புத் 64 இல. 25

நந்தன வருடம் ஆனி மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 26

SUNDAY JUNE 17 2012

 
உயிரியல் யுத்தத்துக்கு நுளம்புகளும் தயாரா?

உயிரியல் யுத்தத்துக்கு நுளம்புகளும் தயாரா?

அசீமெரிக்காவுக்கு அடிபணிய மறுக்கும் நாடு கியூபா. கியூபா வுக்கும் அமெரிக்காவுக்குமிடையே நடக்கும் மெளன யுத்தங்களுள் உயிரியல் யுத்தம் மிகவும் பிரபலமானது. 1962 இல் கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா ஒரு உயிரியல் யுத்தத்தை ஆரம்பித்தது.

உயிரியல் யுத்தம் என்றால் என்ன தெரியுமா? போரின் ஒரு பகுதியாக உயிரியல் ரீதியாக நச்சுத்தன்மையுடைய பதார்த்தங்களைப் பாவிப்பதன் மூலம் மனிதர்களை, உயிரினங்களை, தாவரங்களை அழிக்கும் அல்லது செயலிழக்க வைக்கும் செயற்பாட்டை உயிரியல் யுத்தம் என்றும் சுருக்கமாக உயிர் யுத்தம் என்றும் குறிப்பிடலாம்.

உயிரியல் யுத்தத்திலேயே பாவிக்கப்படும் ஆயுதங்கள் உயிரியல் ஆயுதங்கள் எனப்படும். அவை வாழும் அங்கிகளாகவோ அல்லது பல்கிப் பெருகும் தன்மையுடையனவாகவோ (வைரஸ்) இருக்க முடியும். உயிராயுதம் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அங்கிகள் தாம் அடைக்கலம் புகுந்த உடலினுள் பல்கிப் பெருகும் தன்மை வாய்ந்தவையாகக் காணப்படும். இவை உத்தி முறை யுத்தங்களில் மட்டுமன்றி சனத்தொகைப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நாடுகளில் அதைக் கட்டுப்படுத்தும் ஆயுதங்களாகவும் பயன்படுகின்றன.

ஆனால் உலகைப்பொறுத்த வரையிலே இவை புதியனவல்ல. கி.மு. 6 ஆம் நூற்றாண்டளவிலே எதிரிகளின் கிணறுகள் ஒரு வகை பங்கசு மூலம் நஞ்சூட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது. மத்திய கால ஐரோப்பாவிலும் இத்தகைய உயிராயுதங்கள் பரவலாகப் பாவிக்கப்பட்டிருக்கின்றன. 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரித்தானிய இராணுவம் சின்னமுத்து வைரசை ஆயுதமாகப் பாவித்திருக்கிறது. முதலாம் உலக மகா யுத்தத்தின் போது ஜேர்மனிய அரசு அந்திராக்ஸ் கிருமியைப் பாவித்தது. இதையடுத்து 1925 இன் ஜெனீவா நெறிமுறையானது சகல உயிராயுதங்களையும் தடை செய்தது.

பின்னர் சினோ - ஜப்பானிய யுத்தம் இரண்டாம் உலக மகா யுத்தம் ஆகியவற்றின் போது சீனர்கள் மீது ஜப்பானியர்கள் உயிராயுதங்களைப் பாவித்ததாக விக்கி பீடியா கூறுகிறது. அதன் விளைவாக பிளேக் மற்றும் கொலரா நோய்கள் பரவி இலட்சக்கணக்கானோர் பலியாயினர். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போதும் உயிராயுதங்கள் தொடர்பிலான ஆராய்ச் சிகள் நடைபெற்றிருக்கின்றன.

இப்படி தொடர்ந்து ஏற்பட்ட யுத்தங்கள் உயிராயுதங்கள் தொடர்பில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆயினும் 1972 இல் நடைபெற்ற உயிரியல் மற்றும் நச்சுத்தன்மைகள் தொடர்பான மாநாட்டின் உடன்படிக்கையிலே இத்தகைய ஆயுதங்களைத் தயாரிப்பதோ பாதுகாப்பதோ கொண்டு செல்வதோ தடை செய்யப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் கைச்சாத்திட்டும் இருக்கின்றன. ஆயினும் திரைமறைவில் நடக்கும் செயல்களும் இல்லாமல் இல்லை.

இவை இப்படியிருக்க அமெரிக்கா கியூபா மீது உயிரியல் யுத்தத்தைத் தொடுத்தது என்று கூறினோமல்லவா? அந்த வரலாற்றில் டெங்கு வைரசுக்கும் முக்கிய இடம் இருப்பதாக ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுகின்றன.

எயிட்ஸ் என்ற நிலைமையை உருவாக்கும் எச்.ஐ.வி. வைரஸ் ஆனது மனிதத் தயாரிப்பு என்பதுடன் அது ஒரு உயிராயுதமாக மாறியுள்ளதாக உங்களால் ஒப்புக்கொள்ள முடிகிறதா? அதேபோன்றதொரு உயிராயுதமாக டெங்கு வைரசும் மாறலாமோ? என்ற ஊகம் உலகளாவிய ரீதியில் எழுந்திருப்பது நியாயமானதொரு விடயமே. அது மனிதத் தயாரிப்பா இல்லையா என்று விவாதிக்க இது தருணமல்ல. ஆனால் அது இயற்கையான வைரசுகளை விட வீரியமானது.

டெங்கு வைரஸைக் காவும் நுளம்பு வகையான ஈடிஸ் எகிப்தி நோய்க்காவி என்ற உயிரியல் ஆயுதமாக மாறியுள்ளதா என எண்ணும் வகையிலே உலகளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவி வருகிறது.

தென்மேற்கு பருவக்காற்று மழையை எதிர்பார்த்திருக்கும் தென்னாசிய நாடுகளில் டெங்கு நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருவதாக தரவுகள் கூறுகின்றன. இலங்கையும் விதிவிலக்கல்ல. கடந்த வருடம் பாகிஸ்தானில் டெங்கு நோய் வெகு தீவிரமாகப் பரவியமைக்கு வல்லரசு நாடுகளின் உளவுத்துறை காரணமாக அமைந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்தமை பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

எதிரி நாட்டை ஏதோ ஒரு வழியிலே பின்னடையச் செய்ய அல்லது முடக்க இந்த உயிரியல் ஆயுதங்கள் பாரிய பங்களிப்பைச் செய்யும் என்பது உலகளாவிய ஊகம். அதில் உண்மை இல்லாமலும் இல்லை. டெங்கு வைரசை ஒரு உயிரியல் ஆயுதமாகப் பாவிக்க முடியும் என 1940 களிலேயே இரசாயனவியலாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். அத்துடன் அமெரிக்காவின் சில மாகாணங்களில் வேகமாகப் பெருகிய சனத்தொகையைக் குறைக்கும் நோக்கில் நுளம்புகள் பெருக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

இவை இப்படியிருக்க ஆய்வாளர்கள் சில வினாக்களை முன்வைக்கின்றனர்.

மேற்குலக அதிகளவில் நாட்டம் பிராந்தியங்களிலேயே இந்த உயிரியல் நோய்கள் வேகமாகப் பரவுவது ஏன்?

விஞ்ஞான தொழில்நுட்ப வசதிகள் விருத்தியடைந்து காணப்படுகிற போதும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இத்தகைய நோய்களால் அதிகளவு பாதிக்கப்படுவது ஏன்?

இந்த அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தமக்கு காலம் கடந்து கிடைக்கும் தடுப்பு மருந்துகளில் தங்கியிருப்பது எதற்காக?

இந்த தடுப்பு மருந்துகளைத் தயாரித்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு விற்பனை செய்வது யார்?

ஆபிரிக்கா, ஆசியா, தென்னமெரிக்கா (மெக்சிக்கோ போன்ற) ஆகிய பிராந்தியங் களின் சனத்தொகை பலமானது. எதிர்வரும் தசாப்தங்களில் உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் நிலை உருவாகும். இந்த சனத்தொகை யுத்தத்திலே மேற்குலகு மெல்ல மெல்லத் தோற்று வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அத்தோல்வி மேற்குலகை நெருங்க நெருங்க அரசியல், பொருளாதார ரீதியான தன் பிடியை மேற்குலகு இழக்கத் தொடங்கியுள்ளது.

ஆதலால் இந்த உயிரியல் யுத்தமானது மேற்குலகின் இயக்கமின்றிய ஆதிக்கமாக இருக்கலாமோ என்று எண்ணுவதில் எந்தவித தவறும் இல்லை.

ஆனால், டெங்கு நோய் பரவுவதை ஒரு உயிரியல் யுத்தமாகக் கருதி அஞ்ச வேண்டிய அவசியம் எமக்கில்லை. பொதுமக்களாகிய நாம் ஒவ்வொரு நொடிப்பொழுதும் விழிப்புடன் இருந்து துடிப்புடன் செயற்பட்டால் டெங்கு நோய் எம்மை நெருங்காது. முயன்று தான் பார்ப்போமே?

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.