‘பதினொரு முட்டாள்கள் விளையாடுவதை பதினொராயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்த்து
ரசிக்கும் விளையாட்டு’ என்று கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி ஆங்கில நாடக ஆசிரியரும்
சிந்தனையாளருமான பெர்னாட்ஷா கூறியது சரியோ
தவறோ தெரியாது. ஆனால் ஐ. பி. எல்.
கிரிக்கெட் போட்டி என்கிற பெயரில் அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும், சினிமா
நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் பல கோடி கிரிக்கெட் ரசிகர்களை
முட்டாள்களாக்கி கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது
மட்டும் உண்மையே. இப்போது பெர்னாட்ஷாவின் பதினொராயிரம் என்பதை 11 கோடி என்று சற்றுத்
திருத்திக் கொள்ள வேண்டும்.
5வது ஐ. பி. எல். கடந்த வாரம் முடிவுற்றது. போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வெற்றிபெற்று முதற்தடைவையாக கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது. இப்போட்டித் தொடர்
ஆரம்பம் முதலே ஸ்பொட் பிக்சிங், இலஞ்ச ஊழல், போட்டித் தடை, பாலியல் துஷ்பிரயோகம்,
வீரர்களினதும், ரசிகரிகளினதும், உரிமையாளர்களினதும் அடாவடித்தனங்கள் தொடரை
ஆக்கிரமித்திருந்தன.
போட்டிகள் எவ்வளவு விறுவிறுப்பாக நடைபெற்றதோ அதைவிட வேகமாக
சர்ச்சைகளும் எழுந்தன. இம்முறை தொலைக்காட்சியில் போட்டியை ரசித்துக் கொண்டிருந்த
சாதாரண ரசிகர்கள் கூட போட்டிகளை விமர்சிக்கும் அளவுக்கு கிரிக்கெட் சூதாட்டம்
நிறைந்ததாகக் காணப்பட்டது. இடைக்கிடையில் நடுவர்களும் சில தவறுகளைச் செய்து
எரிச்சலூட்டினர்.
இரண்டாம் சுற்றான ‘ப்ளே ஓப்’ ஆட்டத்தின் போது அணிவீரர்கள் நடந்து கொண்ட முறைகளைப்
பார்க்கும் போது சந்தேகங்கள் வரத்தான் செய்கின்றன. ஆரம்பச் சுற்றின் போது மிகத்
திறமையாக விளையாடி வந்த டில்லி, மும்பை அணிகள் இறுதிச் சுற்றின் போது ஒரு பாடசாலை
அணி விளையாடுவது போல் விளையாடினார்கள். இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் டில்லி
அணிக்கும் - சென்னை அணிக்குமிடையிலான போட்டியில் டில்லி அணியின் பல வெற்றிகளுக்கு
உதவிய பந்து வீச்சாளரான (செந்நிறத் தொப்பிக்கு சொந்தக்காரர்) மொர்னே போக்கல்
அப்போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படாதது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மேலும் ஒரு பத்திரிகைப் பேட்டியின் போது அவர் சேர்த்துக் கொள்ளப்படாமைக்கு
அணித்தலைவர் செவாக்கும் மோர்னே மோக்கலும் மாறுபட்ட கருத்துக்களைத்
தெரிவித்திருந்தனர். அத்துடன் டேவிட் வோனர், செவாக், மஹேல ஜயவர்தன, டெய்லர் போன்ற
அதிரடி வீரர்கள் உள்ள அணியினர் போராடாமல் தோற்றுப்போனது ரசிகர்களுக்கு பெரும்
ஏமாற்றமாகவே இருந்தது. இறுதிப் போட்டியில் கூட சூதாட்டம் ஏற்பட்டிருக்கும் என்று
ஊடகங்கள் கருத்து வெளியிட்டிருந்தன. இறுதிப் போட்டிக்கு சென்னை அணியை கொண்டு
வரவேண்டும் என்று சூதாட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டி இடம்பெற்றது சென்னையில்.
எனவே சென்னை இறுதிப்போட்டிக்கு வருவது யி
ஜி ழி க்கு இலாபகரமானதாகக் கருதப்பட்டது. அதுமாத்திரமல்ல சென்னை அணியின் தலைவர்
தோனிதான் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர். எனவே தோனியின் அணி இறுதிப்போட்டிக்கு
தெரிவாக வேண்டும் என்பது அனேகரது எதிர்பார்ப்பாகவிருந்தது என்பது போட்டிகளில்
வர்ணனையாளர்களின் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விளங்கியிருக்கும்.
முதல் சுற்றில் தடுமாறிய சென்னை இரண்டாவது சுற்றில் மீண்டெழுந்தது கூட
சூதாட்டக்காரர்களின் கைங்கரியம் என்ற கருத்துக்களும் இப்போது பத்திரிகைகளில்
முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவைகளின் உண்மைத் தன்மையை அறிய அடுத்த சில மாதங்களோ,
அல்லது அடுத்த ஐ. பி. எல். ஆரம்பிக்கும் வரையோ காத்திருக்க வேண்டும்.
1980 ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் என்றால் கண்ணியமிக்க ஆட்டமாக இருந்தது. அதில்
விளையாடும் வீரர்களும் கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும் நடந்து கொண்டார்கள்.
ரசிகர்களும் அப்படியே! எதிரணியினர் அடிக்கும் பவுண்டரிகளுக்கும் கைதட்டி ரசிக்கும்
மனப்பக்குவம் அன்று ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் இன்று அப்படியில்லை. எதிர்
அணியினரை மட்டுமல்ல எதிரணி ரசிகர்களைக் கூட எதிரியாக நோக்கும் வெறிகொண்ட ரசிகர்
கூட்டம் இன்று கையில் தடியுடன் அலைகிறார்கள்.
70 களுக்கு முன் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான் விளையாடப்பட்டது. அடுத்து ஒருநாள்
போட்டி அறிமுகமானது. உடனே முடிவு தெரிவதனால் கொஞ்சம் ஆவேசத்துடன் ரசித்தனர்.
ஒரு நாள் போட்டி வந்தவுடன் கொஞ்சம் அதிகமாகப் பணமும் புரள ஆரம்பித்தது. பணம் புரள
ஆரம்பித்ததால், ஊழலும், சூதாட்டமும் அப்போதே மெதுவாகத் தலைதூக்க ஆரம்பித்தது. அதன்
பின் டுவெண்டி - 20 அறிமுகமானது. ரசிகர்கள் அதிகரித்தனர். மேலும் அதிகமாகப் பணம்
புரள ஆரம்பித்தது. அதன் பின் பொழுதுபோக்குக்காவும் ஒற்றுமையை வலியுறுத்தியும்
நடைபெற்ற இவ்விளையாட்டு வியாபாரமாக மாறியது. இதில் முதலிட அரசியல்வாதிகளும், பெரும்
கோடீஸ்வரர்களும் முன் வந்தனர். இவர்களுடன் சேர்ந்து ஊழலும், சூதாட்டமும், கறுப்புப்
பணமும் புகுந்து விளையாட ஆரம்பித்தது. அதற்கு வசதியாக ஐ. பி. எல். தொடரும்
ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் விளையாட்டை ரசித்துவிளையாடிய வீரர்கள் கூட ஏலம் என்ற
பெயரில் பெரிய பெரிய தொகைக்கு வாங்கப்பட்டதால் அவர்கள் பணத்துக்கு அடிமையாகினர்.
அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்று சில வீரர்கள் சூதாட்ட புரோக்கர்களுக்கு
அடிமையாகி ‘ஸ்பொட் பிக்சிங்’ மற்றும் ஊழல்களில் ஈடுபடுகின்றனர். சில நாட்டு
கிரிக்கெட் சபைகளால்கூட இவ்வாறான வீரர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.
இச் சூதாட்டக்காரர்களின் பின்னால் பெரும் அரசியல்வாதிகள், வர்த்தகப் புள்ளிகள்
இருக்கிறார்கள். ஐ. பி. எல். தொடரில் கோடிக்கணக்கில் பணம் புரள்வதால் எல்லா விதமான
ஊழல்களும் அங்கே தாராளமாக நடைபெறுகின்றன. ஐ. பி. எல். தொடரைத் தடைசெய்ய வேண்டும்
என்று கூட மாநில உறுப்பினர் ஒருவர் கடந்த மாதம் உண்ணாவிரதம் இருந்தது
குறிப்பிடத்தக்கது. ஐ. பி. எல். இல் கறுப்புப் பணம் புரள்வதைப் பற்றி கடந்த வாரம்
‘தினமணி’ பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தது.
“ஐ. பி. எல். விளையாட்டில் கறுப்புப் பணம் இறக்கப்பட்டு வெள்ளைப் பணமாக்கப்படுகிறதா
என்ற கேள்விக்கு மத்திய விளையாடுத் துறை அமைச்சர் தந்திருக்கும் விசித்திரமான பதில்:
இது தொடர்பாக வருவாய்த்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அதற்குப் பதில்
கிடைத்தவுடன் இது பற்றி விவாதிப்போம். வருவாய்த்துறை செயலர் டில்லியில்தானே
இருக்கிறார். ஏதோ சுவிட்சர்லாந்து அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதைப் போல் அமைச்சர்
சொல் லிக் கொண்டிருக்கிறார் நாமும் செம்மறி ஆட்டுக்கூட்டம் போல அதைக் கேட்டுக்கொண்டு
இருக்கிறோம்.
ஐ. பி. எல். கிரிக்கெட் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு தொடங்கின. தொடங்கிய ஆண்டு முதல்
தொடர்ந்து பணத்தை அள்ளியெடுத்தார்கள். 2008 ஆம் ஆண்டு இந்த ஆட்டங்களின் மூலம் 102
மில்லியன் டொலர் கிடைத்தது. இது ஆண்டு தோறும் 20 மில்லியன் டொலர்களால் அதிகரித்துக்
கொண்டே வந்தது. 2011 ஆம் ஆண்டு (4வது பருவம்) 160 மில்லியன் டொலர்கள் (சுமார் 900
கோடி ரூபா) கிடைத்தது. ஆனால் 2012இல் இதுவரை 159 மில்லியன் டொலர்கள் மட்டும்
கிடைத்திருப்பதாக சலித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் ரூபா
1077 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணி மேலான்மைச் சட்டத்தின் விதிகளை மீறியுள்ளதாக
ஐ. பி. எல். மற்றும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு அமுலாக்கல் பிரிவு
இதுவரை 19 நோட்டிஸ்களை அனுப்பியுள்ளது. இது குறித்து அரசின் எந்தத் துறையும் வருமான
வரித்துறை உட்பட நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்குக் காரணம் பி. சி. சி. ஐ. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும்
அரசியல்வாதிகள். மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா, ஐ. பி. எல். தலைவராக இருக்கிறார்.
மத்திய அமைச்சர்கள் சரத் பவார், விளாஸ் ராவ் தேஷ்மூக், சி. பி. ஜோசி, பரூக்
அப்துல்லா ஆகியோரும் பி. சி. சி. ஐ. உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இது போதாதென்று
ஐ. பி. எல். உரிமையாளர்களாக பெருந் தொழிலதிபர்கள், சினிமா நடிக, நடிகைகள் வேறு.
இவர்கள் பலர் பங்குதாரர்கள் என்றும் உரிமையாளர்கள் என்றும் கூறப்படுகிறது.
அப்படியானால் இந்த நோட்டீஸ்களுக்கு அர்த்தம்! வெறும் கண்துடைப்பா?
அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் கூட பணம் கொழிக்கும் ஐ. பி. எல்.
விளையாட்டுடன் கை கோர்த்துக் கொள்கின்றனர். பா. ஜ. க. வைச் சேர்ந்த அருண் ஜெட்லியும்,
ரவிசங்கர் பிரசாத்தும், ராஷ்டிரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த லாலு பிரசாத்துடன் இணைந்து
செயற்படுவதற்குக் காரணம் கிரிக்கெட் விளையாட்டிலுள்ள ஆர்வம் அல்ல. ஐ. பி. எல். இல்
இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம்தான். பணம் வரும்போது, பா. ஜ. க.
தீண்டத்தக்கதாகிவிடுகிறது லாலு பிரசாத்துக்கு. லாலு பிரசாத்தின் ஊழல் இரண்டாம்
பட்சமாகிறது பா. ஜ. க.வினருக்கு.
ஐ. பி. எல். லின் ஒளிபரப்பு உரிமை மற்றும் இதில் இடம்பெறும் விளம்பர நிறுவனங்கள்
பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களே. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு
இருக்கும் பெரும் வரவேற்பை இவர்கள் மிகச் சரியாக வணிகமுறைப்படி பயன்படுத்திக் கொள்ள
உதவி செய்யவும், வரிகள் இல்லாமல் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற இங்குள்ள
அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவி செய்யவும்தான் ஐ. பி. எல்.
விளையாட்டு உருவாக்கப்பட்டதோ என்கிற சந்தேகம் எழுகிறது. இரு ஆண்டுகளுக்கு முன்பு
அப்போது அமைச்சராக இருந்த சசி தரூர் விவகாரத்தில்தான் ஐ. பி. எல். போட்டியில் ஊழல்
இருப்பதும் அரசியல் செல்வாக்குப் பயன்படுத்தலும் வெட்டவெளிச்சமானது. இந்த
விவகாரத்தில் சிக்குண்ட சசி தரூர் அமைச்சர் பதவியையும் இழந்தார்.
இந்த விளையாட்டில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் விலை கோரப்படுகிறார்கள்.
இவ்வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைப்பதால் அவர்களுடைய நாட்டு கிரிக்கட்
சபையினரால் கூட அவ்வீரர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. இந்தியாவில்
நடக்கும் இத்தொடரில் விளையாட்டரங்கப் பார்வையாளர்களுக்கும், தொலைக்காட்சி
ரசிகர்களுக்கும் இடையில் ஏற்படும் சலிப்பைப் போக்கிக் கொள்ள அழகிகளின் களி நடனங்கள்
(சியர்ஸ் கேள்) வேறு. திரைப்படங்களில் இடைக்கிடை கவர்ச்சி நடனங்கள் இடம்பெறுவதைப்
போல்.
கலாசாரம் மற்றும் அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வருவாய் அனைத்தையும்
‘கிZன் போல்ட்’ செய்து கொண்டும் ஐ. பி. எல். நம்மை முட்டாள்களாக்கிக்
கொண்டிருக்கிறது. அது தெரியாமல் நாம் ஐ. பி. எல். போட்டியை ரசித்துப் பார்த்து
நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் பெர்னாட் ஷாவின் கூற்றுக்கு இணங்க.
அர்ஜ_ன் சதம் குவிப்பு
இந்தியத் துடுப்பாட்ட நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்
தனது கன்னிச் சதத்தினை விளாசியுள்ளார். 14 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கிடையில்
இடம்பெற்ற போட்டியொன்றிலேயே அவர் 124 ஓட்டங்களை விளாசியுள்ளார்.
மும்பை கிரிக்கெட் அமைப்பின் 14 வயதிற்குட்பட்டோருக்கான சுற்றுத் தொடரில் கார்
ஜிம்கானா அணிக்காக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர், 14 நான்கு ஓட்டங்கள், ஒரு சிக்ஸர்
அடங்கலாக இந்த 124 ஓட்டங்களை விளாசினார். அர்ஜுன் டெண்டுல்கரோடு இணைந்து சிறப்பாக
விளையாடிய வருண் லவன்டே என்ற வீரர் 94 ஓட்டங்களைப் பெற்று அர்ஜுன் டெண்டுல்கருக்கு
சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார்.
கொரிகோன் என்ற அணிக்கெதிராக இடம்பெற்ற இப்போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கரின் அணியான
கார் ஜிம்கானா அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 21 ஓட்டங்களால் இலகுவாக வெற்றி
பெற்றிருந்தது.
கார் ஜிம்கானா அணியின் பயிற்றுவிப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில், அர்ஜுனின்
இன்னிங்ஸ் மிகவும் திட்டமிடப்பட்ட ஒன்றாகக் காணப்பட்டதாகத் தெரிவித்ததோடு, அவர்
பந்துகளை சிறப்பாக அடித்தாடியதாகவும் தெரிவித்தார்.
ரோஜர் பெடரர்
உலக சாதனை
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 2ஆவது சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் கிராண்ட்ஸ்லாமில்
அதிக வெற்றிகள் பெற்றவர் என்ற புதிய சாதனையை ரோஜர் பெடரர் படைத்துள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று
முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் 2 ஆவது சுற்றில் 3 ஆம் நிலை வீரர்
சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6 – 3, 6 - 2, 6 - 7 (6), 6 - 3 என்ற செட் கணக்கில்
ருமேனியாவின் அட்ரியன் உன்கரை தோற்கடித்தார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டி வரலாற்றில் பெடரரின் 234 ஆவது ஒற்றையர் வெற்றி இதுவாகும்.
இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற வீரர் என்ற புதிய
சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். இதற்கு முன்பு அமெரிக்காவின் ஜிம்மி
கான்னோர்ஸ் 233 வெற்றிகள் பெற்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.
5வது முறையாகவும் உலக சாம்பியன்
பட்டம் வென்றார் விஸ்வநாத் ஆனந்த்
உலக செஸ் போட்டியில் இஸ்ரேல் வீரரை டைபிரேக்கரில் தோற்கடித்து இந்தியாவின் விஸ்வநாத்
ஆனந்த் 5வது முறையாகவும் உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டார்.
இந்திய கிராண்ட் மாஸ்டரும் நடப்பு சம்பியனுமான விஸ்வநாத் ஆனந்த் இஸ்ரேல் கிராண்ட்
மாஸ்டர் போரிஸ் ஜெல்பாண்ட் இடையிலான உலக செஸ் சம்பியன் ஷிப் போட்டி ரஷ்யாவில் மொஸ்கோ
நகரில் நடைபெற்று வந்தது. 12 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 6 புள்ளிகளைப் பெற்று
சமநிலையில் முடிவுற்றது. வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதற்காக டைபிரேக்கர் சுற்று
நடைபெற்றது.
டைபிரேக்கர் முடிவில் இந்திய வீரர் விஸ்வநாத் ஆனந்த் 2-5 1-5 என்ற புள்ளிகள்
கணக்கில் ஜெல்பாண்டை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.