புத் 64 இல. 20

நந்தன வருடம் சித்திரை மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.ஆகிர் பிறை 21

SUNDAY MAY  13  2012

துடித்துப் போன மனது

துடித்துப் போன மனது
 

சமரபாகு

சீனா உதயகுமார்

எங்கள் ஊரிலுள்ள ஒரு சிலருக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காது. நான் அவர்களைப் பற்றி எந்தவிதமான அவதூறுக் கதைகளும் ஆருக்கும் சொன்னதில்லை. அப்பிடியான ஆளும் நான் இல்லை. என்னை ஒரு கோபக்காரன் என்று மட்டும் எல்லோரும் சொல்லுவார்கள். அதில நிறைய உண்மைகளும் இருந்திருக்கு...!

உருட்டுப் புரட்டுக் கதை கதைப்பவர்களைக் கண்டால் எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது. உடனடியாகவே அவர்களோடு மல்லுக்கட்டி, உரத்துக்கதைத்து அவர்களின் உறவை முறித்துப் போடுவேன். இந்தமாதிரியான எனது நடைமுறைகளைக் கண்டு என் நண்பர்கள் ஒரு சிலர் என்னைப் பேசுவார்கள்.

“உன்னிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்குது சிவா! உப்பிடி ஆரையும் கோவியாதையும்....! ஒருவரை உடனடியாகத் தூக்கி எறிஞ்சு கதையாதையும்...! அது உனக்கு ஆரோக்கியம் இல்லை. வீணாய் நிறைய எதிரிகளைச் சந்திக்கிறதே மிச்சமாயும் இருக்கும்....!” என்று அறிவுரை கூறுவார்கள். “போடா மடயா! உப்பிடியானயவையை எனக்குக் கண்ணிலையும் காட்டக் கூடாது.” நண்பர்களின் நல்ல அட்வைசுக்கு எனது உடனடிப் பதில் இப்படித்தான் எப்பவும் இருக்கும்.

எனக்குப் படிப்பித்த டேவிட் சேர் கதைக்கும் போது சொன்னார். “சிவா.... உன்னைப் போல மற்றவையும் நடக்கோணும் என்று நினையாதையும்....! அவையள் எப்பிடி நடக்கினமோ அதுக்குத்தக்காபோல் நீயும் நடந்து கொள் சரியோ....! இல்லாட்டிப் போனால் விலத்தி நட! அது காணும்....! ஆனால், ஆரோடும் கோவியாதையும்! யாரோடும் முரண்படாதவன் போல் நீயும் பழகிக்கொள்!” என்று அன்புடன் பரிந்துரை செய்வார். இப்படி என்னில் அக்கறை கொண்ட ஒரு சில நல்லவுள்ளங்களும் எனக்காக இருக்கத்தான் செய்தன.

ஏதோ ஒரு பழியை ஒவ்வொரு காலத்திலும் என் மீது திணித்துவிடுவார்கள் என் ஊரிலுள்ளவர்கள். அதில் எந்த உண்மையும் இருக்காது. இது ஊருக்கும் நல்லாத் தெரியும். ஆனாலும் ஊரிலுள்ள ஒரு சிலர் அதை உண்மையாக்கி விடுவதில் சூரர்களாக இருப்பார்கள். அது பெரிய பூதாகரமாக வெளியேறி என்னையே பிடித்து விழுங்குவது போலவும் வந்துவிடுவதுண்டு. இதனால் மனம் உடைந்து ஒதுங்கி இருந்த சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்திருக்கின்றன.

“சிவா என்ர பிள்ளையை பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுaங்களா...” என்று கேட்பார்கள். இவர்களுக்காகப் பெரிய பாடசாலை ஒன்றிற்குச் சென்று அதிபரிடம் கதைப்பேன்! அதற்காக நான், பாடசாலை அதிபருக்கு முன்னால் நின்று, ‘நான் வேலை செய்யும் அலுவலகத்தின் பெயரைச் சொல்லிவிட்டு, என்னைப்பற்றி உள்ள விசயங்களை அறிமுகப் படுத்துவேன். அந்த அறிமுகங்களால் நான் நினைத்துப் போன காரியம் இலகுவாய் நிறைவேறியதும் உண்டு. பிறகு, அந்தப் பிள்ளையைப் பள்ளிக்கூடத்திற்குக் கூட்டிக் கொண்டு போய்ப் பக்குவமாகச் சேர்த்துவிட்டு வந்துவிடுவேன்.

“சிவா...! இந்தாள் வர நேரம் செல்லும் போலக் கிடக்கு...! மதுசன் கடைக்குப் போய் சீமெந்து எடுத்தெண்டு வந்து தாறியள. மேசன் வேலைக்காரர் சீமெந்து அவசரமெண்டு புறுபுறுக்கிறாங்கள்.”

என் வீட்டில் என்ன வேலை இருந்தாலும், அதைத் தள்ளி வைத்து விட்டு மற்றவர்களின் தேவைகளை நிறைவு செய்து விடுவேன். அதனால் மனதுக்கு ஒரு நிம்மதியும் ஏற்படும்.

“சிவாண்ணா இந்தப் பாஸ்போட் போமை ஒருக்கால் நிரப்பித் தாங்கோ....! மற்றது என்னென்ன கொண்டு வரோணும்.”

“சிவாண்ணா மோட்டச்சைக்கிள் ரான்ச போம் ஒண்டு கிடந்தால் தருவியளே...? பொலிசுக்காரன் விடானாம். அண்டைக்கும் ரண்டாயிரம் பைன் கட்டித்தான் இங்கால வந்தனான்.”

என்றெல்லாம் அவசர அவசரமாக என்னிடம் வந்து அலுவல் பெற்றுச் செல்வார்கள் என் ஊரவர்கள். எனக்குத் தெரிந்தவர்கள் என்னை வந்து ஒரு அலுவல் கேட்டுவிட்டார்கள் என்பதற்காக அவர்களுக்காக நானும் எத்தனை பேரிடம் கடமைப்பட முடியும். அப்படிக் கடமைப்பட்டு ஒரு காரியத்தை இவர்களுக்குச் செய்து கொடுத்தால் அதை இவர்கள் நினைக்கத்தான் போறார்களா? தன் தன் காரியம் முடிய மறந்து போற இனம் தானே மனித இனம்! எனக்கென்று ஒரு ஆபத்தோ! அல்லது போனால் ஒரு வைபவமோ நடைபெறும் போது இவர்களில் அனேகமானோர் வரமாட்டார்கள்.

மீண்டும் வேறொரு தேவைக்காக என்னிடம் வருவார்கள். அன்று என் வைபவத்திற்கு வரமுடியாமைக்கான ஒரு காரணத்தைத் தயார்படுத்திச் சொல்லுவார்கள். தங்கள் காரியம் நிறைவேற்றுவதிலேயே குறியாக நடப்பார்கள். பழிவாங்கும் படலம் எனக்கு எப்பவும், யாரிடமும் வந்ததில்லை. வீடு தேடி வந்தவர்களுக்கென்று என்னால் முடிந்த ஒரு காரியத்தை நிறைவேற்றி வைப்பதில் ஒரு திருப்தி! அவ்வளவுதான்.

நான் எந்த நன்மை செய்தாலும் நன்றி சொல்லாத இந்தச் சமூகம், என்னால் செய்ய முடியாத எத்தனையோ தவறான சம்பவங்களை எனக்குத் தெரியாமலேயே முடிச்சுக்கட்டிச் சொல்லிச் சிரித்திருக்கிறார்கள். இதே இவர்கள், பிறகும் என்னிடம் வருவார்கள். முக்கியமும், அவசரமும் என்று சொல்லுவார்கள். பேதை மனிதன்தானே நான்! அவர்கள் என்னை நோக்கி எந்த நோக்கோடு வந்தார்களோ அந்த நோக்கினை நிறைவேற்றி வைத்துவிடுவேன்.

“என்ர பிள்ளையைப் பேக்காட்டிப் பேக்காட்டி அலுவல் பெற எத்தனை பேர் இஞ்சை வருகினம். என்ர பிள்ளையின்ர உயிருக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்கோணும்! என்ர தியலம்பற்றை வீரபத்திரா! என்ர சல்லியவத்தை அம்மாளாச்சி! நீங்கள்தானென என்ர பிள்ளைக்கு ஆபத்தும் ஒன்றும் வராமல் பாதுகாக்கோணும்! எனக்காக அம்மா பல தடவை அழுதிருக்கிறா ‘உவன் பேயன் ஆக்களை அளந்து நடக்கத் தெரியாதவனாகக் கிடக்கு! எல்லாரும் வந்து பேக்காட்டி அலுவல் பெற்றுக்கொண்டு போறாங்கள்... மடயன் கொஞ்சமும் யோசிக்கானாம்’ அப்பா, அடிக்கடி என்னைப் பேசியிருக்கிறார்.

இப்படியாக, என் சகோதரர்கள் என்னோடு முரண் பிடித்திருக்கிறார்கள். அவர்கள் சொல்வது எல்லாம் என் நன்மைக்காகத்தான். ஆனாலும், அவை எவையும் என் காதுகளில் ஏறுவதே இல்லை. எனது மாதச் சம்பளம் எடுக்கும் காலத்தில் வருவார்கள். ஆயிரம்... இரண்டாயிரம்... ஐயாயிரம்.... என்று வாங்கிப் போவார்கள். வாங்கியதோடு சரி. அவை எல்லாம் அறவிடமுடியாக் கடன்கள்தான். என்னிடம் வாங்கிய காசைத் தாங்கோ என்று நானும் கேட்பது கிடையாது. எனது இந்த ஒரு பலவீனத்தால் கடன் பட்டவர்கள் உசாராக உலாவுவார்கள். குடுத்ததைச் சொல்லிக் காட்டுறான் என்று நினைப்பியள். நானும் ஒரு சாதாரண மனிதன் தானே!கடவுள் இல்லையே!என்னிடம் வந்து இலகுவாய் அலுவல் பெற்றுவிட்டு என்னைப்பற்றி இல்லாத குறைகளை இருக்கிறது போல் அளந்து திரிந்தால் ஆருக்குத்தான் கோபம் வராது. இப்படியான ஒவ்வொரு சம்பவத்தாலும் மனதில் விரக்திதான் கோலோச்சும். இப்படியான நேரங்களில் யாருடனும் கலகலப்பாகப் பழக மனம் இடம் கொடுக்காது. அடிக்கடி வானத்தைப் பார்த்து மெளனமாகி இருக்க வேண்டிய ஒரு தேவை எனக்கு இருந்து கொண்டே இருக்கும். பார்ப்பவர்களுக்கும் நான் ஒரு வித்தியாசமானவனாக தோற்றுவேன்.

ஆறு குளங்களில் விழுந்தோ! ஓடும் ரயில் முன்னே படுத்தோ! உயிரை மாய்க்க வேண்டும் போல் மனம் துடிக்கும். என் மீதே எனக்கு வெறுப்பு வரும். பல சம்பவங்களில் அழ வேண்டும் போல் நினைத்து அழுகையினையும் மறுத்து ஒதுக்கியிருக்கிறேன்.

நான் நினைப்பது போல் மற்றவர்கள் நடக்க வேண்டும் என்று நினைப்பதில் நியாயமில்லைதான். என்னுடைய அன்பு மற்றவர்களிடமும் பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் தான். இப்படி நினைத்துக் கொண்டே போனால் நெஞ்சிலும் ஒரு வலி வரும். அந்தக் கணங்களில் வலது கையினால் அழுத்திப் பிடித்து கீழே இருந்து விடுவேன்.

தன்னைப் போல் பிறரையும் நேசி என்ற பக்குவம் எல்லோரிடமும் இருப்பதில்லைதான். பிறர் என்னை நேசிக்கவில்லை என்பதற்காக என்னை நான் ஏன் நொந்து கொள்ள வேண்டும். என் வாழ்க்கை எனக்கு நோகாமல் இருந்தால் அதுவே எனக்குப் போதும். என்றெல்லாம் சமன் முரணாய் மனம் துவண்டு கிழியும். இத்தனை மனச்சுமைகளைத் தாங்கித்தான் நித்திரைக்குப் போவேன். நித்திரைக்கும் எனக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டு செல்லும். வாழ்க்கையே போராட்டம். எனக்கு நித்திரையோடும் ஒரு போராட்டம் இடையிடை ஒரு சில இனிய சம்பவங்கள் எனக்குள் வந்துகொண்டிருக்க கண்களுக்குள் நித்திரை வந்து ஓரளவு நிம்மதி தந்து கொண்டிருக்கும். அதுவும் ஒரு கொஞ்ச நேரங்களுக்குத்தான்.

இன்றும், எனக்கு மிக அவசரமாகவே காலை விழிப்பிருந்தது. துருதுரு என்று எழுந்த நான் காலைக் கடமைகளில் விரைவாக மூழ்கினேன். சாப்பிடக் கூட நேரம் போதாமை கண்டு விறுவிறு என்று அலுவலகம் கிளம்பிவிட்டேன்! அலுவலகம் சேர்ந்த நான் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறேன். ஐந்து நிமிட அலுவலகத் தாமதம் உணர்ந்த நான், நெஞ்சை வருடியபடி என் இருக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன். இருக்கையில் இருந்த எனக்குள் வழிப்பயணம் பற்றிய இயற்கை உணர்வுகள் மீள் ஞாபகம் செய்தன! மனதை நிம்மதியால் நிரப்ப இயற்கை அசைவுகளை மீட்டுப் பார்ப்பதும் ஒரு சந்தோசம்தான்.

நீல நிறப் புல்வெளியாய் நீண்டு விரிந்த கடல்! கடல் வெளியில் மிதக்கும் வள்ளம்! மீன்கள் கொத்திப் பறக்கும் கொக்கினங்கள்! கடலினை மருவி வட்டமிடும் பருந்துகள்! கரையும் காக்கைக் கூட்டங்கள்! இவை மட்டுமா...! வீதி வழிப் பயணிகள் முகம் நோக்கி பறந்து வரும் தும்பிளிக் கூட்டங்கள்! மீன்குஞ்சு வடிவ பறவைகளின் இனிய உல்லாசம்! வலைகளில் சிக்கித் துடிக்கும் மீன்கள்! சிக்கித் துடிக்கும் மீன்களைப் பிரித்தெடுக்கும் மீனவர்! குறுக்கும் நெடுக்குமாய் ஓடி அலையும் நாய்கள்!

இவை எல்லாவற்றையும் ரசித்து வந்த எந்தனின் காலைப்பசி காணாமல் போனது! கண்ணுக்கினிய அத்தனை காட்சிகளின் உச்ச மகிழ்வுடன் எனது அலுவலக இருக்கையில் நான்! அலுவலகக் கடமைகள் கண்ணும் கருத்துமாக அசைந்து நகர்ந்து போயின. அலுவலகத்தில் என்னை எல்லோரும் ஒருவிதமாக நோக்குவதை உணர்கிறேன். திரும்பி அவர்களைப் பார்த்தால் அவர்கள் வேறெங்கோவோ பார்க்கிறது போல் பாவனை செய்கின்றனர். கடமைகளில் கவனமாக மூழ்கும் போது நேரம் அசைவதே தெரிவதில்லை.

மதியம் ஒரு மணி! பசி....! பசி....! என்று வயிறு விறாண்டியது. அரை மணி நேர இடைவெளி எடுத்து என் வீடு நோக்கி நகர்ந்தேன். அரைச்ச கறியுடன் சுறாச்சலுப்பும் கலந்து சாப்பாடு எனக்குக் கிடைக்கும். சோறு மறைத்து கறி ஊறி நிற்க அம்மா சோறு கொண்டு வந்து தருவார். காலை மதியம் இரண்டுக்குமாகச் சேர்த்து ஒரு பிடி பிடிப்பேன் எனும் அவாவுடன் என் பயணம் என் வீடு நோக்கி விரைவாகிக் கொண்டிருந்தது. சாப்பாட்டை நினைக்க நினைக்க வாய் ஊறிக்கொண்டே இருந்தது.

பிள்ளையார் முகப்பு வீதி! வலது கையை குழைத்துப் பிடித்துப் பிள்ளையாரை நினைத்து என் தலையில் மூன்று குட்டுமிட்டு விரைந்தேன்! இடையிடை மணல்! இடையிடை குழாங்கற்கள்! இவைகளைக் கிழித்து ஆடி அசைந்து, மணலில் புதைந்து சரிந்து மெது மெதுவாய் ஊர்ந்தது என் உந்துருளி! கிழக்கிலிருந்து மேற்காக நான்! வடக்கிலிருந்து வரும் ஒழுங்கை வீதி வழியாய் ஓடி வந்தார்கள் சின்னஞ்சிறிய சிறுவர்கள். பள்ளிக்கூடம் விட்டதும் போட்டி போட்டுக்கொண்டு ஓடியிருக்கிறார்கள். ஒழுங்கை வீதியால் ஓடி வந்து தார் போட்ட தெருவில் யார் முதலில் மிதக்கிறது என்ற போட்டியாகத்தான் இருக்க வேணும். அதுதான் இத்தனை வேகமாக ஓடி வந்திருக்கிறார்கள்.

குண்டு வடிவான, மண்டை பெருத்த கறுப்புப் பையன் ஒருவன் முதலாவதாக வந்து என் மோட்டர் சைக்கிளோடு மோதுண்டான். அம்மா...! என்றான். மயக்குற்று குப்புற கிடந்தான்! என் மோட்டார் சைக்கிளை படாரென நிறுத்திவிட்டு மிக வேகமாகச் சென்றேன். அந்தப் பையனைத் தூக்கிக்கொண்டேன். உதிரங்களால் மூடியிருந்தது சின்னவனின் முகம்! பயம் வந்து என்னை ஆட்சி செய்தது. எப்பவும் உறுதியான என் நெஞ்சு. இப்ப மட்டும் கொஞ்சம் தளர்ந்திருந்தது. இருந்தும் நிதானம் இழக்கவில்லை. சின்னவனை தூக்கியபடி அக்கம் பக்கம் என் பார்வைகளால் துளாவினேன். என் கண்களின் வீச்சுக்குள் யாருமே இல்லை!

சற்று நேர இடைவெளி கழித்து “சேர்...!” என்று கூப்பிட்டான் ஒருவன். உடன் திரும்பி யார்? எவர்? என்று பார்த்தேன். அவனை எனக்குத் தெரியாது. என்னைத் தெரியும் என்றான். சின்னவனை அவனிடம் கொடுத்துவிட்டு ‘கெட்டியாகப் பிடியுங்கோ’ என்று சொல்லிக்கொண்டு மோட்டார் சைக்கிளினை ஸ்ராட் செய்தேன். ‘ஏறுங்கோ என்றேன்’ சின்னவனைத் தோள் மீது படுத்தி இதமாக அணைத்தபடி பின் சீற்றில் ஏறி இருந்தான் எனக்கு உதவ வந்த தம்பி. வேகமாய்ப் பறந்து சென்று கொண்டிருந்தது என் உந்துருளி.

“தம்பி...! சின்னவனிடம் கதையைக் கொடுடா.” நான் கதையைத் தொடங்குகிறேன். அவன் அன்புடன் சின்னவனை அருட்டினான். அருண்ட அவன் சொன்னான் “அம்மா வேணும்...! எனக்கு என்ர அம்மா வேணும்...!”

சின்னவனின், அம்மாவுக்கும் தகவல் போனது. சின்னவனோ, “அம்மா வேணும்! எனக்கு என்ர அம்மா வேணும்’” என்று மீண்டும் மீண்டும் வில்லங்கம் பண்ணினான்.

அது அரச ஆசுப்பத்திரி. மிக விரைவாக சின்னவன் அனுமதிக்கப்பட்டான். மிகவும் குழும்பிப் போனேன் நான். அந்த இருக்கையில் இருந்து கொண்டு இரண்டு கைகளாலும் பொத்தியபடி நிலத்தைப் பார்த்துக்கொண்டு தலையை ஒரு உதறு உதறினேன். தலை விறைப்பு எடுபட்டது போல் இருந்தது.

‘நீங்கள் எல்லாரும் வெளியே போங்கோ என்றார் டொக்டர்!’ உள்ளே சென்ற டொக்டர் கதவினை மூடினார். சின்னவன் குழறினான். அந்தச் சத்தம் ஆசுப்பத்திரி எங்கும் ஓங்கி ஒலித்தது போல் இருந்தது. ஒரு கணம் அதிர்ந்து போனது என் மனம்.

“என்ர அம்மா வேணும் எனக்கு என்ர அம்மா வேணும்” சுழன்று கொண்டு அழுதான்! வெளியே என் இருக்கையில் நான். என் அருகில் எனக்கு உதவிய தம்பி! சின்னவன் குழறும் ஓசை கேட்டு என் கண்கள் பனிக்கின்றன!

ஓ என்று அழவேணும் போல் இருந்தது. குடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு குடுக்கும் என்பார்கள். கடவுள் எனக்கு மீண்டும் மீண்டும் மனதைக் கிழித்தெடுக்கும் வேதனைகளைத்தானே தந்து கொண்டிருக்கிறார்.

இந்தமாதிரியான நேரங்களில் எல்லாம் என்னைப் பெத்தெடுத்த அம்மா, அப்பாவைத்தான் பேச வேணும் போல் இருந்தது. என்னத்துக்கு என்னைப் பெத்திருக்கினம். என்னால யாருக்கு என்ன சுகம் இருந்திருக்கிறது. என்னால் சுகம் பெற்றவர்களும் ஆபத்துக்களிலிருந்து என்னால் காப்பாற்றப்பட்டவர்களுமே என்னை உதாசீனமாத் திட்டிக் கதைத்துக் கொண்டு திரியும் போது, எவருக்குமே நான் ஒரு பிரயோசனமற்ற ஜடம் தானே! பிரயோசனமற்ற ஜடம் இருக்கிறதில் அர்த்தம் இல்லைதானே! சாகலாம் போல்தான் இருக்கும்.

ஒரு மணித்தியாலம் கழிந்தன. வண்டிலில் இருந்தபடி சின்னவன் வெளியே வந்தான்! “தலையில் மூன்று இழை போட்டிருக்கு. வலது காலில் இரண்டு இழை போட்டிருக்கு” தாதி ஒருத்தி சொல்லிப் போனாள். இதயத்தை முட்கள் நிறைந்த தண்டு ஒன்றினால் இழுத்தது போல் கனன்று கொண்டேன்!

சின்னவனின் அம்மா வந்து, அழுதாள்! தன் நெஞ்சு குத்தி அழுதாள்! அவளது ஒப்பாரியில் வானமே இடிந்து விழுவது போல் இருந்தது. வன்னிப்போரில் சிக்கித் தவித்துச் சின்னா பின்னாகிப் போனதில் இவள் குடும்பம் ஒன்று. கொல்லும் வெடிமழையில் அகப்பட்டு உருச்சிதைந்து செத்துப் போன புருசனும் மூத்த மகளும் தாய் நினைவில் வர இன்னும் ஊண்டி அழுதாள். அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்கும் போது எனக்கும் நெஞ்சடைத்து அழுகை வந்தது. இருந்த இடத்தில் இருந்து எழும்பி அப்பால் நடந்து போய்க்கொண்டிருந்தேன். தாயின் ஒப்பாரி கலந்த அழுகை கேட்டுக் கொண்டே இருந்தது. என் கண்ணில் இருந்து நீர் இறங்கி கீழே விழுந்துகொண்டிருந்தது.

அன்று நான் சாப்பிடவே இல்லை. நிறையத் தண்ணி குடித்துக் குடித்து தாகம் தீர்த்துக் கொண்டே இருந்தேன்! அலுவலகம் சென்று மேசையில் முகம் புதைத்து இருக்கையில் இருந்து கொண்டேன். இப்பவும் என் சக ஊழியர்கள் என்னை ஏதோ ஒரு விதமாக நோக்குவதையே நான் உணர்ந்து கொள்கிறேன். அன்று பின்நேரம், வீரபத்திரனின் சந்நிதியில் நான் தஞ்சமானேன்! சின்னவனுக்காக இரஞ்சுகிறேன். நெஞ்சைக் கிழித்து, அழுகை முட்டி வந்தது! ஆலமர நிழல் நண்பர்கள் என்னைக் காட்டி காட்டிக் கதைக்கிறார்கள். என்னிடம் நேரடியாகக் கேட்டுவிட நினைக்காமல் தாங்கள் தங்களுக்குள் கதைக்கிறார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். என் உள்காயங்களுக்கான அடையாளங்கள் என் முகத்திலும் மின்னுகின்றன போலும்.

அன்று இரவு நித்திரையும் இல்லை! இரவு பதினொரு மணி. ரெலிபோன் ஒன்று வந்தது. “சேர்... சின்னவன் சத்தி எடுத்தவனாம். எல்லாரும் பயப்படுகினமாம்.” என் கால்கள் உதறின. உள்ளம் நடுங்கியது. இனி உன் உயிர் இருந்தென்ன! என் வாழ்வு நிலை சற்று நிமிடங்களுக்குள் தடம் புரண்டது. அந்த நேரம் நடுச்சாமம்! வீட்டுச் சுவாமி அறையுள் அரை மணி நேர்தியானம்! ஓரளவு மணி அமைதி. இருந்தும் நித்திரைகள் என்னிலிருந்து தூரத் தூரப் போய்க்கொண்டே இருந்தன. அடுத்த நாள் அதிகாலை கோயில் மனி ஓசை! சேவலின் கூவல்! காகத்தின் கரைதல்! குருவிகளின் குதூகலம்! எதுவுமே எனக்குப் பிடிக்கவே இல்லை. அம்மா கொண்டு வந்த தேநீர்! அப்பா சொன்ன அன்றைய கடமைகள்! எதுவுமே எனக்குள் சேரவே இல்லை! தங்கையின் பிள்ளைகள் மீது செல்ல மொழிகள் பேசி கதைக்கவே இல்லை! புதுவித அமைதியான பொழுதாக அன்றைய காலைப்பொழுது நகர்ந்தது. அலுவலகம் போக என் மனம் மறுக்கிறது. விரைவாக சென்று நலம் விசாரித்திட ஆசுப்பத்திரி விரைந்து போனேன்.

ஆசுப்பத்திரியின் வளவு ஒரே மயான அமைதியாகத் தெரிகிறது. மனிதர்கள் ஆரும் ஆருடனும் உரையாடுவதாகத் தெரியவில்லை. உள்ளத்துப் பயம் வீச்சம் பெற உடல் ஒருவித பதற்றத்தை உணர்கிறது. சின்னவன் இருக்கும் கட்டில் அருகே நான் வந்துவிட்டேன். சின்னவன் எழுந்து இருந்து கொண்டிருந்தான். அவனுக்கு வயது ஏழாகத்தான் இருக்க வேண்டும். என்னைக் கண்ட அவன் பின்னர் தாயைப் பார்த்தான். தாய் மென்மையாய்ச் சிரித்தாள். பிறகு என்னைப் பார்த்துச் சிரித்தான். முழுமை அழகு என்னைக் கொள்ளை கொண்டிருந்தது. இலட்சம் புறாக்கள் கூட்டமாக என் நெஞ்சில் பறப்பது போல உணர்ந்தேன்.

“நீங்கள் ஆர் அங்கிள்.” என்றான். மனம் ஆனந்தத்தில் குளித்தது! என் கண்களில் நீர் துளிகள்! அவனைக் கட்டி அணைத்தபடி முத்தமிட்டேன். டொக்டர் வந்து சொன்னார் “கொஞ்ச நேரம் எங்களையே இவன் பயப்புடுத்தி போட்டான்” என்று சின்னவனுக்காக் கொண்டு சென்ற ‘மைலோ மா’, ‘கிaம் பிஸ்கட்’, அப்பிள்’, ‘கண்டோஸ்’ ‘டிப்பி டிப்பி’, எல்லாமே அவன் முன் நீட்டிக் கொடுத்தேன். அதை வாங்க அவன் பின்னடித்தான். பிறகு தாயைப் பார்த்தான். தாய் சிரித்தபடி கண்கள் அசைத்தாள். தாயின் அனுமதியுடன் அதை வாங்கி பிரித்து சாப்பிடத் தொடங்கினான். சாப்பிட்டபடி சொன்னான்.

“அங்கிள் நீங்கள் நல்ல அங்கிள்”

“........................................”

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.