காதலியை சுட்டுக்கொன்று விட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட
கடற்படைவீரர்
காதலியை சுட்டுக்கொன்று விட்டு தன்னைத் தானே
சுட்டு தற்கொலை செய்துகொண்ட கடற்படைவீரர்
திருமணத்துக்கு மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரம் காரணம்
அன்பான இளம் காதலியை சுட்டுக்கொன்ற முன்னாள் காதலன் தானும் அதே துப்பாக்கியினால்
சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமிது.
திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் முப்பத்தாறு வயதுடைய ஆர். எம். ஜி.
சுரேந்திரவும் இருபத்திரண்டு வயதுடைய நதீஷா நெலும் சோமசிறியும் அன்பான காதலர்கள்.
நதீஷா நாவலப்பிட்டி கோனாபொலையை சேர்ந்தவராவார். காதலன் வெல்லவாய மஹா ஓயாவை
சேர்ந்தவர். கொலை தற்கொலைக்கான காரணம் காதல் கசந்ததும் மற்றும் காதலி காதலனை
திருமணம் செய்ய மறுத்ததுமாகும். காதலன் அவளை பலமுறை வற்புறுத்தியும் அவள்
திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.
கடற்படை வீரரான காதலன் ஏற்கனவே திருமணம் முடித்து
ஒரு பிள்ளைக்கு தந்தையானவர். காதலியின் அழகிலும் அன்பிலும் கட்டுண்ட இவர்
மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். நான்கு வருடங்களுக்கு முன் காரைநகர்
கடற்படை முகாமில் காதலன் கடமையாற்றியது பயங்கரவாத காலப் பகுதியிலாகும். கடமை நேரம்
போக வீரர்கள் முகாமில் தங்கியிருக்க வேண்டிய நிலை. இந்நிலையிலும் ஒருவரையொருவர்
அறிமுகமாகும் நிலையில் இவரது காதல் மலர்ந்தது. இளம் பெண்ணான நதீஷா உயரமாகவும்
அழகியாகவுமிருந்தார். கடற்படை முகாமுக்கு இவர் வந்தபோது சுரேந்திராவை சந்தித்ததன்
பின் அடிக்கடி சந்தித்து நெருங்கி பழவி வந்தனர். மூன்று வருடங்களாக இவர்களது காதல்
சுடர்விட்டது.
கடற்படை வீராங்கனையை கொன்ற
பின் தானும் தற்கொலை செய்துகொள்வதை சித்தரிக்கும் படம்.
தன் காதலன் சுரேந்திர ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தகப்பனென்றும் காதலன்
மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவும் செய்தியறிந்த நதீஷா அதிர்ச்சியடைந்ததுடன்
வேனையடைந்தாள். விவாகரத்து பெற்ற ஒருவனை தன் மகள் திருமணம் செய்வதை பெற்றோர்
எதிர்ப்பர் என அவளுக்கு தெரியும். இந்நிலையில் சுரேந்திர அவளை திருமணம்
செய்துகொள்ளும்படி நதீஷாவை வற்புறுத்தி வந்தான்.
இந்நிலையில் பெற்றோர் காலி கடற்படை முகாமில் கடமையாற்றும் இன்னுமொருவரை மகள்
நதீஷாவுக்கு மணமகனாக தெரிவு செய்ததையறிந்த அவள் வியப்படைந்தாள். இரண்டு வீரர்களும்
நதீஷா விடயத்தில் சம்பந்தப்பட்டிருந்ததால் பிரச்சினையேற்பட்டு இருவரும் வெவ்வேறு
முகாம்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்க திருகோணமலை
முகாமுக்கு இடமாற்றம் பெற்ற கடற்படை வீரரை நதீஷா திருமணம் செய்ய விரும்பினாள்.
கடற்படை வீரர் சுரேந்திர காரைநகர் முகாமில் சில வருடங்களுக்கு முன் கடமையாற்றி
பின்னர் வாகரை முகாமுக்கு மாற்றப்பட்டார். காரைநகர் முகாமில் கடமையாற்றிய போது
சுரேந்திரவுக்கு எதிரான எவ்வித உத்தியோகபூர்வ குற்றச்சாட்டுக்களும்
இருக்கவில்லையென்றும் காரைநகர் முகாமில் சுரேந்திரவுடன் கடமையாற்றிய பெண் கடற்படை
வீராங்கனை எவ்வித குற்றச்சாட்டுக்களையும் இவர் மீது சுமத்தவில்லை என்றும் கடற்படை
பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கடற் படை வீரர் கடற்படைக்கு களங்கம்
ஏற்படுத்தியவராவார். திருமலை முகாமில் இவர் கடமையாற்றிய போது நிராயுதபாணியான தன் சக
வீரரை பழி தீர்க்கும் எண்ணத்துடன் ரி – 81 தன்னியக்க துப்பாக்கியினால் சுட்ட
குற்றத்திற்காக விசாரணைகள் நடைபெற்றுள்ளன.
ஏழு மாதங்களுக்கு முன் நதீஷா விடுமுறைக்காக வீடு திரும்பிய போது இவரது
விருப்பத்துக்கு மாறாக நாவலப்பிட்டிவரை சுரேந்திர இவரை பின்தொடர்ந்துள்ளார்.
இதனை நதீஷா தன் தாயாரிடம் கூறி அச்சமாயிருப் பதாகவும் தெரிவித்துள்ளார்.
மதுவருந்திய சுரேந்திர நதீஷாவின் வீட்டுக்கு வந்து கதவை பலமாக தட்டிக்
கொண்டிருந்ததால் கதவு உடைப்பட்டு உள்ளே வந்து விடுவான் என்ற பயத்தால் நதீஷாவின்
தாயார் நாவலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்தார். பொலிஸார் ஸ்தலத்துக்கு வந்தபோது
சுரேந்திர வீட்டு வாசலிலிருப்பதைக் கண்டு அவரை கைதுசெய்து நாவலப்பிட்டி பொலிஸ்
நிலையத்துக்கு இட்டுச் சென்று நிலைய பொறுப்பதிகாரி சுரேந்திரவை எச்சரித்து
தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டார்.
2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆறாம் திகதி செவ்வாய்க்கிழமை திருத்தவேலைகளுக்காக வாகரை
முகாமிலிருந்து திருமலை கடற்படை முகாமுக்கு வாகனமொன்று கொண்டு வரப்பட்டபோது ஜி.
சுரேந்திர பாதுகாப்பு கடமையிலிருந்தார். அன்றிரவையடுத்து மறுநாள் பகல் 12.30
மணியளவில் தன் பழைய காதலி நதீஷா பகலுணவை எடுத்துச் செல்வதை சுரேந்திர கண்டார்.
இவருடன் இன்னுமொரு பெண் வீராங்கனையும் பக்கத்தில் சென்றார். நதீஷா கடற்படை முகாமில்
சேமநலப் பிரிவை சேர்ந்தவராவார்.
நெலுமை கண்ட சுரேந்திரவுக்கு பழைய காதலை மறக்க முடியவில்லை. காதலியை மறக்க முடியாத
நிலையில் துவண்டான். அவள் தன்னை ஏமாற்றியதையிட்டு வேதனையடைந்து அவளை பழிவாங்கத்
துடித்தான்.
அவன் அவளின் பின்னால் தொடர்ந்த நிலையில் அவள் பீதியடைந்தாள். இருவரிடையே
வாக்குவாதமேற்பட்டதும் அவன் குரூரமாயிருப்பதைக் கண்ட நெலும் தன் உயிரை
காப்பாற்றிக்கொள்ள ஓடினாள். உடனே சுரேந்திர தன் கையிலிருந்த துப்பாக்கியினால்
நதீஷாவின் தலையை நோக்கி சுட்டான். அவள் இரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தாள். சில
நிமிடங்கள் அவன் முழுங்காலிட்டு இறந்த காதலியைப் பார்த்தவாறு கழுத்துப் பகுதியில்
வைத்து விசையை அழுத்த பல தோட்டாக்கள் அவன் கழுத்துப் பகுதியை தாக்கி அவனும் அவள்
பக்கத்திலேயே சாய்ந்தான். அவன் உயிரும் பிரிந்தது. கடற்படை முகாமில்
அச்சமயமிருந்தவர்கள் இதனை நேரில் கண்டனர். தகவலறிந்த திருமலை துறைமுக பொலிஸார்
ஸ்தலத்துக்கு விரைந்து இருவர் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டனர்.
இறந்த கடற்படை வீராங்கனை நாவலப்பிட்டியை சேர்ந்தவர். வரகாவ ஆரம்ப பாடசாலை, அர்ச்.
அன்ட்ரூஸ் மகளிர் பாடசாலையிலும் கல்வி கற்றவர். இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர்.
கடந்த சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு வீடு வந்து சந்தோசமாக நாட்களை கழித்த இவர் கடந்த
வெசாக் தினத்தில் வீடு வரமுடியவில்லை.
இருப்பினும் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் திகதி திங்கட்கிழமை பொசன் நோன்மதி
தினத்தில் வீடு வந்து பெற்றோரை அனுராதபுரம் புண்ணிய பூமிக்கு அழைத்துச் செல்வதாக
வாக்குறுதி அளித்திருந்தாராம்.