லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் சரியாக 75 நாட்களே உள்ள நிலையில் உலகின்
முதலாவது மிகப் புராதன ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்ற கிரேக்கத்தின் ஒலிம்பியா
விளையாட்டரங்கில் ஹெரா தேவாலயத்தில் ஒலிம்பிக் சுடர் ஏற்றும் பாரம்பரிய நிகழ்வு
கடந்த வாரம் நடைபெற்றது.
சூரிய ஒளியினால் இந்த ஒரு மணிநேர தீச்சுடர் ஏற்றப்பட்டது. பல நகரங்களுக்கும்,
தீவுகளுக்கும் ஊடாக எட்டு நாட்களுக்கு இச்சுடர் எடுத்துச் செல்லப்படும். மே 17அம்
திகதி ஏதேன்ஸ¤க்கு கொண்டு வரப்பட்டு இந்த ஒளிச்சுடர் இம்முறை ஒலிம்பிக்கை நடத்தும்
லண்டனிடம் ஒப்படைக்கப்படும்.
ஒலிம்பிக் சுடர் கொண்டு செல்லப்படும் பாதைகள் ஒலிம்பிக் எவ்வாறு நாடுகளையும்,
மக்களையும் ஒன்றுபடுத்துகின்றது என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
எதிர்வரும் ஜுலை மாதம் 27ஆம் திகதி ஒலிம்பிக் திருவிழா நடைபெறும் லண்டன் நகரில்
இதற்கு முன்பும் 1908ம், 1948ம் ஆண்டுகளிலும் மிகவும் கோலாகலமாக ஒலிம்பிக் போட்டிகள்
நடைபெற்றன. சென்ற முறைகளைப் போலல்லாமல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும்
இவ்விளையாட்டு விழா மிகவும் கவர்ச்சிகரமாகவும், பிரமிப்பூட்டும் வகையில் நவீன
வசதிகளுடன் கூடிய விளையாட்டு விழாவாக நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
போட்டிநடைபெறும் நகரங்களில் விளையாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்வதோடு மனித வாழ்க்கை
விழுமியங்களுக்கு ஏற்றவகையில் லண்டன் ஒலிம்பிக் பாக்கிற்கு சூழவுள்ள நகரங்கள்
நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஒலிம்பிக் விழாவுக்கான 500 ஏக்கர் நிலப்பரப்பில் லண்டன் ஒலிம்பிக் நகர்
அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களும்,
ரசிகர்களும், ஒரே முறையில் அமர்ந்து விளையாட்டுப் போட்டிகளை ரசிக்கக் கூடியதாக
பார்வையாளர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு
அறை, விளையாட்டு உபகரணங்களை பாதுகாப்பாக வைக்கக் கூடிய அறைகளும் ஏனைய ஒலிம்பிக்
விழாக்களில் காண முடியாதளவுக்கு பாதுகாப்பாகவும், வசதியாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
லண்டன் ஒலிம்பிக் நகர் அமைந்துள்ள இந்த 500 ஏக்கர் நிலப்பரப்பு முழுவதிலும்
‘ஒலிம்பிக் பார்க்’ என்ற மைதானம் அமைந்துள்ளது. அம் மைதானத்தில் நீச்சல் தடாகம்,
உதைப்பந்தாட்ட மைதானம், மெய்வல்லுநர் போட்டிகளுக்கான மைதானம் என ஆறு மைதானம்
இவ்வொலிம்பிக் பார்க்கிற்குள் நவீன முறையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில்
அமைந்துள்ளன. ஒலிம்பிக் விழாவைக் காண வரும் ரசிகர்களின் நலன் கருதியும், சன
நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் ஒரு போட்டியை ரசித்துவிட்டு மற்றைய போட்டியை
ரசிப்பதற்கு ஓரிரு நிமிடங்களில் ஒலிம்பிக் பார்க்கிக்குள் சுற்றி வர சிறு சிறு
மேம்பாலங்களும், சிறு நடைபாதைகளும் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பா¡துகாப்புத் தொடர்பில் கூடிய கவனம்
செலுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு ரசிகர்களும், விளையாட்டு வீரர்களும் மனச்
சஞ்சலமற்று தங்கள் காரியங்களில் எவ்வித அச்சமும் இன்றி ஈடுபடக் கூடிய வகையில்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
1 இலட்சத்துக்கும் மேற்பட்ட பொலிஸாரும்,
பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஒவ்வொரு 500
அடிகளுக்கிடையிலும் காவலரண்களும், முறைப்பாடுகளை ஏற்கும் இடங்களுமாக பாதுகாப்பு
உச்சநிலையில் உள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர். எனவே ரசிகர்கள்
நிம்மதியாகவும், மன நிறைவுடனும் போட்டிகளைக் கண்டுகளிக்கலாம்.
ஒலிம்பிக் போட்டிகளைக் காணவரும் வெளிநாட்டு ரசிகர்களினதும், உள்நாட்டு
ரசிகர்களினதும் போக்குவரத்து வசதி கருதி இலகுவான பல போக்குவரத்து வசதிகளை ஒலிம்பிக்
ஏற்பாட்டுக்கு குழு செய்துள்ளது. வெளிநகர்களிலிருந்து தனியார் வாகனங்களில் வரும்
ரசிகர்களினதும், விளையாட்டு வீரர்களினதும் வாகனங்கள் லண்டன் ஒலிம்பிக் நகருக்கு
வெளியே நிறுத்திவிட வேண்டும். அதன் பின் ஒலிம்பிக் குழுவால் ஏற்பாடு செய்துள்ள
பொதுப் போக்குவரத்து சேவையை உபயோகப்படுத்த வேண்டும். ரசிகர்கள் பொது போக்குவரத்து
வாகனங்களில் செல்வதற்கு ஒரு முறை அனுமதிச் சீட்டைப் பெற்றாலே போதுமானது. ஒலிம்பிக்
நகருக்குள் எங்கும் போய்வரலாம். இது ஒலிம்பிக் நகருக்குள் வாகன நெரிசலைக்
கட்டுப்படுத்த இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
மேலும் இலண்டன் ஒலிம்பிக் பார்க்கை சுற்றியுள்ள நகர்களில் பல நவீன வசதிகளைக் கொண்டு
நூற்றுக் கணக்கான ஹோட்டல்கள் வெளிநாட்டு ரசிகர்களையும், குறிப்பாக உல்லாசப்
பிரயாணிகளையும் கவரும் வண்ணம் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
1 இலட்சம் அறைகளைக்
கொண்ட நவீன முறையிலமைந்த பல ஹோட்டல்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பாடசாலை
மாணவர்களைக் கவரும் வண்ணம் 30 ஆயிரம் பேர் தங்கக் கூடிய ஹோட்டல் அறைகள் மலிவான
விலையில் கிடைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுவதிலுமிருந்து வரும்
ரசிகர்களையும், உல்லாசப் பயணிகளையும் கவரும் வண்ணம் எல்லா நாட்டு உணவு வகைகளும்
கிடைக்கக் கூடிய எல்லா ஏற்பாடுகளும் இப்போதிருந்தே செய்யப்பட்டு வருகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக ஊடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உலகம்
பூராகவும் இருந்து வரும் ஊடகவியலாளர்களுக்கு நவீன முறையில் ஒலி, ஒளிபரப்புகூடங்கள்
அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.