![]()
நந்தன வருடம் ஆனி மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
|
50 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றுகூடிய ஹொரணை சென் பிலமினா கல்லூரி பழைய மாணவர்கள்(கடந்தவாரத் தொடர்ச்சி) பாடசாலை மூடப்பட்டதால் இங்கு கல்வி கற்றுவந்த நூற்றுக்கணக்கான தமிழ், சிங்கள மாணவர்கள் குறிப்பாக தமிழ் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர பிரதேசத்தில் ஒரு பாடசாலையேனும் இல்லாத காரணத்தினால் இடைநடுவில் கல்வியைக் கைவிடும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். வறுமை காரணமாக தூரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் சேர்ந்து கல்வியைத் தொடரும் வாய்ப்பை இழந்தனர். பாடசா லையை மூடிவிடுவதால் தோட்டப்புறப் பிள்ளைகளின் எதிர்கால நிலை என்னவாகும் என்பது பற்றி சற்றேனும் சிந்தித்துப் பார்க்காது எடுத்த முடிவு குறித்து மாண வர்களும், பெற்றோரும் மிகவும் மனம் நொந்து போயினர். இப்பாடசாலை மூடப்படாமல் தொடர்ந்து இயங்கி வந்திருக்குமேயானால் களுத்துறை மாவட்டத்திலேயே சிறந்ததொரு பாடசாலையாக பெயர் பெற்று விளங்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்பாடசாலை மூடப்பட்டதைத் தொடந்து கற்கும் வாய்ப்பை இழந்த பல மாணவர் கள் தோட்டத்தில் வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். சிலர் தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்து கொண்டனர். இன்னும் சிலர் ஏதோ ஒரு வகையில் கல்வியைத் தொடர்ந்து கற்றுத் தேர்ந்து உயர்ந்த நிலையை அடைந்து விட்டனர். பலர் சிறிமா-சாஸ்திரி ஒப்பந் தத்தின் கீழ் தாயகம் திரும்பினர். சிலர் அகால மரணமடைந்துவிட்டனர். இவர்களில் சிலர் தாம் பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு வவுனியா, பதுளை போன்ற தூரப் பிரதேசங்களில் குடியேறி குடும்பம், பிள்ளைகளாகி, தாத்தா, பாட்டியாகி விட்ட னர். உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஆசிரியர்களான ஜோர்ஜ் ஜோசப், ருசீலா சிரிவர்த்தன, சீத்தா ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்களாவர். பிரிந்து சென்று ஆங்காங்கே குடியேறியுள்ள சென் பிலமினா பழைய மாணவர்கள் எல்லோரையும் தேடிக் கண்டுபிடித்து “அன்னை சென் பிலமினா இல்லத்தில் ஒன்று கூட்டி அவர்களைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்து அவர்களுக்கு விருந்தளிக்க வேண்டும். இது இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசிரி யர்ப் பெருந்தகை ஜோர்ஜ் ஜோசப்பின் ஒரு நீண்டகால கனவாகும். அவர் மேற்கொண்ட அயராத முயற்சி வெற்றியளித்தது. அவரது கனவும் நனவா னது. பழைய மாணவர்களின் பெயர், முக வரியை மிகவும் சிரமப்பட்டு தேடிக்கண்டு பிடித்து அவர்களுக்கான அழைப்பை தொலைபேசி மூலமும், கடித மூலமும் அறிவித்து கடந்த 12-05-2012ல் 50 ஆண்டு களுக்குப் பின்னர் சென் பிலமினா கல்லூரி மண்டபத்தில் ஒன்றுகூடினர். 50 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற் தடவையாக ஒன்று கூடிய இந்த ஒன்றுகூடலில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், சிங்கள மாணவர்கள் கலந்துகொண்டனர். பழைய மாணவர்களாக இருந்தவர்கள் தாத்தா, பாட்டியாகி பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினருடன் ஒன்றுகூடியிருந்தனர். 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற இந்த அபூர்வ நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு ஆரத்தழுவி கண்ணீர் மல்கினர். மகிழ்ச்சிப் பெருக்கினால் வாய் பேச முடியாது மெளனிகளாயினர். அடையாளமே தெரியாத சிலர் ஒருவரை ஒருவர் கேட்டுத் தெரிந்துகொண்டு கட்டித்தழுவி கண்ணீர் வடித்தனர். குசலம் விசாரித்தனர். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா என்ற நிலையே அங்கு காணப்பட்டது. ஆசிரியர்களை வணங்கி கட்டித்தழுவி கண்ணீர் மல்க ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர். பாடசாலை வாழ்க்கையின் அந்த பசுமையான நினைவுகளே ஒருவரை ஒருவர் மீட்டுக் கொண்டனர். குடும்ப விபரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். இங்கு இடம்பெற்ற காட்சி பார்த்திருந்தோர் பலரின் நெஞ்சை நெகிழ வைத்தது. நினைத்துப் பார்க்க முடியாத, யாருக்குமே கிடைக்கப் பெறாத ஒரு பாக்கியமாகும். 50 வருடங்களுக்குப் பின்னர் இவ்வாறு ஒன்றுகூடுவது என்பது சாதாரண விடயமல்ல. பொன் எழுத்துக் களால் பொறிக்கப்பட வேண்டியதும் வாழ்நாளில் மறக்கமுடியாததொரு நிகழ்வுமாகும். இந்த ஒன்றுகூடலில் விசேட அதிதி யாக அழைக்கப்பட்டு அன்றைய தினம் அங்கு வருகை தந்த சென். மாட்டீன் டீ போரஸ் தேவாலய வண. பிதா கெனீசியஸை ஆசிரியர் ஜோர்ஜ் ஜோசப் வெற்றிலை வழங்கி வரவேற்றார். அதனையடுத்து வண பிதா மங்கள விளக்கேற்றி வைக்க அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களான ஜோர்ஜ் ஜோசப், ருசீலா சிரிவர்த்தன, பழைய மாணவர்கள் சார்பில் எம். எஸ். சந்தானம், வீ. மூர்த்தி, வீ. கதிரேசன், மாகிரட், பிரான்ஸிஸ் ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்தனர். அதனையடுத்து பீ. ராமலிங்கம் பாடசாலை வரலாறு பற்றி எடுத்துக் கூற ஆசிரியர் ஜோர்ஜ் ஜோசப் சென் பிலமினா கல்லூரியின் வளர்ச் சிக்காக அரும் பணியாற்றிய கடந்தகால குருமாரை நினைவு கூர்ந்து பேசினார். அங்கு உரையாற்றிய வண பிதா கெனீசியஸ் இப்பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் பல வருடங்களுக்குப் பின்னர் இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்துள்ளமை மிகவும் பாராட்டுதலுக்குரியதும் வரவேற் கத்தக்கதுமாகும். சென் பிலமினா கல்லூரி பிரதேச தமிழ், சிங்கள பிள்ளைகளுக்கு பெரும் சேவையைப் பெற்றுக் கொடுத்துள்ளது. அதனை மறக்காது நன்றி தெரிவிக்கும் வகையில் ஒன்று கூடியுள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும். இன்று இயங்கி வரும் பாடசாலைகளில் இவ்வாறான நிகழ்வு இடம்பெறுவது கிடையாது. வீடு, கணவன், மனைவி, பிள்ளைகள், வேலை, வியாபாரம் என கவனத்தில் ஈடுபடும்போது இது போன்ற நிகழ்வுகளில் பங்கு கொள்வது சிரமமான காரியமாகும். அவ்வாறிருக்கும் போது அவையெல்லாவற்றையும் ஒதுக்கிவைத்து விட்டு பழைய மாணவர்கள் ஒன்று கூடியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க தாகும் என்று கூறினார். பழைய மாணவர்களில் ஒருவரும் பத்திரிகையாளருமான வீ. மூர்த்தி பாடசாலை வாழ்க்கையின் நினைவுகளை நினைவூட்டி நீண்டதொரு உரையாற்றினார். பழைய மாணவரும் சட்டத்தரணியுமான கே. சண்முகரட்ணம் இங்கு உரையாற்றியதுடன் அவர் எழுதிய ‘பயணங்களில்’ எனும் நூலின் பிரதியையும் ஆசிரியர் ஜோர்ஜ் ஜோசப்பிடம் கையளித்தார். இதனையடுத்த பழைய மாணவரான எம். எஸ். சந்தனம் வணபிதா கெனீசியஸ¤க்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். பழைய மாணவரான எம். மாசிலாமணி ஆசிரியர் ஜோர்ஜ் ஜோசப்புக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்க பழைய மாணவி மார்கிரட் அவருக்கு மலர்மாலை அணிவித்து வணங்கினார். ஆசிரியை ருசீலா சிரிவர்த்தன பழைய மாணவியான ஹில்டாவினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார். பழைய மாணவர்களில் ஒருவரான பீ. பாலனும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார். இந்நிகழ்வையடுத்து ஒன்று கூடியிருந்த பழைய மாணவர்கள் ஒவ்வொருவரும் தம்மையும் தமது குடும்பம் பற்றியும் அறிமுகம் செய்தனர். சிங்கள மாணவரான எச். டீ. சிறிபால 50 வருடங்களுக்கு முன்னர் மேடையில் பாடிய காலங்களில் அவள் வசந்தம் என்ற பழைய சினிமா பாடலை மிக அருமையாகப் பாடி கூடியிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி பழைய நினைவுக்குக் கூட்டிச் சென்றார். பழைய மாணவரான பீ. பாலனும் தேவன் கோவில் மணி ஓசை என்ற பாடலைப் பாடி அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தினார். இது மனதை உருக்கும் ஒரு நிகழ்வாக அமைந்தது. பழைய மாணவர்களில் ஒருவரும் தொழில் அதிபருமான எஸ். டீ. செல்வகுமார் ஆசிரியர் ஜோர்ஜ் ஜோசப்புக்கு நினைவுப் பொருள் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். இதனையடுத்து பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர் மேரி செலின் செயலாளர் வீ. மூர்த்தி, உபதலைவர்கள் எஸ். டீ. செல்வகுமார், எஸ். பிரான்ஸிஸ், உப செயலாளர் ஜி. மனோகரன் பொருளாளர் எம். எஸ். சந்தானம், ஆலோசகர்கள் கே. சண்முகரட்ணம், பீ. பாலன், மாகிரட் தேவராணி போஷகர் ஜோர்ஜ் ஜோசப் கமிட்டி உறுப்பினர்கள், எச். பீ. சிரிபால, ரீ.ஆர். ஏ. ரசல், எச். ஹில்டன், வீ. நமசிவாயம், வீ. கதிரேசன். இறுதியாக இந்த ஒன்று கூடலை வெற்றிகரமாக நடாத்த ஒத்துழைப்பு வழங்கிய தொழில் அதிபர்களான பழைய மாணவர்கள் எஸ். டீ. செல்வகுமார், எம். எஸ். சந்தனம் ஆகிய இருவருக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. பழைய மாணவர்கள் ஒவ்வொருவரினாலும் அன்போடு அழைக்கப்படும் ஜோர்ஜ் மாஸ்டர் என்ற அந்த பெருமைக்குரிய ஆசான் ஜோர்ஜ் ஜோசப், மாணவர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்ட ஒரு மனித தெய்வமுமாவார். எல்லாப்புகழும் ஜோர்ஜ் ஜோசப்புக்கே என வாழ்த்தினர். இறுதியாக அனைவரும் பகல் போசனத்தில் கலந்து கொண்டனர். மாலையாகிக் கொண்டிருந்தது. கதிரசன் மெதுவாக குடதிசை நோக்கி நகர ஆரம்பிக்க மிகப்பெரிய விசாலமான அந்த மண்டபத்தில் ஒன்று கூடியிருந்த அனைவரும் ஒவ்வொருவராக விடைபெற்று கவலை தோய்ந்த முகத்துடன் மீண்டும் பிரிந்து சென்றனர். விசாலமான அந்த மண்டபம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.
இங்கிரியமூர்த்தி...- |
||
|
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். webmanager@lakehouse.lk |