புத் 64 இல. 23

நந்தன வருடம் வைகாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 12

SUNDAY JUNE 03  2012

என்னை மறந்ததேன்?

என்னை மறந்ததேன்?
 

அ. கெளரிதாசன்

மோகனத்துச் சிரிப்பாலே வசீகரித்து
மொத்தத்தில் என்மனதை சுவீகரித்து,
தாகங்கள் தேவைகளைத் தீர்த்த நீதான்-
தாசனெனை இப்போதேன் மறந்துபோனாய்?
*
கண்களினால் எந்தனுக்கு வலைவிரித்து
கடிதங்கள் தன்னாலே நிலைகுலைத்து,
தண்டமிழில் கவிபுனையக் கருவளித்த -
தையல்நீ, இப்போதேன் மறந்துபோனாய்?
*
கைக்குட்டை எத்தனையோ பரிசளித்து,
காலமெல்லாம் உறவாடி மகிழ்வளித்து
எக்கணமும் பிரியாநம் உறவு என்ற-
எழிலேநீ, இப்போதேன் மறந்துபோனாய்?
*
ஆண்டுக்கு ஒன்றென்று மழலை பெற்று
ஆசையுடன் எந்நாளும் அரவணைத்து,
தாண்ட முடியா வண்ணம் தடைகள் போட்ட-
தளிரேநீ, இப்போதேன் மறந்துபோனாய்?
*
சுற்றத்தார் அனைவரையும் ஒதுக்கிவிட்டு,
சொந்தமினி நீரென்றே ஓடிவந்து,
பற்றோடு இருபத்தி இரண்டு ஆண்டு-
பக்கமிருந்தாய்; இன்றேன் மறந்துபோனாய்?


ஏயெம்தாஜ்

அந்த கடைசிச் சொல்
என்னவென்று தெரியாது
இரணமும் தண்ணீரும்
இன்னும் எவ்வளவென்று தெரியாது.
அந்த நேரத்தில்
எங்கு எப்படி இருப்போமென்று தெரியாது.
இப்படியிருக்க,
என்னவோ செய்கிறோம்.

நமக்கான காற்றின் எல்லை
எதுவரையென்று தெரியாது
கால்கள் நடந்து முடிக்கும் நாள்
இன்றும் சரியாகத் தெரியாது.
உறங்கிய பின் எழுவோமாவென்று
விழிக்கும் வரை தெரியாது
இப்படியெல்லாமிருக்க,
என்னவோ செய்கிறோம்.

செய்து செய்து எத்தனையோ
சதிகளைச் செய்கிறோம்
தெரியாது தெரியாது என்று
தெரியாமலே செய்து முடிக்கிறோம்.
செய்யலாம்! செய்து முடிக்கலாம்!
முடிகிறபோது எல்லாம் முடிந்துவிடும்!

தாயோடுதான் வந்தோம்
யாரோடு போவோம்?


பொய்ப் பூசிப்பாவோதி

ஜே. வஹாப்தீன்

மண்தழுவும் காற்றினிலே மணந்தெழுந்த கவியில்
பெண்ணுருவக்கவி வடித்து பேசுகின்ற புவியில்
விண் தழுவும் நிலவழகை வியந்தெழுதும் விழியழகை
கண்கழுவாச்சூரியனும் கண்டதுவாய்ச் சிரிக்கும்

முத்துமணிச் சொல்லினிலே சித்தமெனக் கவி கூறி
வித்து வீசி விதைக்கின்ற சிந்தையிலே அன்போதி
பத்து நிலா நீயென்று பொய் பூசி தேன்சுரக்க
எத்தனையோ கவிசொன்ன ஏமாந்த காலமில்லை

நதியெனவே நீ நெளிந்து நடக்கின்ற எழிலதிகம்
மதியெனவே நீ ஒளிர்ந்து தவழ்கின்ற கலை, அதிகம்
விதியெழுதும் பேனையுடன் விரைந்தெழுந்த விழி வீச்சில்
சதியெழுதும் உன் முறுவல் சாய்கின்ற சோலையிலே

முக்கனியாம் உன் வனப்பை தக்காளிப்பழமென்றும்
சொக்கவைத்த பதத்தினிலே சொர்க்கமெனும் பாவோதி
இக்கரையில் பூத்து நின்று அக்கரையில் உனைத்தேடி
சக்கரையாய் இனிக்கின்ற அன்பருந்தி களிக்கின்றேன்.

கைவீசி நீ நடந்த காலத்தில் நான் மயங்கி
மெய்வீசி நான் விதைத்த மெய் சிலிர்க்கும் அன்பழகு
பொய்பூசிப்பாவோதி உன் வனப்பில் நான் குளித்து
மை பூசி வந்த உன்னை நான் அடையத் தேவையில்லை


நினைவுகளே வாருங்கள்!

ஜலால்தீன்

சின்னஞ்சிறு வனாய்நான் சிறகடித்துப் பறக்கயிலே
என்னோடு சேர்ந்திருந்து உலகையெல்லாம் சுற்றிவந்த
வண்ணநிறம் கொண்ட வடிவான நினைவுகளே
எண்ண எண்ண வாருங்கள் என்னோடு சேருங்கள்!

அரைமடி சலங்கையடன் ஆற்றோர மரநிழலில்
இரைகுத்தித் தூண்டிலிலே எறிந்து மீன்பிடிக்கையிலே
கரைநின்று என்னோடு கதைத்திருந்த நினைவுகளே
திரையில்லா உறவாடத் தேன்சுமந்து வாருங்கள்!

செவ்விளநீர் சுமந்த சிற்றிடையின் அழகினிலே
செவ்வானக் கன்னத்தில் சிதறிவந்த சிரிப்பினிலே
கெளவாத செவ்விதழின் கரையோர மடிப்பினிலே
கொவ்வி நின்ற நினைவுகளே குடியெழும்பி வாருங்கள்!
எதுகைக்கும் மோனைக்கும் இடைப்பாலம் போட்டவளோ
புதுசாய் ஒருவனுடன் போய் நின்று கடற்கரையில்
எதுஎதுகை எதுமோனை என்றவனை கேட்ட கதை
இதுவரைக்கும் தெரியவில்லை இன்றேனும் சொல்லுங்கள்!

நானுமின்றி அவனுமின்நி நடைபாதை வந்தவனை
கூனோடு குருட்டோடு கோலூன்றும் யாசகனை
பேணுமென்று அவள்முடித்து வெஞ்சத்தில் வாழுவதை
காணுகின்ற நினைவுகளே கதையறிந்து வாருங்கள்!


எத்திக்கும் எங்கள் புகழ் பரப்பிடுவோம்

ஏ. பி. தாவூட் ஜே. பி.

கன்னியரே காளையரே விரைந்திடுவோம் - பெரும்
காடுகளை களனிகளாய் ஆக்கிடுவோம்
உண்ணுதற்கு உப உணவு செய்திடுவோம் - அரசின்
எண்ணமெல்லாம் பொன்னாக மாற்றிடுவோம்.

வீட்டினிலே பஞ்சத்தை ஓட்டிடவே - நம்
நாட்டினிலே தன்னிறைவை ஆக்கிடுவோம்
ஏட்டிக்குப் போட்டி போட்டு பயிர்கள் செய்து - வெளி
நாட்டிற்கு விளைவுகளை ஏற்றிடுவோம்.

பண்ணைகள் பற்பலவும் நிறுவிடுவோம் - பெரும்
கறவைகளைப் பரிவோடு வளர்த்திடுவோம்
உருசிக்கு உகந்த முட்டை பெற்றிடவே - நல்
உயரினக் கோழிகளைத் தேர்ந்திடுவோம்.

பல்கலைகள் கற்றுவிட்டோம் என்றிராமல் - இனி
எல்லோரும் ஒன்று கூடி உழைத்திடுவோம்
நல் கலைதான் விவசாயம் என்பதனை - மக்கள்
நன்கறியச் செய்திடவே நாடிடுவோம்.

விந்தை மிகு விஞ்ஞான உலகினிலே - நற்
சிந்தையுடன் சீரோடும் வாழ்ந்திடவே
என்றென்றும் விவசாயம் செய்திடுவோம் - இனி
எத்திக்கும் எங்கள் புகழ் பரப்பிடுவோம்.


மலட்டுத் துயர்
 

நீ.பி. அருளானந்தம்

பூத்ததில்லை
தவிர
இலையழகு காட்டும்
குரோட்டன் செடிகளுக்கு
மாயக் கவர்ச்சி ஒன்றுண்டு
நெருப்புக்
கொழுந்துபோல ஒரு ஜாதி;
வரி வரி போட்ட
கொஞ்சமாய் நரைத்த
இலையுள்ளதாகவும்
இருக்கும் இன்னும்
பலவித செடிகள்
எல்லாம் வெட்டி
சீர்திருத்தியதில்
மளமளவென்று இலகுவாக
இலையுதிரா செடிகள்
மட்டமாக நேர்நிரைக்கு
நிற்கின்றன

பூவுள்ள மரங்களுக்கு
நிரந்தர நிரந்தர காவல் தேவை
ஆனால்,
இலையடர்ந்த குரோட்டன்களுக்கு
காவல் ஏன் தேவை
பசிக்களைப்பே இல்லாத
குரோட்டன்களுக்கு
இலைக்காதுகள் நிறைய
கேட்பதற்கென்றும்
உண்டு போலும்

மலட்டு மரங்களாதலால்
குணத்தில் அவைகள்
முரசடித்து நிமிர்ந்து
நிற்கத்தான் செய்யும்

பொன் வண்டோ - இன்றேல்
வண்ணத்துப் பூச்சியோ
மிதந்து மிதந்து
தனக்கு மேலாய்
பறந்து போவது கண்டு
அவ்வேளைதான்
ஒரு செடியில்
கை நழுவி விழுகிறது
கொள்ளை நாளாய் விழாத
ஓர் பழுத்தல் இலை


உண்மை எதிரி
 

சோ. சண்முகப்பிரியா

அன்பான மொழிகள்,
ஆயுளை நீடித்திடும்
இன்பங்கள்
விட்டுக்கொடுத்திடாத, பாசம் கலந்த
உயிரின் உறவாய்
உதித்திடுவான், ஒருவன்
உயிர்த்தோழமையுடன்.

இன்பங்களில் இணைபிரியாது
துன்பங்களில் துணை கொண்டு
உயிரில் கலந்தவனாய்
உறவாடிடுவான்
உயிர்த்தோழனாய்.

புரிந்துணர்வு இல்லாதிடும்
நொடிப் பொழுதில்
இருவரும் இருதிசைமாறி
பழிவாங்கல்களுடன்
சுற்றித்திரிவர்.
செய்த உதவிகளை மறந்து,
பழகிய நாட்களை மறந்து,
பேசிய பாசமொழிகளை மறந்து,
இரகசியங்களை
பரகசியமாக்கிக்கொண்டு
அலைந்துதிரிவர்
நண்பனே, எதிரியாய்.


கவிதைக்கு...

சேனையூர் அ. அச்சுதன்

வசந்தங்கள் எப்போதும்
வீசுவதில்லை
வாழ்த்துக்கள் எல்லாம்
பலிப்பதுமில்லை!

விதைக்கும் விதையெல்லாம்
முளைப்பதுமில்லை
முளைக்கும் பயிரெல்லாம்
விளைவு தருவதுமில்லை
உருவாகும் கருவெல்லாம்
சிசு ஆவது மில்லை
உதயங்கள் மறையாமல்
இருப்பதுமில்லை

கல்விக்கு கரைதனை
கண்டவரில்லை, தமிழ்
கவிதைக்கு யாப்புப்போல்
அழகுவேறொன்றுமில்லை


ஞஎன் வாழ்வின் சொர்க்கம்
 

இளவரசி அருளானந்தம்

அன்பென்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி
அன்பால் அரவணைக்கும் அன்னையாய்
ஆசையாய் கதைகள் சொல்லி உணவூட்டி
மகிழும் பாசமான தந்தையாய்
அறிவுக்கு இலக்கணமாய் நல்ல
பாடம் சொல்லும் ஆசானாய்
தோல்விகளை வென்றெடுக்க தோள்
கொடுக்கும் தோழனாய்
எல்லா சொந்தமும் மொத்தமாக சேர்ந்த
சொர்க்கமாய் என் வாழ்வில்.....

வஞ்சம் இல்லா மனம்,
அதுபோலே முகம்
முகம் பார்த்தால் எல்லாம்
நிறைந்த இன்பங்கள் ஏராளம்
உரிமையாய் பிள்ளை நானும்
முகம் பார்க்க நாளும்
ஆவலாய் வரும் போதெல்லாம்
பாசமழையில் பக்குவப்படுத்தியது
எவ்வளவு ஆனந்தம் அத்தனையும்
சொல்லிட முடியாத அளவில்...

இமயம் தொடுமளவு
இன்னும் இன்னுமாக
அன்புடன் அரவணைத்து
அறிவுரைகள் பல சொல்லிய
உயரிய எண்ணங்கள்,
புதைந்திருந்த அர்த்தங்கள்தான்
எத்தனை...?

பாசத்தில் எத்தனை வடிவங்கள்
அத்தனைக்கும் சொந்தமாய் நீங்கள்
நீங்கள் சுமந்த பரிசுத்தமான
பாசத்தின் வேடம் தாங்கல்
என்றெல்லாம் என் வாழ்வில்
உன்னத உறவாய்....


பசியின் வலை...!

ரோஷான் ஏ. ஜிப்ரி

நீரில் எதிர்நீச்சலுடன்...
விழித்தபடி வலையின் கண்கள்

அசரும் நிமிசங்களிலெல்லாம்
வண்ணத்துப்பூச்சியின் நிறங்களில்
கூடை, கூடையாய்
கனவுகள்!

நங்கூரமிட்டும்
தள்ளாடிக்கொண்டிருக்கிறது தோணி
மீனவனின் குடும்பத்தைப்போல்...

சோர்வு வருகிறகணம்
தரை தட்ட எத்தனிக்கிறது மனசு

சவளை ஊன்றிவலிக்கிற
சாட்டில்
ஓங்கியும் அடித்தாச்சு...
மீனை விரட்டி
சிக்கிய ஒன்றிரண்டும்
ஆமை சப்பிய முட்கூடாய்

இருந்தும்;
ஏதேனும் ஒரு பாடு
மனப்பாரம் குறைக்கும்
புலால் விற்றகாசில்
பொழுது புலர்த்தி
சதாபொழுதை சமாளிக்க!

இடையில் வரவிருக்கும்
பெருநாள் - ஐந்து உசிரின்
புத்தாடை கனவு
வலையின் திறந்த கண்களின் வழியே
பழையபடி கலைந்து சிதறும்...!!
வில்லுக்குளத்தின் படுகைகளில்...!!


லிப்ஸ்டிக்!

யெம் உவைஸ்

ரோஜாவின்
இதழ்களில்
முள்ளின்
தழுவல்..
வடிகிறது
‘ரத்தம்’


அருமைத்தாய

எம். சி. கலீல்

முதுமையின் கோலம்
மூப்படைந்த பருவம்
ஏழ்மையின் சின்னம்
என்தாய் இன்று
தாயின் பெருமையை
தான் அறிவேன்
துன்பங்கள் எதுவுமின்றி
தூய்மையாய் நான்வாழ
என்றும் பாடுபடும்
என்னுயிர் தாய்
மனிதப் புனிதர்
மனதில் நிற்பவர்
அன்புடன் நேசிக்கும்
அருமைத் தாய்


தருவது சுகம்

வாசுகி குணரத்தினம்

கனவுகளின் சுகத்தை
காலைகள் தருவதில்லை
நினைவுகளின் சுகத்தை
நிஜங்கள் தருவதில்லை
வாலிபத்தின் சுகத்தை
வயோதிபம் தருவதில்லை
துணையின் சுகத்தை
தனிமை தருவதில்லை
இன்பத்தின் சுகத்தை
துன்பங்கள் தருவதில்லை
உதயத்தின் சுகத்தை
மறைவுகள் தருவதில்லை
இதயத்தின் சுகத்தை
இருப்பவர் நினைப்பதில்லை


இதனால் தான்!

ஏறாவூர் தாஹிர்

முட்டிக்கைப் பிரமாணம்
முனைவளைவுப் பெட்டிக்குள்
எட்டிப் பிடிக்காத
கிட்டத்தில் உள்ளறையில்
சிற்றறைகள் நான்கமையச்
சிற்றரசாய், இராப்பகலாய்
நாடி, நரம்படக்கி,
நாளங்களை அடுக்கி,
தாள லயம் தவறாமல்
நாள் முழுதும் பணிகொண்டு.....

கல்லாய் சிலவேளை
கரைந்துருகும் வழிமெழுகாய்,
இறுக்கம், முரண்பாடு,
இரக்கம், உடன்பாடு
தர்க்கம், தலைவீக்கம்,
தணிந்து இசைவாக்கம்
கிளைக்குக் கிளைதாவும்
மந்திஇன மதிகொண்டு....
கண்ணீரும் இதனால்தான்!
கல, கலப்பும் இதனால்தான்!
பன்னீரின் நறுமணமும்,
பாசத்தின் பொற்குணமும்,
பகை, பழியின் துர்மணமும்
பண்பாட்டு நகர்வுகளும்,
பகல்வேஷ அதிர்வுகளும்,
விருப்பு, வெறுப்புக்களும்
உதட்டசைவின் மறுப்புகளும்
மறைப்புகளும், முறைப்புகளும்
மானிடத்தில் இதனால்தான்!


என் காதலி!

சலாமா இப்றாகீம்

என் இதயவானில் சிறகடிக்கும்
கோதைக் குயிலின் காதல் கவிதை
தித்திக்கும் தேனமுது!
தெவிட்டாத தெம்மாங்கு!
இன்னும் எடுத்துச் சொல்ல - காற்றை
தூதுவிட்டேன் கம்பனுக்கு

நீர்த்தொட்டியில் நீந்தும் மீன்போல - என்
மனத்தொட்டியில் நீந்தும் மான்விழியாளின்
நடையில் அபிநயம்!
கதையில் கவிநயம்!
இசையில் சுதிநயம்! - கண்
அசைவில் காதல் நயம்!

கண்ணன் கண்ட ராதைபோல
நான் கண்ட கோதைக் குயிலாள்
நிறத்தில் சிவப்புமில்லை! - என்
நெஞ்சம் வெறுக்கும் கறுப்புமில்லை!
நிஜத்தில் நேசப்பிறவி - காதல்
சுகத்தில் தித்திக்கும் தேன்னருவி!

நான்கு குணங்களின் நாயகியாய் வாழும்
நங்கையவள், அழகில்லை! ஆனாலும்,
கண்ணியத்தின் இருப்பிடம்;
கருணையின் பிறப்பிடம்! - ஆதலால்
சீதைக்கு ராமனாய் - அன்பு
கோதைக்கு நான் காதலன்...!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.