ்தான்
பேச்சுவார்த்தைகள் சென்றவாரம் மீண்டும் ஆரம்பமாகின.
இப்பேச்சுக்கள் 2004 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டு அடிக்கடி கூடிப்பேசி
நீண்டகால மோதல்களை முடித்து வைப்பதென்றே முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இவ்விரு
நாடுகளதும் தலைவிதியோ தெரியாது. பேசுவது பிரிவது பின்னர் மீண்டும் கூடுவது கலைவது
என்று எட்டு வருடங்கள் கடந்து விட்டன.
2008 இல் மும்பைத் தாக்குதல் நடந்த பின்னர் இந்தப் பேச்சுக்கள் முற்றாகக் கையிழந்தன.
பாகிஸ்தானின் தூண்டுதலினால்தான் மும்பை தாக்கப்பட்டதாக குற்றம் சுமத்திய இந்தியா
தாக்குதலுக்குப் பொறுப்பானோரை ஒப்படைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தது.
இந்த இழுபறிகளால் நான்கு வருடங்கள் கடந்து இப்போது பேசத் தொடங்கியுள்ளனர்.
அப்கானிஸ்தானில் தலிபான்களின் அட்டகாசம் தலைதூக்காமல் போதியளவு உதவிகளை இந்தியா
செய்ய வேண்டுமென்று அமெரிக்கா கேட்டுள்ளது. நேட்டோ படைகள் 2014 இல் வெளியேறிய
பின்னர் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை இந்தியா பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதே
அமெரிக்காவின் விருப்பமாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் உள்விவகாரங்களில் இந்திய தலையீடுகள் பாகிஸ்தானின் செல்வாக்கை
ஓரங்கட்டி விடும். அங்கு இடம்பெறும் தலிபான்களின் செயற்பாடுகள் சிலதை பாகிஸ்தான்
தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதுடன் இஸ்லாமாபாத்தின் மறைமுக காய் நகர்த்தல்கள்
காபூலை சிக்கலுக்குள்ளாக்கின்றன. எனவே, ஆப்கானிஸ்தான் எப்போதும் தன் பிடியிலுள்ளதையே
பாகிஸ்தான் விரும்பும். அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா ஆப்கான்
விடயங்களில் தலையிடக் கூடாதென்பதற்காகவே முன்னர் காபூலில் உள்ள இந்திய தூதரகம்
குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
பாகிஸ்தானின் கைப்பிள்ளைகளே இத்தாக்குதலைச் செய்திருப்பர் என்பது இந்தியாவின்
சந்தேகம். இவை போன்ற இன்னோரன்ன விடயங்களும் இந்திய, பாகிஸ்தான் அமைச்சர்கள்
மட்டத்தில் பேசப்பட்டன. எல்லா விடயங்களையும் இந்தியா நிதானமாகக் கையாள்வதால் பல
முரண்டுபாடுகள் யுத்தமாக வெடிப்பது தவிர்க்கப்பட்டது. மும்பைத் தாக்குதலின் போது
இந்திய, பாகிஸ்தான் முரண்பாடுகள் உச்சமட்டத்தை எட்டியதால் போர் வெடிப்பதையே பலரும்
எதிர்பார்த்து அஞ்சிக் கொண்டடிருந்தனர். கடைசியாக இரு நாடுகளும் விட்டுக்கொடுத்து
விடயங்களைக் கையாண்டன.