புத் 64 இல. 20

நந்தன வருடம் சித்திரை மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.ஆகிர் பிறை 21

SUNDAY MAY  13  2012

 
தேர்தல் ஏற்பாடென சிலர் தப்புக் கணக்கு!

SLFP புனரமைப்பு பணிகள் அனுராதபுரத்தில் ஆரம்பம்;

தேர்தல் ஏற்பாடென சிலர் தப்புக் கணக்கு!

கட்சி அங்கத்தவர்களது குறைகளை கேட்டறிவதே நோக்கம்

அரச செயற்பாடு தொடர்பாக ஆலோசனைகள், விமர்சனங்களை செவிமடுக்கவும் ஏற்பாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான அமரர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க புனித பிரதேசமான அனுராதபுரத்தில் வைத்தே கட்சியின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த முன்மாதிரியை பின்தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகளையும் அனுராதபுரத்தில் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கினார் என சுதந்திரக் கட்சியின் செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை மாலை அநுராதபுரம் விமான நிலைய வீதியில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சியின் மாவட்ட கிளைக் கட்டிடத்தினை புனரமைப்பு செய்து திறந்து வைத்த பின், கட்சி புனரமைப்பு பணிகளை சுபவேளையில் ஆரம்பித்து வைத்துவிட்டு உரையாற்றுகையில் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:- அநுராதபுர மாவட்டத்தின் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி கேட்டறியப்படும்.

கட்சிக்கு அங்கத்தவர்களைச் சேர்க்கும் நோக்கத்துடனோ ஆதரவாளர்களை திரட்டும் எண்ணத்துடனோ இது முன்னெடுக்கப்படவில்லை. மாறாக மக்களது பிரச்சினைகள் மற்றும் அர சாங்கம் தொடர்பாக அவர்களது ஆலோசனைகள், விமர்சனங்கள் பற்றி அறிந்து கொள்ளவே இவ்வாறான நடவடிக்கையொன்று முன்னெடுக்கப் படுகிறது. கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகளைப் பார்த்து தேர்தல் ஒன்று நடக்கப் போகின்றது என யாரும் தப்புக் கணக்கு போட்டுவிடக் கூடாது.

சக்தி மிக்கதும் கீர்த்தி மிக்கதுமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இந் நாட்டு மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்த நம்பிக்கை வீண் போகக் கூடாது.

இதனடிப்படை யிலேயே கிராமங்கள் தோறும் கட்சியின் கிளை அமைப்புகள் புனரமைக்கப்பட்டு செயற்பாடுகளும் திருப்திகரமாக முன்னெடுக்கப்பட வுள்ளன.

இதற்காக அனைத்து அங்கத்தவர்க ளும் தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்றார். இவ்வைபவத்தில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க, அமைச்சர் திஸ்ஸகரலியத்த ஆகியோர் உரையாற்றியதுடன், அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள், ஆளுநனர்கள், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சி கிளை உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருமள வானோர் கலந்துகொண்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.