புத் 64 இல. 20

நந்தன வருடம் சித்திரை மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.ஆகிர் பிறை 21

SUNDAY MAY  13  2012

சிலையே உயிர்க் கலையே!

சிலையே உயிர்க் கலையே!

ஏகாந்த மாம்அந்த மாலையிலே! - தினம்
எனையாளும் உன்னினைவுச் சோலைகளே! - ஒரு
மீகாம னில்லாமல்
மரக்கலமு மோடாது
அறிவாய் எனைப் புரிவாய்!
*
சொன்ன தெலாம்சொல்லு மந்தக்கிளியே! - உன்
சேவைக் கிங்குயாரு மிணையிலையே! - அடி
என்னவளே உந்தனுக்கு
என்ன விலை யான்தருவேன்
இழந்தேன் உன்னில் கலந்தேன்!
*
எழுத்தாணி உன்கையிலே அடக்கம் - எண்
எழுத்தெல்லாம் உனக்குள்ளே முடக்கம் - பெண்
குலத்திற்கே நீ தலைவி
குணத்தினால் பேரழகி
சகியே தமிழ்க் கவியே!
*
செந்தமிழுக் குன்னாலிங்கு அழகே! - அதால்
சொக்குதடி முழுத் தமிழ் உலகே! - நீ
சிந்துகின்ற வார்த்தையெல்லாம்
சித்திரமாய் பேசுதடி
சிலையே உயிர்க் கலையே!


ஏயெம்தாஜ்

சுண்டியிழுக்கும்
உன் விழிகளுக்குத் தப்பி
சிராய்ப்புக் காயங்களோடு
இத்தனை காலமும்
தலை மறைவாயிருந்தேன்

எந்த
வசீகரத்தைக் கொண்டு
வளைத்துப் பிடித்து
வெளியே எடுத்தாய்?

விறைத்த நெஞ்சுக்கும்
வில் கொண்ட பார்வைக்குமிடையில்
மிக ஆழத்தில் வீழ்ந்தே போனேன்.
இதுவான பிறகும்
எதிரியாய் நினைப்பாயா...?

நிரந்தரமாய்
உனதாயுள்வரை
அன்பாயிருப்பாயா...?
இல்லை;
அம்பாயிருப்பாயா...?

உன் அழகின் வன்முறைகளால்
அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன்
எனக்கு நிவாரணம் கிடைக்குமா...?


ஊருக்குச் செய்தியானவள்

ரிஸானா இல்யாஸ்

உன்னைச் சுற்றிலும்
சகதிகளும் சாக்கடைகளும் தான்
தெரிந்தோ தெரியாமலோ
அடிக்கடி
கடந்து சென்றிருப்பாய்
வீழ்ந்து விடவில்லை
அதில் தோய்ந்து போனதாய்
சமூகத்தின்
சந்தேகப் பார்வைகள் துளைத்தெடுக்க
ஊருக்கு நீ
முக்கிய செய்தியானாய்
ஓர் உளவு நிறுவனமாய்
அது உன்னைத் தொடரும்
அவசரத்துக்கு
எட்டிப்பார்த்தாலும்
கள்ளத் தனமாய்
யாரையோ தேடுவதாய்
அபத்தமாய்
அர்த்தப் படுத்தும்

எனக்குத் தெரியும்
உன் கைகளுக்கு
மருதாணியைத் தான்
போட்டுக் கொண்டாய்
உன் வீடு
மாட்டுக் கொட்டகைக்குப் பக்கத்தில்
இருந்ததாலோ என்னவோ
மாட்டுச் சாணத்தை
ஊற்றிக் கொண்டதாய்

ஒரு முகச்சுளிப்பு
வாசத்தின் வித்தியாசத்தை
இவர்கள் உணர வேண்டாமா?
உனக்குள் நித்திரையில்லை
விடியும் வரை
தினம் தினம்
இரவுகளின் நீளத்தை
உன் விழிகள்
அளந்து பார்க்கும்
உனக்குள்
குமுறிக் குமுறி
அழுகையின் ஒரு
மெளனச் சத்தம்
எனக்குக் கேட்கிறது
எப்போது அது
எரிமலையாய்
வெடித்துச் சிதறும் என்பதை
நீ கூட அறியமாட்டாய்
பண்பட்டவள் நீ
பண்பாடு கெட்டவள் அல்லள்
பொறுத்துக் கொள்
காலத்தின் அசுர வேகம்
சில இமைப் பொழுதுகளில்
உன் கைகளைச்
சிவக்க வைக்கும்
அப்போது புரியும்
நீ இட்டுக் கொண்டது
மருதாணிக் கரைசலைத்தான் என்பதை.


நானும் கடவுளும்

வாசுகி குணரத்தினம்

என் கனவில் அவன் வருவான்
என் உயிரில் அவன் இருப்பான்
அவன் நினைப்பில் நான் இருந்தால்
அதிக துயர் தந்திடுவான்
என் விருப்பில் அவன் துயில்வான்
என் வெறுப்பில் அவன் சிரிப்பான்
என் மதியில் அவன் விதியும்
அவன் விதியில் என் மதியும்
அடிமுடி தேடியிங்கு
அனுதினம் குழம்புகையில்
தெளிவுடன் அவன் சிரிப்பான்.

வேதனையின் விளிம்புக்கென்னை
வேண்டுமென்றே செலுத்திடுவான்
சோதனையால் துடிக்கும் என்னை
சாதனையால் வாழ வைப்பான்
சாந்தியின்றி நான் தவிக்க
சரித்திரமாய் ஆக்கிடவே
சேர்ந்திருப் பேன் உன்னோடு
சேர்த்திடுவாய் புகழ் எனக்கு
என்பதனால் உன்னோடு
இருக்கின்றேன் என உரைப்பான்.

உண்மைகளில் நான் இருப்பேன்
நல்ல உள்ளங்களில் நான் இருப்பேன்
மழலைகளில் நான் சிரிப்பேன்
இரக்கம், அன்பு எல்லாமாய்
இருக்கும் என்னைக் கண்டிடுவாய்
இனித்துயரம் விட்டு நீயும்
அனைத்திலுமே என்னைக் கண்டு
அடைந்திடுவாய் எனை என்பான்.


புழுதி படிந்த ஞாபகங்கள்

அக்கரையூர் யெம். உவைஸ்

கதவிடுக்கில் நசுங்கிய
பல்லியின் வேதனையாய்....
அல்லது.....
ஒரு பாறாங்கல் தவறி
தலை மீதில் வீழ்ந்ததைப் போல்
உன் பிரிதலின் செய்தி....
*
வலிகளும்
வெற்று வார்த்தைகளும் நிரம்பிய
ஒரு கடதாசியை மட்டுமே
எனக்காக விட்டுச் சென்றிருக்கிறாய்....
*
இந்தத் துயரம்
உனக்கு பனி....
எனக்கு உயிர் பிடுங்கும்
மின்னல்.
*
ஓர் அகால மரணத்தைப் போல
சொல்லாமல் கொள்ளாமல் திடீரென
எங்கேயெடி தொலைந்தாய்?
*
காதலில் சொக்கி
எதுவும் பேசாமல்
ஒருவரையொருவர் ரசித்திருந்த
பொழுதுகள்....
என் விரலில் நீ
பதித்திட்ட மோதிரம்.....
எனக்காக நீ நட்டு வைத்த
ஒற்றை ரோஜாச் செடி....
இவை பற்றியெல்லாம் எப்படி
மறந்து போனாய்....?
*
அந்த நிலவும்...
இந்த இரவும்
ஏளனமாய் சிரித்துக் கொள்கிறது
உன் பழைய காதல் லீலைகளை எண்ணி
*
அன்பே......!
நீயுமா
அம்பு...?
*இன்றில்களில்,
புழுதி படிந்த
உன் ஞாபகங்களை
கண்ணீரால் துடைத்துக்கொள்கிறேன்.
*
நீயில்லாத
என் மனக் கொப்பில்
ஓர் அண்டங்காக்கை
எச்சம் பீச்சிப் போகிறது.
*
இணையனைப் பிரிந்த
ஒரு மாடப்புறாவின்
முக்கலும் முனகலும் போல்
ஏதோ சோகத்தை சுமந்த படி
என் வானத்தில்
பறந்து போகிறேன்.


கிடைக்குமா உன் முகவரி

பெறோஜ் எம். பஸ்மீர்

நட்பெனும்
பூங்காவில்
நாமமர்ந்தோம்
நம் காதலை
பரிமாறிக்கொள்ள
ஒவ்வொரு
நிமிடங்களும்
எனக்குள்
இப்போதுதான்
அர்த்தப்படுகின்றன
நாம் நிழலமர்ந்து
ஆரமரப் பேசிய
பல்கலைப்
பூங்கா....

உறங்காத
விழிகளோடு
ஒரு கனம்
முயற்சிக்கிறேன்
மீண்டும் அந்த
பூங்கா நிழலில்
நம் நினைவுகளையாவது
அமர்ந்திடாதா என்று
தவிப்போடு விடிகிறது
என் உறக்கம்

பட்டப்படிப்பிற்காய்
கால்ப்பதித்த போது
காதலெனும்
மூன்றெழுத்தை
உன் காலடியில்தான்
கற்றுக் கொண்டேன்
ஆ.... என்னவளே!
தந்துவிட்டேன்
பிரிவெனும் மூன்றெழுத்தையும்
இணைத்துக் கற்றுக்கொள்ள

நாமிருவரும்
தொலைபேசியில்
அடிக்கடி
பரிமாறிக் கொண்டதை
நினைவிருக்கிறதா...?

என்னவளே!
விதி எழுதிய
வாக்கியத்தையும் கூட
குருந்தகவலாய்
அனுப்ப மறந்துவிட்டேன்
மன்னித்துவிடு
மறுபடியும் கிடைக்குமா?
சூரியன் ஒரு முறைதான்
அஸ்தமிக்குமா?

உம் முகம் மறந்து
தெருவெல்லாம்
தேடி, அலைகிறேன்
உம் முகவரிக்காய்
கிடைக்குமா
என் ஆத்மா
கல்லறை செல்லும் முன்?


பிரிவும் துயரும்!
 

இப்றாஹீம் நத்வீ

என் இதய மகனே,
இன்றுடன் நீ மறைந்து
இருவருடங்களாகின்றன
இன்னும் உன் பூமுகம்
என் இதயத்தில்
நிலவாய் ஒளிர்கிறது
உன்பார்வை
மின்போல் இலங்குகிறது
உன் புத்தகங்களும் கொப்பிகளும்
எனைப்பார்த்து புன்னகைக்கின்றன.

வானத்திற்கு ஓட்டையுண்டு
அதனாற்றான் மழை
பூமியில் பொழிகிறது
ஆனால், என் இதயத்திற்கு
ஓட்டைகள் இல்லை.
அதனாற்றான் என் கவலை மழை
இதயத்தினுள்ளே பொழிகிறது.

இப்போது நானுன்னை
உன் நண்பர்களில் பார்க்கிறேன்.
நீ ஓயெலில் சித்தியடைந்து
ஒரு வாரத்திலேயே- நீ
பயணம் செய்து விட்டாய்
பதினாறு வயது வரை
உன் பாதம் பட்ட வீடு
உன் பிரிவால் வாடுகிறது
என் செவிகளில் உன் பேச்சு
இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது

இறை செயலை என்னென்பேன்
‘வன் செயலும் அவன் செயல்’ என்ற
இறைத்தத்துவத்தைக் கொண்டு
கவலையை அடக்கும் மலையானேன்
மலை வேகமாய்ச் சுற்றுகிறது
ஆனால் அது நமக்குத் தெரிவதில்லை!
நீ உன் சகோதரனுடன்
இறை இன்பம் பெற்று
‘பிர்தவ்ஸ்’ சொர்க்கத்தில் வாழ்க!
என் கனவில் வந்தாவது
உன் சொர்க்க வாழ்வைச் சொல்க!
அதனால் என்னிதயம்
சந்தோஷமடையும்!!!


பனித்துளி

அஷ்ரபா அலிறிஷாப்

இரவுகள் தோறும்
நிலவு சிந்தும் கண்ணீர்
இருட்டு மட்டும் அறிந்த
ஒரு தொடர்கதை.....

அங்கே
சிதறிய துளிகள்
விடியலில் பனித்துளிகளாக
புதிய பரிணாமம்
தன்னை மறைத்த வண்ணம்...

புற்களில்
குடியிருக்கும் போது கூட
சுமையாக அல்லாமல்
சூரியனுக்கு
தன் கற்பை
தாரை வார்க்கும்...

மீண்டும் இப்படியே
தொடரும்
இரவு நாடகம்....

வித்தியாசமான
வாழ்க்கை வட்டம்
விடியல்களை
தொலைத்த வண்ணம்
புரியவில்லையே
எதற்காகத் தானோ......


இதயந்தொ ட்டார் !

மெளலவி எம்.எச். எம். புஹாரி

தினகரனின் வாரமலர் விரித்த போது
தேனுண்ட உணர்வுற்றேன்; ஸஹாப்தீன் காக்கா.
எனுமெந்தன் இதயத்தில் என்றுமுள்ள
இன்குணத்துப் பெருமகனைக் கண்டே னங்கே;
கனதியுடன் இஸ்லாமும் இலக்கியமும்
கண்களெனக் கொண்ட அவர் காதையினை
கனிவாக வரைந்த ‘அஜீ’ கட்டு ரையைக்
கண்குளிர வாசித்துக் களிப்படைந்தேன்
*
தோல்விக்கும் அவர்கடையில் நுழையுந்தோறும்
தொண்டினரும் கலைஞருமே வீற்றிருப்பர்;
நூலியற்றும் எழுத்தாளர் பேச்சா ளர்கள்
நுண்ணறிவுப் பெரியார்கள் நிறைந்திருப்பர்;
ஆள்கின்ற மன்றத்தின் உறுப்பினர்கள்
ஆத்மீகப் பெரியார்கள் அமர்ந்திருப்பர்;
தோற்கடையோ துலங்குமொரு கலையகமாய்!
துடிப்புடனே உபசரிப்பார் ஸஹாப்தீன் காக்கா
*
இலக்கியத்தில் எனைத்தூக்கிவிட்ட காக்கா
எப்போதும் என்கவிகள் நயக்கும் காக்கா
இலக்கியத்துப் பேரறிஞர் பலரை யிங்கு
இந்தியநாட் டிருந்தழைத்துப் பேசவைத்து
இலக்கியமும் இஸ்லாமும் வளர்த்த காக்கா!
ஏற்றமுடன் அவர்சிறப்பைச் செப்புகின்ற
இலக்கியத்துச் சுவைசொட்டும் கட்டுரையை
இசைவாக ‘அஜீ’ யெழுதி இதயந் தோட்டார்.


ஷகீ எம். நஜ்முதீன்

பணக்கார பித்தர்களின்
பத்திரத்தில்
வரையப்படுகின்ற
வரதட்சணை அத்துமீறி
ஏழ்மை வாழ்விலும்
முற்களாய் குத்துகின்றன!

முதிர் கன்னியென
முத்திரை குத்தப்பட்டு
முடக்கி நிற்கிறாள்
சீதனமற்ற
ஒரு திருமணத்திற்காய்...!

விலைபோகும்
துணையர்களால்
தூரமாகிக் கொண்டனர்
திருமணமற்ற
விதவைகள் பலர்
தம் தேசம் விட்டு

சீதனப் பித்தர்களின்
சிற்பம்
ஏழ்மை கன்னியர்
மீதென்பதற்காய்
ஏறுகின்றனர் விமானம்
சுகமான வாழ்வின்
சுவரொட்டிகளாய்...!

சீதனத் துயரம்
எளியோர் தலையில்
எழுதப்படுவதால்
தாங்கிடாது
தவம் கொண்டனர்
தனிமையான
வாழ்விற்காய்...!
ஓரமாய் நிற்கும்
முதிர் கன்னிகளின்
கற்பு காத்திட
துறந்து வா
உன்
வறட்டு கெளரவ
வரதட்சணை களைந்து

வறண்டு போகும்
ஏழ்மைக் கன்னிகளின்
கண்ணீரையாவது
துடைத்தெறிய
துணிந்து வா மனிதா
சீர்கேட்டை அகற்றி வா

ஊனக் கோட்பாட்டில்
துயிலும்
உன் உணர்வுகளை
உடைத்தெறி
மனிதா
ஏழ்மையின் துயரம்
தூரமாகட்டும்....


திறமையை தூசுதட்டு

- ஏரூர் முகைதீன் -
அடுப்பங் கரையே அகிலமாய்
அழு மூஞ்சியே கோலமாய்...
ஆடவனின் அடிமையாய்
அகப்பட்டு தவிப்பவளே...

அழ மட்டும்
உனக்கு சொல்லிக்
கொடுத்தது யாரு
அன்பு சுரக்கும் உனக்குள்
கண்ணீரின் சுரப்பே அதிகம்...

இல்லறத்தை இயக்கும்
இல்லத்தரசியாகி
இல்லானுக்கு இன்பம் வழங்கி
தேய்ந்தே போனவளே...

உலகின் சரித்திரத்தையே
புரட்டிப் போடும் திறமை
உனக்குள்
தூசு பட்டுக் கிடக்கிறது...

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.