அரைநூற்றாண்டுக்கு மேலாக கல்வி, கலை, இலக்கியம், மார்க்கம் என பல்வேறு துறைகளில்
பங்களிப்பு செய்து வருகிறார் கலாபூஷணம் எழுத்தாளர் திக்குவல்லை எம். எச். எம். அலி.
இலைமறை காயாக இருந்து நாடகம், களி கம்பாட்டம், கோலாட்டம், பாடல், ஜோடனை அரங்கக்கலை
என பல்வேறு துறைகளில் தனது ஆளுமைகளை வெளிப்படுத்திவரும் இவர் தனது 80ஆவது வயதில்
அண்மையில் தனது முதலாவது நூலை வெளியிட்டார். 80வயது தாண்டியும் இளைஞர் போல்
துடிப்புடன் இயங்கும் எழுத்தாளர் எம். எச்.எம். அலியை சந்தித்து அவரது கடந்த கால
அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம்.
‘உங்கள் ஆரம்பக் கல்வி குறித்துக் கூற முடியுமா?’
நான் திக்குவல்லையில் பிறந்தாலும் ஆரம்பக் கல்வியை கிரிந்தை பாடசாலையிலே கற்றேன்.
60 வருடங்களுக்கு மேலாக இன்னும் ஆசிரியர் துறையில் ஈடுபட்டு வரும் நான் 2ம் ஆண்டில்
இரண்டு தடவை கல்வி கற்றுள்ளேன் என்றால் நம்புவீர்களா? நான் 2 ஆம் ஆண்டு கல்வி
கற்கும் போது முதலாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்தது. யுத்தம் நடந்ததால்
பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. மாறாக தோட்டப் பணிகள், சாப்பாடு
சமைப்பது போன்றவையே பாடசாலையில் இடம்பெற்றது.
இந்த நிலையில் திக்குவலைக்கு வந்து மீண்டும் 2ஆம் ஆண்டு கற்க நேரிட்டது. அப்பொழுது
எம். ஐ. மொஹமட் தான் பிரதம ஆசிரியராக இருந்தார். மொஹமட் ஆசிரியர்தான் எனது முதலாவது
ஆசிரியர். 1948ல் ஏ. எச். எஸ். மொஹம்மட் பிரதம ஆசிரியராக வந்த பின் தான் எமது
வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவரின் ஊக்குவிப்பில் சிறப்பாகக் கற்று எஸ். எஸ்.
சி. பரீட்சையில் சித்திபெற்று ஆசிரியரானேன்.
எவ்வளவு காலமாக ஆசிரியராக பணிபுர்ந்தீர்கள்?
1958 ஆம்ஆண்டு முதன் முதலில் ஆசிரியராக பதவி ஏற்றேன். அன்று முதல் இன்று வரை சுமார்
54 வருடங்களாக கற்பித்து வருகிறேன். 1971 ஆம் ஆண்டு கல்விக் கல்லூரியில் சேர்ந்தேன்.
1973ல் அலுபொத்தையிலும் 1974ல் தங்கல்லையிலும் கற்பித்தேன். 1975 முதல் 1990 வரை
திக்கவல்லை மன்ஹாதில் கற்பித்தேன். 1990ல் ஓய்வு பெற்றது முதல் இன்றுவரை அங்கு
தொண்டராசிரியராக பணியாற்றி வருகிறேன். என்னிடம் முன்பு கற்றவர்களின் பிள்ளைகள் பேரன்
பேத்திகள் கூட என்னிடம் கல்வி பயின்றுள்ளனர்.
உங்கள் கலை இலக்கியப் பிரவேசம் எப்போது இடம்பெற்றது?
பாடசாலை காலத்தில் எழுத்தார்வம் இருந்தது. 1958களில் தென்மதி என பாடசாலை சஞ்சிகை
வெளியிடப்பட்டது. எனது சகோதரர் எழுத்தாளர் ஷம்ஸ், எழுத்தாளர் ஹம்ஸா முஹம்மது
ஆகியோருடன் நானும் இதில் எழுதி பங்களிப்பு செய்தேன். இது தவிர கையெழுத்துப் பிரதிகள்
பல வெளியிட்டோம். 1980 முதல் 90 வரை இளஞ்சுடர் சஞ்சிகை வெளியிடப்பட்டது. இதிலும் கதை,
கவிதை, கட்டுரை, பாடல் என பல்வேறு ஆக்கங்கள் படைத்துள்ளேன். அன்று தொடங்கிய
எழுத்துப்பணி இன்றும் தொடர்கிறது.
நீண்டகாலமாக எழுதி வந்தாலும் அண்மையில் தான் உங்களது முதலாவது நூல் வெளியிடப்பட்டது.
அது பற்றி....
சிறு சிறு சஞ்சிகைகள், இலகுவாக அரபு கற்கும் பாபுல் குர்ஆன், ரோனியோ பிரதி நூல்கள்
என்பவற்றையே வெளியிட்டுள்ளேன். முதற் தடவையாக கொடகே நிறுவனத்தினூடாக ‘சின்னச்
சிறகுகள்’ எனும் எனது முதலாவது சிறுவர் பாடல் நூலை வெளியிட்டேன். இந்த நூலில் உள்ள
பாடல்கள் 1970 களில் எழுதப்பட்டவை.
அன்றிருந்த கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் புதிய கல்வித் திட்டமொன்றை
அறிமுகப்படுத்தினார். செயல் மூலம் கற்றலே அது. ஆனால் கற்பிப்பதற்குத் தேவையான
நூல்கள் எமக்கு வழங்கப்படாததால் பெரும் சிக்கல் தோன்றியது. இந்த நிலையிலே நான்
செயல்மூலம் கற்பதற்காக சிறுவர் பாடல்களை எழுதினேன். அதனை ரோனியோ மூலம் பதிப்பித்து
கற்றலுக்கு பயன்படுத்தினோம். இந்த நூல் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள
பாடசாலைகளிலும் பயன்படுத்தப்பட்டன.
முஸ்லிம் மாணவர்கள் குர்ஆனை கற்பதற்காக இலகு முறையொன்றை அறிமுகப்படுத்தியது
பற்றி....
ஆம் ஆரம்ப காலத்தில் அரபு மொழியை கற்பதற்கு இலகுவான வழிகள் இருக்கவில்லை. அரபு
எழுத்துக்களை தெரிந்து குர்ஆனை ஓத நீண்ட காலம் பிடித்தது. இந்த நிலையில் உயர்
குறியீடுகளுடன் கூடிய அரபு எழுத்து முறையை அறிமுகப்படுத்தி அரபு கற்பதை
இலகுபடுத்தினேன். இத்தகைய பாபுல் குர்ஆன்களை 1980கள் முதல் ரோனியோ மூலம்
பதிப்பித்து வெளியிட்டேன். இன்றும் அநேக பகுதிகளில் இந்த முறையே
பின்பற்றப்படுகிறது.
ஆரம்பத்தில் இந்த முறைக்கு எதிர்ப்பு வந்த போதும் இந்த இலகு முறை இன்று
பிரபலமாகிவிட்டது.
அரங்கக் கலையிலும் நீங்கள் ஈடுபட்டுள்ளதாக அறிகிறோம் அதுபற்றி....
திருமண வைபவங்களில் மணமக்களை அமர வைப்பதற்காக ஜோடனைகள் அமைக்கப்படும். 1950களில்
இந்த மணவறை பிரபல்யமாக இருந்தது. இன்று அது மறைந்து வருகிறது. காலிப் பகுதியில்
இருந்து வரும் ஹாமிம் நானா என்பவர் எமது பகுதியில் ஜோடனைகள் கட்டுவார். இவரைப்
போன்று நானும் ஜோடனை கட்ட திட்டமிட்டேன். இதன்படி 1958ல் முஹம்மது ஹலீம் என்பவருடன்
இணைந்து திருமண வைபவமொன்றில் ஜோடனை கட்டும் பொறுப்பை ஏற்றேன்.
பலகைகளால் அலங்காரங்கள் வெட்டி புடவைகள், கண்ணாடி என்பவற்றை பயன்படுத்தி அழகாக
ஜோடனை கட்டினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அன்று முதல் 40 வருடங்களாக
திக்குவல்லையில் மட்டுமன்றி தென்பகுதியில் அநேகமான இடங்களில் ஜோடனை கட்டி
வந்துள்ளேன். ஆனால் இன்று இந்த ஜோடனை கலை மறைந்துவிட்டது. மின்குமிழ்களால்
அலங்கரித்தே இன்று ஜோடனை கட்டப்படுகிறது.
களிகம்பாட்டம் எனும் கலையை வளர்க்கவும் நீங்கள் பங்களித்துள்Zர்களாமே?
ஆம், களிகம்பாட்டம் எனும் கலையை பாதுகாக்க பங்களித்து வருகிறேன். இந்தக் கலை 100
வருடங் களாக இருந்து வருகிறது. முன்னர் மீலாத் விழாக்க ளில் சீனடி, சிலம்படி, வாள்
வீச்சு, கோலாட்டம் என்பன மேடையேற்றப்படும். இவற்றைக் காண பெருமளவு மக்கள்
கூடுவார்கள். பள்ளி முன்றலில் பாக்குமரங்களை நட்டு அதில் தேங்காய் குலைகள்
தொங்கவிடப்படும் அழகாக மின் குமிழ்களால் அலங்கரித்து இரவில் விழா நடைபெறும்.
ஹுஸைன் மாஸ்டர் என்பவரே கோலாட்டத்தை எமது பகுதியில் அறிமுகப்படுத்தினார். சுகூர்
லெப்பையும், எமக்கு இதனை கற்பித்தார். அவர்களிடம் இருந்து பயின்ற நாம் பாடசாலையில்
கற்பிக்கும் காலம் முதல் கலை நிகழ்ச்சிகள் பாட சாலை விழாக்களில் கோலாட்டங்களை
அரங்கேற்றி வருகிறோம். இதற்காக மாணவ மாணவிகளை பயிற்றுவித்து உரிய முறையில் தயார்
படுத்துவோம். ஆரம்பத்தில் கோலாட்டம் ஆடியவர் களின் பேரன் பேத்திகளே இன்று அதில்
ஈடுபடுகின்றனர்.
எனது சகோதரர் எம். எச். எம். ஷம்ஸ் கோலாட்டத்திற்கு உகந்த பாடல்களை எழுதுவார்.
எழுத்தாளர் அம்ஸா முஹம்மதும் இதற்கு உதவி வந்தார். ஆனால் இந்தக் கலை அழிந்து விடுமோ
என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனக்கும் வயதாகிவிட்டது. இக்கலையை முன்னெடுத்துச் செல்ல
இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுவதில்லை. இது கவலைக்குரியது.
வேறு என்ன துறைகளில் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தியுள்Zர்கள்?
நாடகம், ஓவியம், கைப்பணி எனப் பல்வேறு துறைகளிலும் பங்களித்துள்ளேன். இதனை
மாணவர்களுக்கு கற்பித்தும் வருகிறேன். இன்றும் தொண்டராசிரியராக மாணவர்களுக்கு
ஓவியம் கற்பித்து வருகிறேன்.
உங்கள் கலை இலக்கிய ஆளுமைகளுக்கு பாராட்டுக்கள், விருதுகள் கிடைத்துள்ளனவா?
தேசிய மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் பல விருதுகள் கிடைத்துள்ளன. 1998ம் ஆண்டு
கலாசார அமைச்சு கலாபூசண விருது வழங்கி கெளரவித்தது. இது தவிர மாத்தறை கலாசார
நிலையம் கலாசார அமைச்சுடன் இணைந்து 2007ல் ‘மாதொட பிரசாதினி’ எனும் விருது வழங்கி
கெளரவித்தது. மின்ஹாத் பழைய மாணவர் சங்கமும் விருது வழங்கி என்னை கெளரவித்தது.
அண்மையில் நடைபெற்ற எனது நூல் வெளியீட்டு விழாவிலும் பழைய மாணவர்கள், நண்பர்கள்
பதக்கமும் விருதும் வழங்கி பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.