புத் 64 இல. 25

நந்தன வருடம் ஆனி மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 26

SUNDAY JUNE 17 2012

 
அரசாங்கத்துக்கு சவால் விடக்கூடிய

அரசாங்கத்துக்கு சவால் விடக்கூடிய

எவருமே இருப்பதாக நாம் கருதவில்லை
 

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

இந்நாட்டு மக்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்த சுகாதார அமைச்சு மட்டத்தில் விலை மதிக்க முடியாத பல நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதோடு டெங்கு நுளம்புகளின் தாக்கத்தை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதும் தமது அமைச்சின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன அவர்கள் குறிப்பிடுகின்றார்.

கேள்வி : டெங்கு நோய் இன்று மக்களை வெகுவாக பாதிக்கின்றது. டெங்கு நோய்க் காரணிகளை ஒழிக்க சுகாதார அமைச்சு என்ன நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்கின்றது?

பதில் : தேசிய நுளம்பு ஒழிப்பு வாரமொன்றை கடந்த தினங்களில் நாம் பிரகடனப்படுத்தினோம். டெங்கு நுளம்பு மாத்திரமன்றி பொது மக்களுக்கு தீங்கு இழைக்கும் யானைக்கால், மலேரியா, ஜப்பானிஸ் என்சபலய்ட்ஸ் போன்ற நோய்களை உண்டாக்கும் சகல நுளம்புகளையும் ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை இவ்வாரத்தின் முக்கிய ஒரு விடயமாகும்.தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தைமிக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினோம். எமது உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் சென்று மக்களை அறிவுறுத்தி நுளம்புகள் பெருகும் இடங்களை ஒழித்தனர்.

2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 5 நுளம்பு ஒழிப்பு வாரங்களை அமைச்சு நடைமுறைப்படுத்தியிருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி டெங்கு செயற்பாட்டு அமைப்பு ஆம்பிக்கப்பட்டதோடு டெங்கு நுளம்புகளின் தாக்கத்தை பெருமளவில் கட்டுப்படுத்த எம்மால் முடிந்தது. சுகாதார அமைச்சோடு இணைந்த வகையில் பாதுகாப்பு, கல்வி, உள்நாட்டு, இளைஞர் அமைச்சுக்களும் இணைந்து இந்த செயற்பாட்டு அமைப்புக்கு சுமார் 10 அமைச்சுக்களின் ஒத்துழைப்பு கிடைக்கின்றது. அதற்காக பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது. தாம் வாழும் சூழலை சுத்தமாக வைத்திருப்பதனால் நுளம்புகளை மிக வெற்றிகரமாக ஒழித்து விடலாம்.

கேள்வி : ஒரு காலத்தில் டெங்கு நோயாளிகளின் தொகை கூடுகின்றது. இன்னும் சில காலங்களில் அதன் எண்ணிக்கை குறைகின்றது. இவ்வாறு டெங்கு நோயாளிகளின் தொகை குறைகின்ற போது இந்த டெங்கு நுளம்பு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று சிலர் குறைகூறுகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் : இக்குற்றச்சாட்டை அமைச்சர் என்ற வகையில் நான் முழுமையாக நிராகரிக்கிறேன். ஏனென்றால் வருடம் முழுவதும் நாம் இத்தகைய நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறோம். நோயாளர்கள் கூடிக் குறையுமட்டும் நாம் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. அரசியல்வாதிகள் அல்லது ஊடகத்தினால் இவ்வகையில் விமர்சனம் செய்வது நுளம்பு பெருக்கம் அதிகரிக்கும் போதுமட்டுமே. ஆனால் நாம் 365 நாட்களிலும் வருடம் முழுவதும் நுளம்பு ஒழிப்புத் திட்டங்களை நாடு முழுவதும் தொடர்ச்சியாக செயற்படுத்தி வருகிறோம். நாடு முழுவதும் 120 குழுக்கள் நாளாந்தம் ஆய்வுகளை நடத்தி வருகின்றன. அதனால் நுளம்பு ஒழிப்பு செயற்பாடு என்பது வாரத்துக்கு, மாதத்துக்கு மட்டும் என எல்லைப்படுத்தப்படவில்லை.

கேள்வி : ஸ்ரீலங்கா திரிபோஷா கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படும் மேலதிக திரிபோஷ தொகையை அடுத்த 2 மாதங்களுக்குள் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக சுகாதார அமைச்சரான நீங்கள் குறிப்பிட்டீர்கள். மேலதிக திரிபோஷாவை வெளிநாடுகளுக்கு அனுப்புவது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகிறார்கள் அல்லவா?

பதில் : எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கும் சொல்ல ஏதாவது தேவை தானே. அதனால் தான் தேவையற்ற விடயங்களை கூறிக் கொண்டு இருக்கிறர்கள். விசேடமாக திரிபோஷா பெற்றுக் கொடுப்பது கர்ப்பிணித் தாய்மாருக்கும் சிறு பிள்ளைகளுக்கும் தான். குறைந்த வருமானமுள்ள குடும்பங்களின் போஷாக்கின்மையை ஒழிக்கும் நோக்கத்தில் தான் திரிபோஷா பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் நாட்டிலுள்ள அனைவருக்கும் திரிபோஷா சாப்பிட கொடுக்குமாறு கூறுகிறார்கள். அவ்வாறு செய்ய முடியாது தானே? குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கர்ப்பிணிகளினதும் சிறு பிள்ளைகளினதும் சுகாதார பாதுகாப்புக்காக திரிபோஷா பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் நாம் உற்பத்தி செய்யும் திரிபோஷா அதிகரிக்கப் போகின்றது. அதை உலகத்திலுள்ள ஒரு வறிய நாட்டின் கர்ப்பிணிகளுக்கும் சிறு பிள்ளைகளினதும் போஷாக்கை அதிகரிக்கவும் நாம் இலவசமாக பெற்றுக் கொடுக்கப் போகின்றோம்.

கேள்வி : சுகாதார உத்தியோகத்தர் களின் தொழிற்சங்க வேலை நிறுத்தம் தொடந்தும் வருகின்றது. இந்த வேலை நிறுத்தங்களை நிறுத்த அமைச்சு மட் டத்தில் எடுக்கப்படும் நடைமுறைகள் என்ன?

பதில் : சுகாதார உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க வேலை நிறுத்தம் ஒரு நாளும் முடிவடையப் போவதில்லை. தொழிற்சங்க தலைவர்களின் அதிகாரப் போராட்டங்களாக இந்தவேலை நிறுத்தங்களை நடைமுறைப்படுத்துகின்றனர். இந்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் அதிகார போராட்டத்தை விட சுகாதாரம் தொடர்பான தொழிற்சங்கங்களின் ஒரு அதிகார போராட்டம் இருக்கின்றது. தொழிற்சங்கத் தலைவர்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இந்த அனைத்து வேலை நிறுத்தங்களும் மேற்கொள்ளப்படுகின்றது. தமது தொழிற்சங்கங்களின் அங்கத்துவத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் ஏனைய தொழிற்சங்கங்களை வலுவிழக்கச் செய்யவும் அப்பாவி நோயாளிகளின் உயிரை பயணம் வைத்து நடத்தப்படும் இந்த வேலை நிறுத்தங்களை செயற்படுத்துவோருக்கு எப்போதாவது இயற்கையாகவே தண்டனை கிடைக்கும் என்று ஒரு புத்த சமயத்தவன் என்ற வகையில் நான் நம்புகிறேன்.

கேள்வி : தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

பதில் : தனியார் நிறுவனங்களை விருத்தி செய்வது அரசாங்கத்தின் ஒரு கொள்கையாகும். தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பது தொடர்பாக எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டிய தரத்துக்கமைய முழுமையான ஒரு கல்லூரியாக காணப்பட மாட்டாது. உலகின் அனைத்து நாடுகளிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால் அவை சிறந்த தரத்தில் இருக்கின்றன. கல்வியை சிறந்த வகையில் தரமான வகையில் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்கும் போது அதன் தரம், சிறப்புத் தன்மை பற்றி கவனத்திலெடுக்கப்பட வேண்டும்.

கேள்வி : தேர்தலொன்று நடைபெறப் போவதாக கேள்விப்படுகிறோம். இது உண்மையா?

பதில் : எமது நாட்டுக்கு தேர்தல் அட்டவணையொன்றுள்ளது. ஜனாதிபதித்தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என்றவாறு காலத்துக்குக் காலம் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அடுத்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தலொன்று நடக்க இருக்கின்றது. தேர்தலில் ஒரு வேறுபாடு ஏற்படுவதென்றால் முதலமைச்சரும், ஆளுநரும், ஜனாதிபதியும் கலந்தாலோசித்து தீர்மானிக்க வேண்டும். மாகாண சபை தேர்தலொன்றை நடத்துவது தொடர்பாக அரசாங்கம் இன்னும் திகதிகளை தீர்மானிக்கவில்லை.

கேள்வி : முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை பெற்றார். ஜனாதிபதியின் விசேட அதிகாரங்களின் கீழ் பொன்சேகா அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட இந்த விடுதலை பற்றி உங்களது கருத்து என்ன?

பதில் : ஜனாதிபதியின் விசேட அதிகாரங்களின் கீழ் பொன்சேகா அவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கப்பட்டது. அது அந்தளவு விசேட விடயமல்ல. உலக அரசியலை நோக்கும் போது இது அந்தளவு முக்கியமானதல்ல. அது ஒரு சாதாரண விடயம் தான். அமைச்சரவையிடம் கேட் டுத் தான் அவர் இத்தீர்மானத்தை எடுத்தார்.

கேள்வி : சரத் பொன்சேகாவை விடுதலை செய்தது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு சவாலாக உள்ளதா?

பதில் : ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு பொன்சேகாவோ அல்லது வேறு யாரோ பிரச்சினையல்ல. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எப்போதுமே அரசியலில் ஈடுபட்டுவரும் கட்சி. இன்று எங்களுக்கு மிகப் பலம் வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்.

அதேபோல் எமது கட்சிக்கு அரசியலில் சிறந்த ஒரு அனுபவமும் இருக்கின்றது. அதனால் திரு. பொன்சேகா அரசியல் மேடைக்கு வந்தார் என்பது எமக்கு எவ்விதத்திலும் ஒரு சவாலாக அமையாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மிக சிறப்பான வகையில் நடைபெறுகின்றன. அதனால் தேர்தலில் வெற்றி பெற எமக்கு எவ்விதப் போட்டியுமில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை எவ்விதக் குறையுமின்றி செய்து கொண்டு போகின்றதென்று பொது மக்களுக்கும் தெரியும். ஜனநாயக அரசியலினுள் எமது கட்சிக்கு சிறந்த அனுபவம் இருப்பதால் எவ்வித சவாலுமின்றி தேர்தலை வெற்றி கொள்ள முடியும்.

கேள்வி : நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக உங்களால் என்ன கூற முடியும்?

பதில் : இந்த ஆணைக்குழு தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைக்க அரசாங்கத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரப்பட்டது. அதன்படி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாலும் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கருத்துக்களும் பரிந்துரைகளும் இந்தக் குழு மூலம் நாம் அண்மையில் முன்வைக்க இருக்கின்றோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.