நந்தன வருடம் ஆனி மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 26
SUNDAY JUNE 17, 2012

Print

 
எண்ணங் கலந்துற வாடிடுவேன்

எண்ணங் கலந்துற வாடிடுவேன்

- கலாபூஷணம் ஏ. எம். எம். அலி -

சிப்பாய்ச் சேவைக்குச் சென்றிருந்தேன் - மனச்
சிந்தையிற் செந்தமிழ் சாகவில்லை!
துப்பாக் கியை நான் சுமந்திருந்தேன் - எனைத்
தூய தமிழ் விட்டுப் போகவில்லை!

கற்பனைக் கோட்டைக்குள் ஓடிடுவேன் - கவிக்
காதலி யாளுடன் ஆடிடுவேன்
அற்புத மான, அக் கோட்டையினுள் - நான்
அடிக்கடி புகுந்து பாடிடுவேன்!

பொற்சிலை போற்கவி மாதிருப்பாள் - ஏய்!
புலவ! தொட்டெனப் பாரென்பாள்!
அச்சிலை யாள்; தனை முத்மிட்டே - தமிழ்ச்
சொற்பழ மவற்கு ஊட்டிடுவேன்!

பொட்டல் வான்வெளிப் பரப்பினிலே - நிலவுப்
பொட்டு ஒளிர்ந்திடும் வேளையிலே
கட்டை மீறிடும் உணர்ச்சியுடன் - கற்
கண்டுக் கவிபெண்ணை அணைத்திடுவேன்!

மோன மகிழ்கின்ற ராத்திரியில் - இன்பம்
முகிழ்த்து வரும், தமிழ்ப் பாத்திரத்தில்
நானத் தேனினை ஊற்றிடுவேன் - கவி
நாயகி யாளுடன் உண்டிடுவேன்!

கண்ணைச் சிமிட்டிடும் தாரகைகள் - எனைக்
கண்டு கதைபேசும் போதினிலே
வண்ணத் தமிழ்க்கவி மாதுடனே - என
தெண்ணங் கலந்துற வாடிடுவேன்.

காளான் குடைகள்

- ஏறாவூர் அனலக்தர் -

கன்னங் கரேலெனக்
கருக்கொண்ட கார்மேகம்
இன்னுங் கலையாத
ககன வீதியிலே...
கதிரவன் புறப்பட்டான்
காலை உதய கீதத்தோடு!

அண்டை அயலிலுள்ள
கொண்டைச் சேவல்கள்
தொண்டை நீர் சுவறியவாறு
கேள்விக் குறியாய் தலை நீட்டி
கூவுகின்றன...

பொழுது புலர்ந்து
பொற்கோழி கூவினாலும்
புரண்டு... புரண்டு
போர் வைக்குள் முடங்குகின்றனர்
சோர்வையும் சோம்பலையும்
சொந்தமாக்கிக் கொண்டோர்!

ஆலயமணி ஓசையும்
அவரவர் வழிபாட்டுப் பூசையும்
அன்றாட வாழ்வில்
அவசியமாகி விட்டன...
ஆண்டவனிடம் அபயம் தேடும்
அடியார்க்கு மட்டும்!

ஒளிக்கீற்று உரசல்
ஒருபோதும் ஊடுருவாத
தங்கள் குடிசையில்
கறுப்பு கோழிகளைத் திரட்டும்
கட்டாயக் கடமை
கூலித் தொழிலாளர்களுக்கு!

முந்தாநாள் பெய்த மழைக்கு
முளைகொண்டுள்ளன
மூலை முடுக்கெல்லாம்
காளான்கள்!
ஆமாம்;
இனிவெரும் அடைமழைக்கும்
கோடை வெயிலுக்கும்
அபயம் தரலாம்...
அந்தக் காளான் குடைகள்!

கனிமை

மூட்டுகள் வலிக்கின்றன என்று
மருத்துவரிடம் போனேன்
முதுமையைக் கொண்டாடுங்கள் என்று
என்ன என்னவோ சொல்லுகிறார்

அறிவு உரைகளாகத் தெரியவில்லை
ஆறுதல் வார்த்தைகள்
முதியவராக இருப்பதால்தான்
முடிகள் வெளுத்திருக்கின்றன
அறிவின் நிறம் இது
அமைதியின் வண்ணம் புரியவில்லை

எல்லாம் சரி டாக்டர்
மூட்டு வலி; முதுகுவலி... மூளை வலி
நண்பர்கள் என்பதால் உரிமை பாராட்டினார்
நமக்கு எல்லாம் அது வராது

மருத்துவம் பாருங்கள் என்றேன்
பார்க்கும் குழந்தைகள்
தாத்தா என்பார்களா,
எதிரே வருபவர்கள்
பாத்துப் போ பெரிசு என்பார்கள்

நீங்கள் மருந்து சொல்ல மாட்டீர்கள்
என்று எழுந்தேன்
நேராக வீட்டுக்குப் போங்கள்
என்றார் எதற்கு?
முதுமையைக் கொண்டாடத்தான்
அதுதான் முதல் மருந்து....

இறுதி மருந்து இல்லையா
மருத்துவர்
இனி
மரியாதைதான் நமக்கு
அப்போதுதான்
உணர்ந்தேன்

- ஜெயலக்ஷ்மி ராமகிருஷ்ணன் -

தயவாக கேட்கின்றேன்

- தம்பிலுவில் தயா -

அங்கே பார் மாமரம்
அழகான மாங்கனிகள்
இங்கே அமர்ந்திருந்து
இனிதாக உண்டிடுவோம்
ஊஞ்சல் தனைக் கட்டியதில்
உண்டு களித்தாடிடுவோம்

பலா மரத்தைப் பார் அதில்
பருத்த பழங்களைப் பார்
இலாத எச்சுவையும்
இருக்கும் அதை உண்ண
இங்கே அமர்ந்திருந்து
இலை தொப்பி செய்திடுவோம்

என்னையும் உன்னையும்
எவர்க்குமுள தாகத்தையும் ஆஹா
என்ன இளநீரென்று சொலும்
தென்னந் தோப்பைப் பார் அதன்
தேங்காய் குலையைப் பார்
விண்ணைத் தொட வளர்ந்து
வீறாப்பு கொள்வதைப் பார்

பச்சை இலை தன்னுள்
பழமாக ஒளிந்திருக்கம் நம்
இச்சைக்கு நாவூறும் நல்
இனிய வாழையைப் பார்

பயன்தரும் மரங்கள் பல
பாரிலுள போதும் அதன்
பயனறியா சில மனிதர்
பாராமல் அழிப்பது ஏன்

சுயமாக சிந்தித்து
சுந்தரமா யதைக் காப்போம்
தயவாகக் கேட்கின்றேன் அது
தரும் பயனை மறவோமே

நான் எனது

‘நான்’ இன்றி ஆகாது என்பர்
என்னால் தான் இதுவும் என்றிடுவர்
‘நான்’ என்ற ஆணவம் எவ்வாறெல்லாம்
அரசோச்சி ஆள முனைகிறது - எனினும்

அகங்காரம் ஆணவம் காண்பிக்கும் ‘நான்’
என்றென்றும் இருந்தாக வேண்டுமே!
நின்று அழியும் உடம்பை ‘நான்’ என
உயர்த்திப் பேசிப் பெருமை கொள்வதா?

‘நான்’ யார்? எது? எங்குளது?
இந்த உடம்பிலா? உயிரிலா?
எந்த உள்ளத்தில்? புரியவில்லை அழிவற்ற
‘நான்’ எங்கே என்பதைத் தேடின் காண்பதற்கில்லை

நான் உடலில் அன்று உயிரில் எனின்
உயிரைத் தேடல் அவசியம்
உயிர் உள்ளம் தனில் ஆயின் உள்ளம் எங்கே?
உயிரும் உள்ளமும் கண்ணால் காணவும் ஆகாதன

உடம்போ அழியும் ஒரு தோற்றம்
உண்மை இஃது உறுதி - ஆதலின்
உடம்புக்கு ‘நான்’ என்ற மமதை தேவையா?
‘நான்’ எனும் ஆணவம் வெறும் மாயை

நான் மாயை எனின் எனது?
எனது என்பதும் ஏற்க முடியாதது
‘நான்’ மாயை வெற்று மொழி ஆயின்
எனது என்று எப்படி ஆகலாம்?

அத்தாஸ்...-

வெலிப்பன்னை
 

நட்பு

எம்.எச்.எம். புஹாரி...-

பாத்திமா பிணியால் வாடிப்
படுக்கிறாள் ஆஸ்பத்திரியில்,
பாத்திமா படுக்கை யருகில்
பார்வதி நின்று, பாலை
நேர்த்தியாய்ப் பருக்கு கின்றாள்;
நிற்கிறாள் மாலி னியும்
நேத்திரம் நீரைக் கொட்ட!
நிகரிலா நட்பைக் கண்டேன்!
*
கண்ட இக் காட்சி என்னைக்
கவர்ந்தது! கனிந்த துள்ளம்!
அண்டியே பழகும் இந்த
அன்பினர் மூவி னத்தார்;
அண்டியே தொழில கத்தில்
அனுதினம் வேலை செய்வோர்;
கொண்டனர் மனித நேயம்!
கூடியே மகிழ்ந்தா ருள்ளம்!
*
உள்ளத்தால் அன்பு கொண்டு
ஒற்றுமை யோடு வாழ்ந்த
நல்லுள பாத்தி மாவோ
நோயினால் நோதல் கேட்டு
துள்ளியே வந்து சேர்ந்தார்
துடித்தனர்! தாதி யர்போல்
அள்ளியே அணைத்துத் தூக்கி
அளித்தனர் அன்னம், பானம்!
*
பானமும் பருகச் செய்த
பார்வதி இந்து நண்பி;
ஊணதை ஊட்டி நின்ற
மாலினி பெளத்த நெறியாள்;
தோன்றிய தங்கே நட்பு!
தொலைந்தது சமய பேதம்!
ஊன்றிடச் செய்வோம் இந்த
உறவது நமது மண்ணில்!

மண்ணின் மாகேடே!

- மூதூர் எம்.எம்.ஏ.அனஸ் -

மதுவே! மண்ணின் மாகேடே!
மடிந்து நீயும் போகாயோ!
எதுவித குறையும் இல்லாத
ஏற்றம் மனிதருக் களிப்பாயோ!

போதை யூட்டி நகர் வாழ்வை
பொசுங்கிப் போகச் செய்யாதே!
பாதை புரியா மாந்தர்க்குப்
பாதக நிலையை நல்காதே

ஏழை மக்கள் வாழ்வினிலே
எழிலை என்றும் காணாதே!
வாழை அடியாய்த் தொடராக
வீணாய் அவரை மாய்க்காதே!

வறுமை வாழ்வின் வழியாகி
வாட்டி வருத்தம் செய்யாதே!
சிறுமைத் தனத்தின் மனிதனெனச்
சின்னத் தனத்தைக் கொடுக்காதே!
வசந்த மில்லா வாழ்வாக
வாழ்வை இலங்கச் செய்யாதே!
விசமாய் மனித உயிர்களினை
விரும்பி நீயும் அழிக்காதே!

போதை மனிதன் எனும் பெயரைப்
பெறவும் வழியாய் அமையாதே!
நீதி நேர்மை புரியாமல்
நிலத்தில் நடக்கச் செய்யாதே!

மானம் இல்லா நிலைமைக்கு
மனித வாழ்வை மாற்றாதே!
ஆன துன்பம் அத்தனையும்
அடையச் செய்து மகிழாதே!

மிதமிஞ்சிய போக்கால்

- பெறோஜ் எம். பஸ்மீர் -

சந்தோசமிக்க என்வாழ்வில்
முடிவு கட்டினாய்
ஒரு நொடியில்

நாமிருவரும்
பிரயாணித்த போது
சில நாடகங்களைக் காட்டி
உன் அழகிய புன்னகையை
பரிமாறிக் கொண்டாயே எதற்கோ
புரியவில்லையே அன்று

சந்தோசமாய் கழிந்த என் வாழ்வு
சந்தோசமின்றி உறக்கமின்றி
தெருவோரங்களில் கழிந்தன
என் ஆத்மா...

நீயோ புத்தகங்களைப்புரட்டினாய்
ஆனால்
என் இதயம் புரண்டன
உன் நினைவால்
ரெயில் நிலையம்
சங்கமித்ததடி
நம் இருவரையும்
மறக்க முடியுமா உயிருள்ளவரை...

எதிர்பாரா ஓர் சந்திப்பில்
என் புன்னகை வெளிப்பட
என் முகவரி மறந்து
முகம் காட்டினாய்
இன்னுமொரு இதயத்திற்கு

அடியே என்னவளே
என் மிதமிஞ்சிய போக்கால்
அலைகிறேன் முகவரி இழந்து...

வண்டுகள் மொய்த்த கவிதை

- அக்கரையூர் யெம். உவைஸ் -

நதிகள்
நடந்து வந்தன
என் காலடியில்!

குயில்கள் குரலெடுத்து
ஆலாபனை செய்கின்றன
எனக்காக.!

மரங்கள் தலையசைத்து
வரவேற்கின்றன
என்னை!

பறவைகள் அழகழகாய்
சிறகடிக்கின்றன என்
தலைக்கு மேல்!

மலைகள் தலைகுனிந்து
மெளனிக்கின்றன
எனக்கு முன்னால்!

காற்று கண்ணடித்தது
எனை நோக்கி!

மானினமும் மயிலினமும்
தம் அழகினை
அர்ப்பணித்தன எனக்காய்!

வானம்
குடை பிடிக்கிறது....
பூமி பாய்விரிக்கிறது....
நிலா ஒளிப்பூக்கள் தூவுகிறது...

பூவென நினைத்து
என் கவிதையில்
மொய்த்தன வண்டுகள்!

படைப்புக்களெல்லாம்
படையெடுக்கின்றன என்
கவிதைகளுக்குப் பின்னால்!

இந்த அஃறிணைகளிடமுள்ள
அழகுணர்ச்சியும்
கவியுணர்ச்சியும்
உன்னிடமில்லாமல் போனது
இருபத்தோராம் நூற்றாண்டின்
அதிசயம்தான் கண்மணி!

மிதமிஞ்சிய போக்கால்

- ஜே. வஹாப்தீன் -

வாழ்க்கை
பனிக்கட்டியாய்
உருகும் போது
முட்டைக் கோது ஒன்று
ஆயுள் காப்புறுதி செய்கிறது

கருங்கல்லை
சப்ப நினைக்கும்
மல்லிகைப் பூக்களுக்கு
ஒரு வகுப்பு வைக்க வேண்டும்!

கடலைக் குடித்து விட்ட
பெருமையில்
ஒரு நாள்
கடலுக்குள் கத்திய தோறா
குடலுக்குள் அவிகிறது...!!

தலை வெடித்து
சிந்தனை வழியும் போது
பேராசைதான்
ஒரு பேய் போல் நக்குகிறது!

தரையில் விழுந்த
மண் சட்டியாய்
மனசு நொறுங்கி
கிடந்தாலும்,
காற்றைக் குடிக்க
கதவு திறக்கும்!

எல்லாம்
சப்பளிந்து போகும் போது
முள்ளாணிகளை
விழுங்கும் வேதனை
தேவைதானா?

கூலி
காலியாகும் போலி
வேலி பிரிக்கும் போது
தோல்வியைப் பற்றிய
கடிதம்
அப்போது கிடைக்கும்?

கொழுத்த பூராண் ஒன்று
அடிக்கடி தீண்டும்
வலியால் நொந்தும்
பாடம் புரியவில்லை இன்னும்!
எரிமலையை
முந்தானையால் மூடும்
கருணை தேவையா?
பனி மலையே
நக்கி முடிக்க ஆசையா?

எல்லாம் புதைக்கப்படுகிறது
இன்னும்
முளைக்க வேண்டும் என்பதற்காக;
ஆனால்
முட்டைக் கோது ஒன்று
ஆயுள் காப்புறுதி செய்கின்றது


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

webmanager@lakehouse.lk